எழுத்தாளர் கமலா சடகோபன் காலமானார்

எழுத்தாளரும் திரைப்பட இயக்குநர், கதை, வசனகர்த்தாவுமான சித்ராலயா கோபுவின் மனைவியுமான கமலா சடகோபன் (77) சென்னையில் புதன்கிழமை காலமானார்.
எழுத்தாளர் கமலா சடகோபன் காலமானார்

எழுத்தாளரும் திரைப்பட இயக்குநர், கதை, வசனகர்த்தாவுமான சித்ராலயா கோபுவின் மனைவியுமான கமலா சடகோபன் (77) சென்னையில் புதன்கிழமை காலமானார்.

சென்னை அடையாறில் வசித்து வந்த கமலா சடகோபன், உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலமானார்.

முதல்வர் இரங்கல்: கமலா சடகோபனின் மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த கமலா சடகோபன், சுதந்திரப் போராட்ட வீராங்கனை வை.மு.கோதைநாயகி அம்மாள் நடத்திய "ஜகன்மோகனி' பத்திரிகையில் துணை ஆசிரியராக தன்னுடைய எழுத்துப் பணியைத் தொடங்கினார். "கதவு', "படிகள்', "அகல் விளக்குகள்', "சுவர்', "கிராமத்துப் பறவை' உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள், ஏராளமான சிறு கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இதில் "படிகள்' நாவலுக்காக 1981-ம் ஆண்டு தமிழக அரசு சார்பாக சிறந்த நாவலாசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய பல நாவல்கள் தொலைக்காட்சித் தொடர்களாக வெளிவந்துள்ளன. "மங்கையர் மலர்' இதழில் நீண்ட காலம் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

இவருடயை பல நாவல்கள் மாணவர்களின் முனைவர் பட்டத்துக்காக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நேரு பிரதமராக இருந்தபோது சென்னை ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு, கொல்கத்தாவில் நடைபெற்ற உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு உள்ளிட்டவற்றில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியவர். முதல்வர் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர்.

மறைந்த கமலா சடகோபனுக்கு கணவர் சித்ராலயா கோபு மற்றும் நான்கு மகன்கள் உள்ளனர். அவருடைய இறுதிச் சடங்கு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர்-செயலாளர் நடிகை சச்சு, திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், சி.வி.ராஜேந்திரன், மறைந்த இயக்குநர் ஸ்ரீதரின் மனைவி தேவசேனா உள்பட ஏராளமானோர் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com