அனைத்து சமய, சமூக மக்களும் வழிபடும் ஆவூர் அன்னை பெரியநாயகி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 300 ஆண்டுகளையும் கடந்த வரலாற்றைக் கொண்டது இயேசு சபையினரின் ஆவூர் பெரியநாயகி அன்னை தேவாலயம்.
ஆவூர் பெரியநாயகி அன்னை தேவாலயம்
ஆவூர் பெரியநாயகி அன்னை தேவாலயம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 300 ஆண்டுகளையும் கடந்த வரலாற்றைக் கொண்டது இயேசு சபையினரின் ஆவூர் பெரியநாயகி அன்னை தேவாலயம்.

இந்தப் பகுதியின் அனைத்து சமய, சமூக மக்களும் கூடி வழிபடும் பொது தேவாலயமாகத் திகழ்கிறது என்பது அன்னை பெரியநாயகியின்  சிறப்பு.

திருச்சியிலிருந்து வந்தால் 20 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து வந்தால் 42 கி.மீ. தொலைவிலும் இந்தத் தேவாலயம் அமைந்துள்ளது.

1697 இல் இயேசு சபையைச் சேர்ந்த, பிற்காலத்தில் சஞ்சீவிநாதர் என்றழைக்கப்பட்ட, வெனான்ஸியுஸ் புட்சே என்ற பாதிரியாரால் இங்குள்ள தோப்பில் சிறிய அளவிலான மரியன்னை ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு 1716 இல் தொண்டைமான் மன்னருக்கும் நாயக்கர்களுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரால் இந்தத் தேவாலயம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்தப் பகுதி மக்களின் உதவியுடன் கீற்றால் வேயப்பட்ட சிறிய தேவாலயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

1732 இல் வீரமாமுனிவர் என்றழைக்கப்பட்ட பெஸ்கி பாதிரியார் இங்கு பங்குத் தந்தையாகப் பணியாற்றியுள்ளார். அவரைத் தொடர்ந்து 1746 இல் மதுராந்தக சுவாமிகள் என்றழைக்கப்பட்ட தாமஸ் கிளமெண்ட் தொமாசினி என்ற பாதிரியாரால் தேவாலயம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

அதன் பிறகும், 1747இல் மராட்டிய படை வீரர்களால் தேவாலயம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 10ஆம் நாள் இப்போதுள்ள தேவாலயத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

1750இல் தேவாலயப் பணிகள் முடிந்து விண்ணேற்பு செய்து அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் மரியன்னை தேவாலயமாக இருந்ததை, வீரமாமுனிவர் தான் தமிழில் பெயர்த்து, பெரிய நாயகி அன்னையாக மாற்றியிருக்கிறார். வீரமா முனிவருக்கும் இங்கே சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. பெருவிழாக்களின்போது இழுக்கப்படும் தேருக்கான நிலை உள்ளது. தேவாலயத்துக்கு அருகேயே 100 அடி உயரக் கொடி மரமும் அண்மையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

சிலுவை வடிவில் கட்டப்பட்டுள்ள இந்தத் தேவாலயத்தின் முகப்பு 242 அடி உயரம் கொண்டது. 28 அடி அகலமும் 28 அடி உயரமும் கொண்டது. 8 தூண்களால் 56 அடி உயரத்தில் குவிமாடம் தாங்கப்பட்டிருக்கிறது.

தேவாலய கொடிமரம்
தேவாலய கொடிமரம்

ஆண்டுதோறும் ஈஸ்டர் பெருவிழா இங்கு பிரசித்தம். சுற்றுவட்டார கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் திரள்கிறார்கள். ஆவூர் பாஸ்கா என்ற புகழ்மிக்க சிலுவைப்பாடு நாடகம் இங்கு களைகட்டும். அனைத்து சமய மக்களும் இதில் பங்கேற்கிறார்கள்.

அதேபோல, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு விழாவும் தேவாலயத்தின் சார்பிலேயே நடத்தப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான காளைகள் சீறிப் பாயும் இந்த நிகழ்ச்சியிலும், சுற்றுவட்டார மாடுபிடி வீீரர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகிறார்கள்.

இப்படி பெரியநாயகி அன்னை, ஒரு கிராம தெய்வமாக ஆவூர் சுற்றுவட்டார மக்களுக்கு விளங்கி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com