கிறிஸ்து பிறப்பின் சிறந்த பரிசு

உலகில் பல்வேறு நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், 18 நாடுகளில் எந்த விதமான வழிகளிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதில்லை.
கிறிஸ்து பிறப்பின் சிறந்த பரிசு
கிறிஸ்து பிறப்பின் சிறந்த பரிசு

கரோனா பெருந்தொற்றின் துயரிலிருந்து மெல்ல மீளும் உலகின் பல நாடுகள், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவான கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே கிறிஸ்துவர்கள் பலரும் இந்த பண்டிகைக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கி விடுவார்கள். வீடுகளின் வாசலில் இயேசுவின் வருகையை குறிக்கும் வகையில் நட்சத்திரங்களைக் கட்டித் தொங்க விடுவது, அவரது பிறப்பைச் சித்திரிக்கும் சொரூபங்களுடன் (சிலைகள்) குடில்களை அமைத்தல், கிறிஸ்துமஸ் கேரல்ஸ் (பாடல்கள்) பாடுவது, சான்டா கிளாஸ் வேடமணிவது, கிறிஸ்துமஸ் மரங்களை அமைப்பது, கேக் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வர். 

உலகின் பல நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை பல்வேறு வகையில் கொண்டாடப்படுகிறது. ஆனால், இதே பூமிப் பந்தில் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றாத சில நாடுகள் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதோ அங்கீகரிப்பதோ இல்லை. இந்த நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பொது விடுமுறையும் விடுவதில்லை.

உலகில் குறைந்தது 40 நாடுகளில் பொது விடுமுறை கிடையாது. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட  நாடுகளில் கிறிஸ்துமஸ் மரம் வைத்தல் உள்ளிட்ட சில விஷயங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது. ஆனால் உலகில் உள்ள 18 நாடுகளில் எந்த விதமான வழிகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதே இல்லை.

ஆப்கானிஸ்தான்: இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடு. பல ஆண்டுகளாக கிறிஸ்துவ மதத்துடனும், அவர்களது விடுமுறைகளிலும் குழப்பமான உறவே நீடித்து வந்தது. கடந்த 1990-களில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதே இல்லை.

அல்ஜீரியா: இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடான அல்ஜீரியா, கிறிஸ்துவர்கள் அதிகம் வாழும் நாடான பிரான்ஸிடம் இருந்து கடந்த 1962-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அப்போது முதல் அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படுவது இல்லை.

பூடான்: நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே இங்கு  கிறிஸ்துவர்கள் வசிக்கின்றனர். புத்த மதத்தை முதன்மையானதாக பார்க்கும் பூடானியர்களின் நாள்காட்டிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை இடம்பெறுவது இல்லை. 

புரூனே: எண்ணெய் வளம் கொழிக்கும் இந்த இஸ்லாமிய தேசத்தில், கிறிஸ்துமஸ் கொண்டாடப் பொதுமக்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 5 வருட சிறைத் தண்டனை அல்லது 20 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

அதே நேரத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் அவர்களது சொந்த சமயத்தினருடன் விழாக்களை கொண்டாடலாம். இஸ்லாமியர்களுடன் கொண்டாடக் கூடாது. அந்த நாட்டின் மத விவகாரத் துறை அமைச்சக விதிகளின்படி, கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆடம்பரமாகவும், வெளியிடங்களிலும் கொண்டாட அனுமதிப்பது இஸ்லாம் மதத்துக்கு தீங்கு விளைவிக்கும் என கருதப்படுகிறது.

சீனா: சீனாவில் கிறிஸ்துமஸ் ஒரு வழக்கமான வேலை நாள். அன்றைய தினம் அங்கு பள்ளிகள், அலுவலகங்கள் செயல்படும். கடைகள் அனைத்துமே திறந்திருக்கும். சீனா அதிகாரபூர்வமாக மதச்சார்பற்ற அரசாக இருப்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகை இங்கு முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

கமோரஸ் (Comoros): இந்தியப் பெருங்கடலில் தீவுகள் நிறைந்த பகுதியான இங்கு 98 சதவீதம் ஷன்னி பிரிவு இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடு. பொதுவெளிகளில் கிறிஸ்துவத்தைப் பின்பற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. 

லிபியா: இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதில்லை. அதற்கு பதிலாக அந்த நாட்டின் சுதந்திர தினம் (டிச.24) கொண்டாடப்படுகிறது.

மொரிஷானியா (Mauritania): இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இந்த நாட்டின் எல்லைகளில் மிகக் குறைவான அளவில் கிறிஸ்துவர்கள் வசிக்கின்றனர். ஆனால் இந்நாடு அவர்களை அங்கீகரிக்கவில்லை.

மங்கோலியா: புத்த மதத்தைப் பின்பற்றும் நாடான இங்கு ஒருசில கிறிஸ்துவர்கள் வசித்து வந்தாலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகப் பொது விடுமுறை எதுவும் அளிப்பது இல்லை.

வட கொரியா: வெளிநாட்டவர்கள் ஒரு சிலர் இருந்தாலும், கம்யூனிஸ்ட் கோட்பாடுகளுடன் கடவுள் மறுப்பை ஏற்றுக்கொண்டது இந்த நாடு. எனவே கிறிஸ்துமஸ் உள்ளிட்டவை இங்கு சட்டப்படி செல்லாதவை.

பாகிஸ்தான்: மிகக் குறைந்த எண்ணிக்கையில் கிறிஸ்துவர்கள் வசிக்கின்றனர். ஆனால் நாட்டில் கொண்டாட்டங்களில் ஈடுபடும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் டிசம்பர் 25-ஆம் தேதி பாகிஸ்தானில் பொது விடுமுறை தினமாகும். அந்நாட்டின் தேசத் தந்தையான முகமது அலி ஜின்னாவின் பிறந்த நாளை நினைவு கூறுகின்ற தினமாக அது கடைப்பிடிக்கப்படுகிறது. 

ஷர்வி அராப் டெமாக்ரட்டிக் ரிபப்ளிக் (Sharwi Arab Democratic Republic) : இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இந்த நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவது இல்லை.

சௌதி அரேபியா: கிறிஸ்துமஸ் மரம் வைத்தல் மற்றும் கிறிஸ்துமஸ் தொடர்பான விழாக்கள் 10 ஆண்டுகளாக இங்கு தடை செய்யப்பட்டுள்ளது.

சோமாலியா: ஷரியா சட்டம் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கிறிஸ்துவ பண்டிகைகள் நாட்டின் இஸ்லாமிய மத நம்பிக்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தஜிகிஸ்தான்: முன்னாள் சோவியத் நாடான இங்கு கிறிஸ்துமஸ் மரம் வைத்தல், பள்ளிகளில் பரிசுப் பொருள்கள் வழங்குவது சட்டவிரோதமாகும். 

துனிசியா: இங்கு கிறிஸ்துமஸுக்குத் தடை இல்லை. ஆனால் துனிசியாவில், எந்தப் பொது கொண்டாட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவது இல்லை. வழக்கமான வேலை நாள்களாகவே அவை இருக்கும்.

உஸ்பெஸ்கிஸ்தான்: இங்கு 10 சதவீதம் பேர் ஈஸ்டர்ன் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்துவர்களாக இருந்தாலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவது இல்லை. கிறிஸ்துமஸைப் போல புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

ஏமன்: போரினால் பாதிக்கப்பட்ட நாடான ஏமனில் 10 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவது இல்லை.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட கரோனா நோய்த் தொற்று, ஆண்டு முழுவதும் இந்த உலகைத் தனது கட்டுக்குள் கொண்டு வந்தது. நோய்த் தொற்றின் தாக்கம், உயிரிழப்புகள், பொருளாதார சரிவு உள்ளிட்டவற்றைக் கண்ட உலகம் செய்வதறியாது திணறியது.

உலக நாடுகள்தோறும் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்க நடைமுறைகளால், மக்களின் இயல்பு வாழ்க்கை அந்நியமானது. அடுத்தடுத்த நிகழ்ந்த நிகழ்வுகளும், மரணங்களும் பொதுமக்களுக்கு வாழ்க்கை மீதான அச்சத்தை ஏற்படுத்தின. இந்த நிலையில் இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் உலகில் கொண்டாடப்படும் இதுபோன்ற கொண்டாட்டங்கள் சற்று ஆறுதலானது என்றாலும் சுய கட்டுப்பாடுகளும், கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதும் நமது இன்றியமையாத கடமையாகிறது.

முதல் உலகப் போரில் ஜெர்மானியப் படைகளும், அதனை எதிர்த்த பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த வீரர்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பெரிதும் கண்டுகொள்ளாமல் போரில் ஈடுபட்டு வந்தனர்.  திடீரென ஜெர்மானியப் படை பக்கத்திலிருந்து வந்த கிறிஸ்துமஸ் கேரல்ஸ் பாடல்களைக் கேட்ட பிரிட்டிஷ் படையினர் ஆரம்பத்தில் அவற்றை ஒரு போர் யுக்தியாகவே கருதினர். பின்னர் ஏற்பட்ட தற்காலிக சண்டை நிறுத்தத்தைத் தொடர்ந்து இருதரப்பு வீரர்களும் பரஸ்பரம் தங்களிடமிருந்த சிகரெட், உணவு உள்ளிட்டவற்றை கிறிஸ்துமஸ் பரிசுப் பொருளாக பரிமாறிக் கொண்டனர். அதே போல கால்பந்து விளையாடியும், முடிகளை வெட்டி சரிசெய்தும் கொண்டனர். அதேபோல இந்த போரின்போது இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டனர்.

எனவே, தற்போது உலகம் சந்தித்துள்ள கரோனா தொற்று போன்ற பெருந்தொற்றுக் காலத்திலிருந்து உலகில் எதுவும் நிச்சயமில்லை என்பதை நன்றாக உணர்ந்த பிறகாவது இயேசு நாதர் இந்த உலகுக்கு போதித்த அன்பையும் சமாதானத்தையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதே இந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பால் நமக்கு கிடைத்த சிறந்த பரிசாக இருக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com