இயேசு பிறந்தார், அதிசயங்கள் தொடங்கின

அதிசயம் நடக்க உங்கள் இருவரின் நல்ல உள்ளங்களே காரணம். உங்களின் பரஸ்பர அன்பும் தியாகமும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும்தான் இறைவன் அருளால் இந்த அதிசயத்தை நிகழ்த்தியது.
பிறந்தார் இயேசு!
பிறந்தார் இயேசு!

பிறவியிலேயே பார்வையின்றிப் பிறந்துவிட்டான் ஜோசப். இருந்தாலும்கூட அவனுக்கு அகக் கண் உண்டு.

ஜோசப்புக்குத் தாய் தந்தை இல்லை. தாத்தா மட்டும்தான். ஓர் ஆண்டுக்கு முன் ஒருநாள் நள்ளிரவில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது ஜோசப் திடீரென எழுந்து தாத்தா ரூபனை உசுப்பினான்.

‘தாத்தா வீடு இடிந்துவிழப் போகிறது. என்னை உடனே வெளியே தூக்கிக் கொண்டு செல்லுங்கள்’ என்றான்.

தாத்தா தாமதிக்கவில்லை. ஜோசப்பைத் தூக்கிக்கொண்டு அவர் வெளியே ஓடிய மறுகணம் அந்த பழங்கால வீடு பொலபொலவென இடிந்து விழுந்தது. வீடு இடிந்தபோது தாத்தாவின் காலில் ஒரு மரத்துண்டு விழுந்து அவரது கால் ஊனமாகி விட்டது. ஓராண்டுக்கு முன் நடந்த பழைய கதை இது.

இன்றும் அதேபோல ஒரு நள்ளிரவுதான். மந்தைகளைக் காவல் காக்கும் வேலையில் தாத்தா ஈடுபட்டிருந்தார். அவருக்குப் பேச்சுத்துணையாக ஜோசப் கூடாரம் அமைத்துக் கணப்பு நெருப்பு வளர்த்து, மந்தைகளை சாமக்காவல் காத்துக்கொண்டிருந்தான். அந்த கடுங்குளிரில் கணப்பு நெருப்பு இதமாக இருந்தது. அது அணைந்துபோனால் ஓநாய்க் கூட்டம் வந்து ஆடுகளைத் தூக்கிச் சென்று விடும். குறிப்பாக ஜோசப்பின் செல்ல ஆட்டுக்குட்டியான திதியோனை ஒருவேளை ஓநாய் தூக்கிக்கொண்டு போகலாம்.

எனவே, இருவரும் தூங்காமல் விழித்தபடி இருந்தார்கள். ஜோசப்புக்கு விழித்திருப்பதும் கண்களை மூடிக் கொள்வதும் ஒன்றுதான். அவன்தான் பிறவியிலேயே பார்வையற்றவனாயிற்றே.

நேரம் நள்ளிரவு நேரம். ஜோசப் அவனது செல்ல ஆட்டுக்குட்டியை அணைத்தபடி உட்கார்ந்திருந்தான். ஏதோ ஓர் இனம்புரியாத உணர்ச்சி அவனை ஆட்கொண்டது. ஏதோ ஓர் அதிசயம் நடக்கப்போவதைப் போல அவனது உள்ளுணர்வு கூறியது.

ஜோசப்புக்கு உறக்கம் வரவில்லை. தாத்தாவிடம் வானத்தில் நட்சத்திரங்களைப் பார்க்கும்படி கூறினான். ஜோசப்புக்குத் தாத்தாதான் கண்கள். அவர்தான் சூரியன், நிலா, விண்மீன்கள், நீரோடை, மலை, நதி ஆகியவற்றின் அழகை ஜோசப்புக்கு வர்ணிப்பார்.

இப்போது ஜோசப் கேட்டுக்கொண்டபடி தாத்தா வானத்தைப் பார்த்தார். அது குளிர்காலம் என்றாலும் கோடைக் காலம் போல வானத்தில் விண்மீன்கள் பளிச்சிட்டன. அவை வழக்கத்தைவிட பளபளவென ஒளிர்வதைப் போல அவருக்குத் தோன்றியது.

‘வானத்து விண்மீன்கள் இத்தனை அழகாக மின்னி இதுவரை நான் பார்த்த்தில்லை’ என்று ஜோசப்பிடம் அவர் கூறினார். அருகில் இருந்த வேறு சில மேய்ப்பர்களையும் அழைத்து அவர்களையும் விண்மீன்களைப் பார்க்கச் சொன்னார். வானம் ஏதோ ஓர் அதிசய நிகழ்ச்சிக்குத் தயாராவதைப் போல தோன்றியது.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. வானில் திடீரென ஒளிபடர்ந்தது. மிக பிரகாசமான வெளிச்சம் அது. அந்த வெளிச்சத்தில் தேவ தூதர்களின் உருவங்கள் தோன்றின. வானுக்கும் மண்ணுக்கும் இடையே அவர்கள் நிற்பதைப் போலத் தோன்றியது. மிகப் பெரிய சிறகுகளை விரித்துக் கொண்டு சில தேவ தூதர்கள் வானத்தில் அங்குமிங்கும் பறந்தனர்.

மற்றோர் அணியினர் வானில் தோன்றி எக்காளங்களை ஊதினர். அதன் பின்னணியில் தேவலோக இன்னிசை கேட்டது. மேய்ப்பர்கள் அப்படியொரு தேவநாதத்தை அதுவரை கேட்டதில்லை. தாங்கள் காண்பதும் கேட்பதும் கனவா அல்லது நனவா என்று அவர்கள் திகைத்துப் போய் நின்றார்கள்.

இனிமையான அந்த இசை வானத்தையும் பூமியையும் நிறைத்துக் கொண்டிருந்தது. ஜோசப் இப்போது எழுந்து நின்றான். அவனுக்குக் கண் தெரியாது என்பதால் காதால் அந்த இன்னிசையை மிகத் துல்லியமாகக் கேட்டான். அவனது உடல் புல்லரித்தது.

அப்போது வானில் புதிதாக ஒரு தேவதூதர் தோன்றியது ஜோசப்பின் மனக்கண்ணில் தெரிந்தது.

‘அஞ்சாதீர்கள், உங்களுக்கு ஒரு நற்செய்தி. உலகை இரட்சிக்கப் போகும் மீட்பர் இங்கே பெத்லகேம் என்ற ஊரில் பிறந்திருக்கிறார். அவரது பிறப்பால் மண்ணுலகம் மகிழ்ச்சியடையும். அவரைக் கண்டு வணங்கி வழிபடுங்கள். இப்படியே சென்றால். மாட்டுத் தொழுவத்தில் முன்னிட்டியில் அவரைக் கிடத்தியிருப்பார்கள். அதுவே உங்களுக்கு அடையாளம்’ என்றார் தேவதூதர்.

‘என்ன, மாட்டுத் தொழுவத்தில் மன்னர் பிறந்திருக்கிறாரா?’ மேய்ப்பர்களுக்கு அது புதிதாக இருந்தாலும், அவர்கள் கேள்வி எதுவும் கேட்கவில்லை. தேவதூதர் சொன்னதை அப்படியே நம்பி தேவபாலனை வழிபடத் தயாரானார்கள்.

தேவதூதரின் அறிவிப்பையடுத்து வானதூதர்களின் திரள் இறைவனை மீண்டும் துதிபாடி விட்டு மறைந்தது. ‘வாருங்கள் நாம் உடனே பெத்லகேம் போய், புதிதாகப் பிறந்த மீட்பரை வணங்கி வழிபடலாம்’ என்றார்கள் மேய்ப்பர்கள். மந்தைகளை அப்படி அப்படியே விட்டுவிட்டு அவர்கள் பெத்லகேம் புறப்பட ஆயத்தமானார்கள்.

ஜோசப்பும் அவனது செல்ல ஆட்டுக்குட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு புறப்படத் தயாரானான். ‘தாத்தா, நாமும் பெத்லகேம் போகலாம். இன்றைய இரவு தெய்விக இரவு. ஆகவே நமது ஆடுகளுக்கு எந்த ஆபத்தும் வராது. என் மனக் கண்ணில் அது தெரிகிறது’ என்றான் அவன்.

தாத்தா ரூபன், பேரனின் பேச்சை மீறவில்லை. அவருக்கும் புதிய மீட்பரைப் பார்க்க வேண்டும் என்று ஆசைதான். எனவே தோல்பையில் குடிநீரை ஊற்றி, ரொட்டிகளைப் பொட்டலமாகக் கட்டிக் கொண்டார். ஊன்றுகோலைக் கையில் எடுத்துக்கொண்டு மறுகையில் கைத்தாங்கலாக ஜோசப்பைப் பிடித்துக் கொண்டு அவர் கிளம்பிவிட்டார். ஜோசப் அவனது செல்ல ஆட்டுக்குட்டியைத் தோளில் போட்டுக் கொண்டான்.

இந்த நிலையில் அவர்களுக்கு முன்னால் சென்ற மேய்ப்பர்களுக்கு மீட்பரைக்  காண மிகுந்த ஆவல் போலிருக்கிறது. அவர்கள் மிக விரைவாக நடந்து கொண்டிருந்தார்கள். கால் ஊனமான தாத்தாவாலும் கண் பார்வையற்ற ஜோசப்பாலும் அவர்களை எட்டிப்பிடிக்க முடியவில்லை.

மேய்ப்பர்கள் கண்ணில் இருந்து மறைந்துவிட்டாலும், பேரன் ஜோசப்பை கையில் பிடித்தபடி மெல்ல மெல்ல பெத்லகேம் நோக்கி முன்னேறினார் தாத்தா ரூபன்.

நீண்ட நேரத்துக்குப் பின், ஒருவழியாக பெத்லகேம் நகரில் இருந்த ஒரு மாட்டுத் தொழுவத்தின் அருகே அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.

தொழுவத்தின் வாசலில் தாடியுடன் ஒருவர் இருந்தார். அவர்தான் புதிதாகப் பிறந்த மீட்பரின் தந்தை போலிருக்கிறது. இவர்கள் இருவரையும் அன்பொழுக வரவேற்று கொட்டிலின் உள்ளே அவர் அழைத்துச் சென்றார்

‘உன் பேர் என்ன?’ என்று ஜோப்பிடம் அவர் அன்பாக விசாரித்தார். ஜோசப் அவனது பெயரைச் சொன்னதும் அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. ‘என் பெயர் கூட அதுதான்’ என்றார்.

கொட்டிலின் உள்ளே ஒரு பெண்ணும், புதிதாகப் பிறந்த குழந்தையும் இருந்தார்கள். தேவதூதர் கூறியதைப் போல அந்தக் குழந்தை கந்தைத் துணிகளால் பொதியப்பட்டு முன்னிட்டியில் கிடத்தப்பட்டிருந்தது.

ஜோசப் அந்தப் பெண்ணிடம், ‘அம்மா, மன்னர் இந்த மாட்டுத்தொழுவத்தில் பிறந்திருப்பதாகத் தேவதூதர்கள் சொன்னார்கள். நான் மன்னர்கள் யாரையும் இதுவரை பார்த்ததில்லை. என்னால் பார்க்கவும் முடியாது. எனக்கு பார்வைத் திறன் கிடையாது. ஆனால் புதிய மன்னரைப் பார்க்க எனக்கு ஆசையாக இருக்கிறது. மன்னரின் முகத்தை நான் தொட்டுப் பார்க்கலாமா?’ என்று கேட்டான்.

அந்தப் பெண்மணி புன்னகைத்தார். பிறகு சொன்னார். ‘தாராளமாகத் தொட்டுப் பார்க்கலாம். ஆனால், என் குழந்தை இப்போதுதான் பிறந்திருக்கிறது. எனவே பத்திரமாகத் தொட்டுப் பார்க்க வேண்டும். சரியா?’

இவ்வாறு சொன்ன அந்தப் பெண்மணி, ஜோசப்பின் கையைப் பிடித்து குழந்தையின் முகத்தைத் தொட வைத்தார். ஜோசப் அந்த குழந்தையின் முகத்தைத் தடவிப் பார்த்தான். இனம் புரியாத ஓர் இன்ப உணர்வு அவனுக்குள் பாய்ந்தது. ‘இதுபோன்ற ஓர் இன்ப உணர்வு எப்போதுமே எனக்கு ஏற்பட்டதில்லை’ என்று மனதுக்குள் அவன் கூறிக்கொண்டான்.

பிறகு தனது தோளில் கிடந்த ஆட்டுக்குட்டியை எடுத்து அந்தப் பெண்மணியிடம் நீட்டினான். ‘மீட்பருக்கு இது என் அன்புப் பரிசு’ என்றான். அந்தப் பெண்மணி மீண்டும் புன்னகைத்தார்.

‘உன் ஆட்டுக்குட்டியைக் கொடுத்து விட்டாயா? பதிலுக்கு இந்தக் குழந்தையும் நீ கேட்கும் ஒன்றை உனக்குக் கொடுக்கப் போகிறது. உனக்கு என்ன வேண்டும் என்று கேள்’

ஜோசப் யோசிக்கவில்லை. ‘என் தாத்தாவின் கால் ஊனமாக இருக்கிறது. அவரது கால் சுகமாக வேண்டும். அப்போதுதான் அவர் என்னை மீண்டும் தோளில் தூக்கிக்கொண்டு போக முடியும். மலைப்பாதைகளில் நடக்க அவர் மிகவும் துன்பப்படுகிறார்’ என்றான்.

இப்போது தாத்தா ரூபன் குறுக்கிட்டார். ‘அம்மணி. அவன் சொல்வதைக் கேட்காதீர்கள். அவன் சிறுகுழந்தை. அவனுக்கு ஒன்றும் தெரியாது. அவனுக்குக் கண்பார்வையைக் கொடுக்க முடியும் என்றால் கொடுங்கள். அவன்  வாழ வேண்டியவன். நான் வயது முதிர்ந்த கிழவன். இனிமேல் எனது கால் ஊனம் சரியாகி என்ன ஆகிவிடப் போகிறது?’ என்றார்.

அந்தப் பெண்மணி பேசவில்லை. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.

ஜோசப்பும் தாத்தாவும் புறப்படத் தயாரானார்கள். அப்போது அந்தப் பெண்மணி ஜோசப் தந்த ஆட்டுக்குட்டியை மீண்டும் அவனிடமே கொடுத்துவிட்டார். ‘இந்த குட்டி ஆட்டைப் பார்த்துக் கொள்ள எனக்கு நேரம் இருக்காது. குழந்தையைப் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கும். எனவே இந்தக் குட்டி ஆட்டை நீயே வளர்த்து வா. என் குழந்தை வளர்ந்து பெரியவனானதும் கொண்டு வா.  அப்போது இந்த ஆட்டை நான் பெற்றுக் கொள்கிறேன்’ என்றார் அந்தப் பெண்மணி.

ஜோசப், அந்தப் பெண்மணியிடம் விடைபெற்றுக் கொண்டு தாத்தாவுடன் தொழுவத்தின் வாசலுக்கு வந்தான். வாசலில் நின்ற குழந்தையின் தந்தை, தாத்தா அவரது கையில் வைத்திருந்த நைந்து போன கைத்தடியைப் பார்த்தார்.

‘ஐயா, உங்கள் ஊன்றுகோல் மிகவும் பழையதாக இருக்கிறது. அதை  என்னிடம் கொடுத்துவிட்டு எனது புதிய இந்தக் கைத்தடியைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்றார். தாத்தா ரூபனும் அதை ஏற்றுக்கொண்டார். கைத்தடிகள் இரண்டும் கைமாறின.

தாத்தாவும் ஜோசப்பும் இப்போது மந்தையைக் காவல் காத்துக்கொண்டிருந்த இடம் நோக்கி நடந்தார்கள். நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. இருவரும் ஒற்றையடிப் பாதை வழியே நடந்து மந்தை இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

ஜோசப், கூடாரத்தில் படுத்துக் கொண்டான். ஆனால் அவனுக்குத் தூக்கமே வரவில்லை. குழந்தையின் மென்மையான முகமும் பெண்மணியின் இனிமையான பேச்சும் அவனது நினைவில் நிழலாடின. கூடாரத்தை விட்டு வெளியே வந்து தாத்தாவின் மடியில் படுத்துக்கொண்ட ஜோசப், அப்படியே தூங்கிப் போனான்.

காலையில் பொழுது புலர்ந்ததும் கண் விழித்தான் ஜோசப். அவனது வாய் ஆச்சரியத்தில் அப்படியே விரிந்தது. நீலவானம் தெரிந்தது. வெள்ளை மேகங்கள் தெரிந்தன. பச்சைப்பட்டு விரித்தது போல புல்வெளி தெரிந்தது. கம்பளி மூட்டைகள் போல ஆடுகள் மேய்வது தெரிந்தது. நீல நீரோடை தெரிந்தது. பறவைகள் தெரிந்தன.

ஆம். அவனுக்குப் பார்வை வந்துவிட்டது. ஜோசப், ஆவலாகத் தாத்தாவைத் தேடினான். அவர் கம்பீரமாக எழுந்து நின்றுகொண்டிருந்தார். அவரது காலில் இருந்த ஊனம் காணாமல் போயிருந்தது. ஏதோ அதிசயம் நடந்திருப்பதை இருவரும் புரிந்துகொண்டார்கள்.

‘தாத்தா, நாம் உடனே பெத்லகேம் போய் அங்கு பிறந்திருக்கும் குழந்தையை மீண்டும் பார்க்க வேண்டும். அந்தப் பெண்மணிக்கும், குழந்தையின் அப்பாவுக்கும் நன்றி சொல்ல வேண்டும்’ என்றான் ஜோசப்.

‘ஆம், தனது கைத்தடியை எனக்குப் பரிசாகத் தந்து அனுப்பினாரே அந்த குழந்தையின் தந்தை. அவரது கருணை உள்ளத்தால்தான் எனக்கு மீண்டும் கால் கிடைத்திருக்கிறது. அவரிடம் இந்த கைத்தடியைத் திருப்பித்தர வேண்டும்’ என்றார் தாத்தா.

அவர்கள் இருவரும் போட்டிபோட்டுக் கொண்டு ஓட்டமாய் ஓடி பெத்லகேம் போய்ச் சேர்ந்தார்கள். குழந்தையைக் குடிலில் கண்டு வணங்கினார்கள். குழந்தையின் தந்தைக்கும் தாய்க்கும் நன்றி சொன்னார்கள்.

அந்தப் பெண்மணி ஜோசப்பின் கன்னத்தில் இதமாக முத்தமிட்டுச் சொன்னார். ‘இந்த அதிசயம் நடக்க உங்கள் இருவரின் நல்ல உள்ளங்களே காரணம். உங்களின் பரஸ்பர அன்பும் தியாகமும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும்தான் இறைவன் அருளால் இந்த அதிசயத்தை நிகழ்த்தியது’ என்றார் அவர்.

‘அமைதியாக உங்கள் இல்லம் செல்லுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்.

ஜோசப்பும் தாத்தாவும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள்.

+

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com