

நடிப்புக்கலை இருக்கும் வரை நடிகர்திலகம் சிவாஜியின் புகழ் நிலைத்திருக்கும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
சிவாஜியின் 13 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் பின்னர் கூறியதாவது: நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கும் எனக்கும் தனிப்பட்ட நட்பு உண்டு. சிவாஜியின் மூலமே வீரபாண்டிய கட்டபொம்மன், தியாகி வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட விடுதலைப் போராட்டத் தீரர்களை நாம் காணமுடிந்தது. தலைவர்களின் தோற்றத்தை மட்டுமல்ல, தெய்வங்களின் திருவுருவத்தையும் நம் கண்முன்னே தத்ரூபமாக காட்டியவர் நடிகர் சிவாஜிகணேசன்.
அரசியலில் அவர் ஜொலிக்கமுடியவில்லை. அவர் பிறவிக் கலைஞன். அவரது வீரபாண்டி கட்டபொம்மனைப் பார்த்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆச்சரியப்பட்டார். மொழிக்கு அப்பாற்பட்டு சிவாஜியின் நடிப்பு அனைத்துத் தரப்பினரையும் கவர்வதாக அமைந்தது. சிவாஜியின் பிறந்தநாளை தேசிய அளவில் கொண்டாடவேண்டும் என்றார்.
சிவாஜி சிலைக்கு மதுரை பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் முத்தன்னசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். சிவாஜி மன்றம் சார்பில் நாகராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
மதுரை மாநகர் காங்கிரஸ் சார்பில் தலைவர் வழக்குரைஞர் பி.சேதுராமன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.கேராஜேந்திரன், ஏ.தெய்வநாயகம் மற்றும் பி.காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிவாஜிகணேசன் நினைவு தினத்தை முன்னிட்டு நகரின் பல இடங்களில் சிவாஜி ரசிகர் மன்றத்தினர் அவரது திருவுருப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர். அவரது திரைப்பட பாடல்களை ஒளிபரப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.