தெருவிலா படத்தை போட்டுக் காட்ட முடியும்? தங்கர்பச்சானின் தார்மிகக் குமுறல்!

எல்லா மனித மனங்களும் நூறு சதவீதம் சரியானது அல்ல. சரி, தவறுகள் கலந்ததுதான் இந்த
Updated on
2 min read

""எல்லா மனித மனங்களும் நூறு சதவீதம் சரியானது அல்ல. சரி, தவறுகள் கலந்ததுதான் இந்த வாழ்க்கை. இடத்துக்குத் தகுந்தவாறு தவறுகளை அனுமதிக்கிறார்கள். நிறைய பேர் அதிக குற்றங்களுக்குள் சிக்கி கொள்கிறார்கள். சிலர் கொஞ்சமாகத் தவறுகள் செய்துவிட்டு விழிக்கிறார்கள். குற்றவாளிகள் குற்றவாளிகள்தாம். இதுதான் "அம்மாவின் கைப்பேசி'யில் நான் சொல்ல வரும் செய்தி. பட வெளியீட்டின் பரபரப்புகளுக்கிடையே மனம் திறக்கிறார் இயக்குநர் தங்கர்பச்சான். தமிழ் சினிமாவின் நம்பகமான படைப்பாளி.

""வெற்றி, தோல்வி மாறி மாறி கிடைத்தாலும், ஒரே மாதிரியான களம், எதார்த்தம் இந்த மாதிரியே பயணிக்கிறீர்களே. ஸ்டார் நடிகர்களுக்கு ஒரு கதை சொல்லிப் பார்த்தால் என்ன?''

""என்னிடம் இல்லாத கதைகளா? ஆயிரம் இருக்கிறது. கேட்பதற்கு யார் தயார்? ஆனால் என் பாணி சினிமாக்களிலிருந்து நிச்சயம் வெளியே வர மாட்டேன். அந்த சூழல் வந்தால் நான் சினிமாவிலேயே இருக்க மாட்டேன். பண்ருட்டி பக்கம் பத்திரக்கோட்டையில் விவசாய பூமி இருக்கிறது. அதுவே போதுமென இருந்து விடுவேன்.''

""ஏன் இந்த வறட்டுப் பிடிவாதம்?''

"" கதைகளே இல்லாத கமர்ஷியல் சினிமாக்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. எது எதையோ கதையாக்க நான் சினிமாவுக்கு வரவில்லை. இலக்கியங்கள்தாம் மனித வாழ்வின் உண்மையான பதிவு என நம்புகிறவன் நான். அப்படிப்பட்ட பதிவுகளைத்தான் நான் சினிமாவுக்கு எடுத்து வருகிறேன். மொத்த பட்ஜெட்டில் பாதிக்கு மேல் நடிகருக்குக் கொடுத்துவிட்டு, தொழிலாளர்களின் வயிற்றில் அடித்துவிட்டு எடுக்கிற படங்கள் எனக்கு வேண்டாம்.''

""அடிப்படையில் சினிமா ஒரு வியாபாரம்தானே? நஷ்டத்துக்கா படமெடுக்க முடியும்?''

 ""இந்த ஆண்டு இதுவரை 160 படங்கள் ரிலீஸ் ஆகியிருப்பதாகச் சொல்லுகிறார்கள். தமிழ் சினிமா வரலாறு பார்க்காத விஷயம் இது. இருந்தும் என்ன பயன்? விரல் விடும் எண்ணிக்கையில்தான் படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அப்படியென்றால் மற்றவை எல்லாம் கலைப் படமா? கமர்ஷியல் சினிமாக்கள் மட்டுமேதான் வெற்றியடைகின்றன என்றால், இந்த வருடத்தில் வெற்றிப் பட்டியலில் ஒரு கமர்ஷியல் சினிமா கூட இல்லையே, ஏன்?''

""வியாபார ரீதியாக வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையில்தான் பெரிய நடிகர்களை வைத்து, அதிகப் பொருள்செலவில் படமெடுக்கிறார்கள். அதைக் குறை சொல்ல முடியுமா?''

  ""மக்களின் பணத்தை மட்டுமே குறி வைத்து எடுக்கிற படங்கள் சமூகத்துக்குக் கேடானது. அதற்குச் சாராயம் விற்றுப் பிழைக்கலாம். ஒரு ஸ்டார் நடிகரை வைத்து எடுக்கப்படும் படத்தின் செலவில், நான் பத்து படங்களை எடுத்து விடுவேன். ஸ்டார் படங்களின் டிக்கெட்டுகள் நியாயமான முறையில் விற்கப்படுவதில்லை. அப்படி வரும் காசு தயாரிப்பாளர்களுக்கு செல்வதும் இல்லை. என்ன கொடுமைங்க இது?''

""எதார்த்தங்களை இழந்து நிற்கும் சினிமாக்களுக்குதான் பெரிய வரவேற்பு இருக்கிறது. முதல் மூன்று நாள்களிலேயே போட்ட பணத்தை எடுத்து விடும் லாவகம் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. இங்கே சரியான படைப்பாளிகளுக்கு வேலை இருக்கிறதா?''

 ""மொழி, கலாசாரம், பண்பாடு போன்ற அடையாளங்களை இழந்து நிற்கிற படங்கள்தான் இங்கு அதிகம். என்னை மாதிரி சிலர் ஏதோ முயற்சி செய்தாலும் அங்கீகாரம் இல்லை. என் படம் வந்து ஐந்து வருடங்கள் ஆகி விட்டன. முதலீடு செய்யவும், நடிக்கவும், படங்களை வாங்கவும் ஆள்கள் இல்லை. இதெல்லாம் பிடித்து படத்தை முடித்தால் தியேட்டர் இல்லை. தியேட்டர் கிடைத்தால், திருட்டு வி.சி.டி வந்து விடுகிறது. இதுதான் உண்மையான படைப்பாளிகளுக்கு இந்த சமூகம் கொடுக்கிற பரிசு. நலிந்த விவசாயி போல் ஆகி விட்டான், உண்மையான படைப்பாளி. நம் அடையாளங்களை இழந்து விட்டு நிற்கிற சினிமாக்கள், நம் சமூகத்தின் கேவலம்.

""இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? இதற்கு என்னதான் தீர்வு?''

 ""வருடத்தில் 36 வாரங்களில் தமிழ்ப் படங்களை மட்டுமே திரையிட வேண்டும் என்ற அரசாணை இருந்தது. ஆனால் சில தியேட்டர்களை ஹிந்தி படங்களும், ஆங்கில படங்களும்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றன. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத கொடுமை இது. மாநில மொழி படங்களை திரையிட இடம் இல்லை. அப்படியே இருந்தாலும் பெரிய நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் தியேட்டர்களை மொத்தம் குத்தகைக்கு எடுத்தும் சிறிய தயாரிப்பாளர்களின் குரல்வளையை நெரிக்கின்றன. என் படத்தைத் தெருவிலா போட்டுக் காட்ட முடியும்? எங்கே போய் சொல்லுவது? குறிப்பிட்ட நபர்களின் படங்கள்தான் இப்போதும் தியேட்டர்களை ஆக்கிரமித்து வைத்திருக்கின்றன. சினிமா சார்ந்த சங்கங்கள் செயல்படுவதே இல்லை. இதெல்லாம்தான் காரணங்கள்.

""அம்மாவின் கைப்பேசி?''

""என் எல்லா கதைகளிலுமே உண்மையைச் சொல்லியிருக்கிறேன். மனித வாழ்வியல்பைப் பேசியிருக்கிறேன். இதுவும் அது மாதிரிதான். உணர்வுகளால் மட்டுமே மனித மனங்களைத் தொட முடியும். கவர்ச்சி, ஆக்ஷனை மட்டுமே ரசிக்க ரசிகர்கள் தயாரில்லை. அதைத் தாண்டி நல்ல படங்களை எப்போதுமே ஆதரித்து வந்திருக்கிறார்கள். மரபுகளை உடைத்து, பகட்டு படங்களை ஓரம் கட்டி, வெற்றி கண்டது "அழகி'. அதுபோல்தான் இந்தப் படமும் இருக்கும். இது நிச்சயம் சாத்தியப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் தன் மகனுக்காக காத்திருக்கும் ஒரு தாயின் ஏக்கம், அன்பு, பாசம் எல்லாவற்றையும் பார்க்கப் போகிறீர்கள். மறந்து போன கிராமத்தை, இழந்த அம்மாவின் பாசத்தை நினைவுபடுத்தி நிற்க வைக்கும் இந்தப் படம். ஆரம்பத்தில் நான் சொன்னதைப் போல் எல்லோரும் குற்றவாளி என்ற வெளியே வருவீர்கள்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com