

உ ன் உயரத்துக்கும், நிறத்துக்கும் சினிமாவுக்கு சென்று விடு என பார்க்கிற எல்லோரும் சொல்லுவார்கள். அது இப்போது என்னையும் ஹீரோவாக்கி இருக்கிறது. பஞ்ச் டயலாக் பேசி அதிரடி ஆக்ஷன் செய்து மக்களை இம்சை செய்ய விருப்பமில்லை. இயல்பான கதைக்கு நாயகனாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இப்போது முடிந்திருக்கிற "வம்சம்' படமும் அதே மாதிரியான ஒரு கதை தான். ஆர்வமும் வேகமுமாக பேசுகிறார் அருள்நிதி. முதல்வர் கருணாநிதியின் பேரன். மு.க.தமிழரசுவின் மகன்.
சகோதரர்கள் சினிமா தயாரிப்பில் இருக்க, உங்களுக்கு மட்டும் ஏன் நடிப்பு ஆசை?
"நியாயத் தாரசு', "கோபுர வாசலிலே' என அப்பா தயாரித்த படங்களில் டைட்டில் கார்டுக்கு முன் பாட்டி சிலைக்கு என்னைத்தான் பூ போடச் சொல்லுவார்கள். கேமிரா, புதுப் புது ஆள்கள் என பார்த்துமே பயம் வந்து அழுது கொண்டே அம்மாவிடம் ஓடி விடுவேன். எதையாவது சொல்லி சமாதானப்படுத்தி பூ போடச் சொல்லுவார்கள்; அப்படி பார்க்கப் போனால் 20 வருஷத்துக்கு முன்னாடியே கேமிரா எனக்கு பழக்கமாகியிருக்கிறது. கண்ணை மூடி பிடித்த பாட்டைக் கேட்டால், அப்படியே அந்தப் பாட்டோடு லயித்துப் போய் விடுவோம். அப்படித்தான் எனக்கு சினிமாவும். சின்ன வயதிலிருந்து சினிமாதான் கனவு எனச் சொல்லி எல்லோரையும் போரடிக்க விருப்பமில்லை. திடீர் என வந்ததுதான் சினிமா ஆசை. இதற்கு நான் மட்டும்தான் பொறுப்பு.
மு.க.முத்து, ஸ்டாலினுக்குப் பின் சினிமாவுக்கு வரும் உங்களை உங்க தாத்தா (முதல்வர் கருணாநிதி) எப்படி பார்க்கிறார்?
தாத்தா கஷ்டப்பட்ட காலங்களை புத்தகங்களில் படிச்சிருக்கேன். 13 வயதிலிருந்து போராடியிருக்கார். இப்பவும் போராட்டம் இருக்கிறது. எங்க குடும்பத்தின் அடையாளம் எல்லாம் தாத்தா தான். சினிமாவில் நடிக்க போகிறேன் என சொன்னதும் தலையைத் தொட்டு நல்லது, நடி. நல்ல படங்களாப் பார்த்துக் கொள் என்றார். தேங்க்ஸ் தாத்தா.
சினிமாவில் நடிப்பது பற்றி உங்களது தந்தை தமிழரசு, பெரியப்பாக்கள் எல்லாம் என்ன சொன்னார்கள்?
மீடியா வெளிச்சம் இல்லாத மனிதர் எங்க அப்பா. ஏன் எங்க அப்பா இப்படி இருக்கிறார் எனச் சில நேரங்களில் தோன்றும். அவருக்கு என ஒரு உலகம் இருக்கிறது. அந்த உலகத்தில் எல்லாமே நான்தான். சினிமா ஆசையை நான் சொன்னதும், இன்னைக்கு சினிமா, நாளைக்கு அரசியலுக்கு போய்டுவியான்னு அப்பாவியாகக் கேட்டார். பின் சினிமா ஆசையை புரிந்து கொண்டு சம்மதம் தந்து விட்டார். பழகுகிற எல்லோரும் எப்படி இவ்வளவு யதார்த்தமாக இருக்கிறாய் அருள் என்று கேட்கிறார்கள். அப்பாவின் எளிமை எனக்கும் வந்தது பெருமையாக இருக்கிறது. சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு நிறைய அனுபவம் தேவை. அதை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்றார் அழகிரி பெரியப்பா.
வம்சம் எப்படி வந்திருக்கு? பருத்தி வீரன் மாதிரி கனமான கதையாமே?
கமல் படம் வந்தால் கமல் ரசிகனாகவும், ரஜினி படம் வந்துதும் ரஜினி ரசிகனாகவும் மாறிவிடும் சாதாரண ரசிகன் நான். சினிமாவை எடை போட்டு பார்க்கின்ற பக்குவம் இல்லாமலேயே நிறைய படங்களைப் பார்த்திருக்கேன். நீங்கள் சொல்கிற பருத்தி வீரன், தேவர் மகன் என சில படங்களை பார்ப்பதற்கு இப்போதும் ஆசை இருக்கிறது. வம்சம் எப்படி வந்திருக்கிறது என நீங்கள்தான் பார்த்து விட்டுச் சொல்ல வேண்டும். வித்தியாசம் என சொல்லுகிற விஷயங்கள் எல்லாமே இருக்கிறது.
முதல் நாள் படப்பிடிப்பு எப்படி இருந்தது?
இது ஒரு வியாபார ரீதியிலான படம். பருத்தி வீரனும் அதே மாதிரியான படம்தானே. முதல் நாள். முதல் ஷாட். அப்படியே பைக் ஒட்டிக்கிட்டு வர்றீங்கன்னு இயக்குநர் பாண்டிராஜ் சொன்னதும், அப்போதுதான் எனக்கு பைக் ஓட்டத் தெரியாத விஷயமே புரிந்தது. அப்பா என்னை பைக் பக்கமே விட மாட்டார். கஷ்டப்பட்டு ஓட்டி விடலாம் என ஏறி ஓட்டினால் சறுக்கி விழுந்து விட்டேன். ஷூட்டிங் பார்க்க வந்த அப்பா கண் கலங்கி நின்றார். அதுதான் என் அப்பா. (மோகனா ஆட்டோ மொபைல்ஸ் என்ற பெயரில் இரண்டு பைக் கடைகளை தமிழரசு வைத்துள்ளார் என்பது வேறு தகவல்).
பெரியப்பாக்கள் மு.க.முத்து, ஸ்டாலின் நடித்த படங்களை பார்த்ததுண்டா? யார் நடிப்பு பிடிக்கும்?
பார்த்திருக்கிறேன். ஸ்டாலின் பெரியப்பா மூன்று படங்களில் நடித்திருக்கிறார். "ஒரே இரத்தம்' என்று ஒரு படம் ஸ்டாலின் பெரியப்பா நடித்தில் மிகவும் பிடிக்கும். சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். இப்போது பார்ப்பதில்லை. முத்து பெரியப்பா படங்களை நிறைய தடவை பார்த்திருக்கிறேன். இருவரின் நடிப்பும் பிடிக்கும். அடுத்தது உதயநிதி அண்ணனும் நடிக்க வருகிறார். அவரது நடிப்பை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
குடும்பத்தினர் எல்லோரும் ஒன்றாக டிரெய்லர் பார்த்தார்களாமே?
ஸ்டாலின் பெரியப்பா, செல்வி அத்தை, உதயநிதி அண்ணன், தயாநிதி அழகிரி அண்ணன் என எல்லோருக்கும் டிரெய்லர் காண்பித்தேன். பெரிய திரையில் உன்னை பார்க்க ஆர்வமாக இருக்கேன் என கட்டி தழுவினார் பெரியப்பா ஸ்டாலின். நல்லாருக்குய்யா, ஆனா படம் முழுசா கருப்பாவே இருப்பியான்னார் தாத்தா. தாத்தா இந்த படத்தில் நான் மறவன் கேரக்டரில் வருகிறேன் என்றேன். ஏன் சிகப்பு மறவன் இருக்க மாட்டானா என்று அங்கேயும் தன் பாணியில் கிண்டலடித்து எல்லோரையும் சிரிக்க வைத்தார் தாத்தா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.