
லக்ஷிகா நிறுவனம் தயாரிக்கும் படம் "அவர்களும், இவர்களும்'. கதாநாயகனாக விமல் நடராஜன் என்பவர் அறிமுகமாகிறார். மற்றொரு கதாநாயகனாக "அழகி', 'சொல்ல மறந்த கதை', "ஒன்பது ரூபாய் நோட்டு' ஆகிய படங்களில் நடித்த சதீஷ் நடிக்கிறார். கதாநாயகிகளாக ஐஸ்வர்யா, சுப்ரஜா நடிக்கிறார்கள். இயக்குநர் அகத்தியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். "வான்மதி,' "காதல் கோட்டை', "கோகுலத்தில் சீதை' உள்ளிட்ட படங்களில் அகத்தியனிடம் உதவியாளராக பணியாற்றிய வீரபாண்டியன் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
படத்தை பற்றி அவர் கூறியதாவது:
""காதல்தான் படத்தின் கரு. அதை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். காதலில் இளம் தலைமுறையினர் எடுக்கும் முடிவுகள் அவர்களின் வாழ்க்கையை எப்படி கட்டமைக்கிறது? பெற்றோர்கள் முடிவு இல்லாமல் ஜெயிக்கும் காதலின் நிலை எப்படி இருக்கிறது? என்பதற்கு விடையாக இந்தப் படம் இருக்கும். காதல் தவறா... சரியா.... என்பதை விட, அதில் எடுக்கும் முடிவுதான் முக்கியம் என சொல்லப் போகிறேன். வெவ்வேறு சூழல்களிலிருந்து வரும் இரு காதல் ஜோடிகள் ஓரிடத்தில் சந்திக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள்; அதிலிருந்து மீள அவர்கள் எடுக்கும் முடிவுகள் என விறுவிறுப்பான திரைக்கதை படத்துக்கு பக்க பலமாக இருக்கும்'' என்றார்.
பாடல்கள் - பழனிபாரதி, நா.முத்துக்குமார், சினேகன். இசை - ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு - அகர் செங்குட்டுவன், தயாரிப்பு - சி.காமராசு.