86- வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு: "கிராவிட்டி'க்கு 7 ஆஸ்கர் விருது

லாஜ் ஏஞ்சலீஸ், மார்ச் 3: சினிமாத்துறையின் உயரிய கெளரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

லாஜ் ஏஞ்சலீஸ், மார்ச் 3: சினிமாத்துறையின் உயரிய கெளரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. இதில் பத்து பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட "கிராவிட்டி' திரைப்படம் 7 விருதுகளை வென்றது.

2013-ஆம் ஆண்டுக்கான 86-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக "கிராவிட்டி', "அமெரிக்கன் ஹஸில்' ஆகிய படங்கள் 10 பிரிவுகளிலும் "12 இயர்ஸ் எ ஸ்லேவ்' படம் 9 பிரிவுகளிலும் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இதில் இந்தியா உள்பட உலக நாடுகள் பலவற்றிலும் பெரும் வசூலையும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் குவித்த "கிராவிட்டி' படம் 7 விருதுகளை வென்றது. சிறந்த இயக்கம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, ஒலிக்கலவை, படத்தொகுப்பு, பின்னணி இசை, விஷுவல் எஃபக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் இந்தப் படம் விருதுகளை வென்றது. சிறந்த இயக்குநர் விருதுக்கான போட்டியில் "12 இயர்ஸ் எ ஸ்லேவ்' பட இயக்குநர் ஸ்டீவ் மெக்வீன், "அமெரிக்கன் ஹசில்' பட இயக்குநர் டேவிட் ஓ ரஸல் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி "கிராவிட்டி' படத்தை இயக்கிய அல்ஃபோன்úஸô குவாரன் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றார்.

சிறந்த நடிகருக்கான விருதுக்கு "அமெரிக்கன் ஹஸில்' பட நாயகன் கிறிஸ்டியன் பேல், "12 இயர்ஸ் எ ஸ்லேவ்' பட நாயகன் சிவிட்டல் எஜியோஃபோர், "டல்லாஸ் பையர்ஸ் கிளப்' படத்தின் நாயகன் மேத்யூ மெக்கனாகே "த வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்' பட நாயகன் லியானார்டோ டி கேப்ரியோ, "நெப்ராஸ்கா' பட நாயகன் ப்ரூஸ் டென் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதில் "டல்லாஸ் பையர்ஸ் கிளப்' படத்தின் நாயகன் மேத்யூ மெக்கனாகே சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றார். இந்தப் படத்தில் நடித்த ஜேரட் லெட்டோ சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார்.

சிறந்த நடிகை விருது பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட "கிராவிட்டி' பட நாயகி சாண்ட்ரா புல்லக், "ஆகஸ்ட்: ஓஸேஜ் கவுன்ட்டி' பட நாயகி மெரில் ஸ்ட்ரீப், "அமெரிக்கன் ஹஸில்' பட நாயகி எமி ஆடம்ஸ் ஆகியோரை வீழ்த்தி சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதைத் தன் வசமாக்கினார் "ப்ளூ ஜாஸ்மின்' பட நாயகி கேட் பிளான்செட்.

"12 இயர்ஸ் எ ஸ்லேவ்' படத்தில் நடித்த லூபிதா நியோங்கோ சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றார். ஸ்டீவ் மெக்வீன் இயக்கிய "12 இயர்ஸ் எ ஸ்லேவ்' சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளது. பாலோ சொரன்டினோ இயக்கிய "த கிரேட் பியூட்டி' என்ற இத்தாலியப் படம் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருதை வென்றுள்ளது.

கிராவிட்டி

விண்வெளி வீரர் மாட் கெளலஸ்கி (ஜார்ஜ் குளூனி) தன்னுடைய கடைசி விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட வேண்டும் என நினைக்கிறார். ஆனால் எதிர்பாராமல் விண்வெளியில் ஏற்படும் விபத்தால் விண்கலம் பழுதடைகிறது. அவரது குழுவில் உள்ள அனைவரும் இறந்துபோக அவரும் டாக்டர் ரியான் ஸ்டோனும் (சாண்ட்ரா புல்லக்) உயிர் பிழைக்கின்றனர். ரியான் ஸ்டோனுக்கு அது முதல் விண்வெளிப்பயணம். எப்படியாவது விண்வெளியில் இருந்து தப்பித்து பூமிக்கு வர முடிவு செய்கின்றனர்.

ஒரு கட்டத்தில் இருவரில் யாராவது ஒருவர்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற சூழ்நிலை வர, மாட் தன்னுடையை உயிரைத் தியாகம் செய்கிறார். இறுதியில் ரியான் ஸ்டோன் தனியாகப் போராடி எவ்வாறு பூமியை வந்தடைகிறார் என்பதே கதை. முழு கதையும் பூமியிலிருந்து 600 கி.மீ. உயரத்தில் நடைபெறுகிறது. அங்கே எல்லாம் மிதந்துகொண்டே இருக்கின்றன. கதாபாத்திரங்களும் மிதக்கின்றன. நேர்த்தியான ஒளிப்பதிவின் மூலமும் துல்லியமான கிராஃபிக்ஸ் காட்சிகள் மூலமும் விண்வெளியில் மிதக்கும் உணர்வை பார்வையாளர்களுக்கும் ஏற்படுத்துகிறது படம்.

12 இயர்ஸ் எ ஸ்லேவ்

அமெரிக்க உள்நாட்டு போருக்கு முந்தைய காலகட்டத்தில் நியூயார்க்கில் உள்ள சாலமோன் என்ற கருப்பின மனிதரைக் கடத்திச் சென்று அடிமையாக விற்கிறார்கள். 12 ஆண்டுகளாக அடிமை வாழ்க்கையை மேற்கொள்ளும் அவர் அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக போராடுவதை உணர்வுப்பூர்வமாக சொல்லுவதே கதை.

நன்னாள் கைகூடும்..!

ஓர் எழுத்தாளன் தனிமையில் அமர்ந்து தனது காலகட்டத்தைக் கடந்து ஒரு படைப்பை உருவாக்கிவிடலாம்; ஓர் ஓவியன் ஓவியத்தை வரையலாம். அவர்களுடைய காலகட்டத்தில் அந்தப் படைப்பு பாராட்டப்படாமலோ, கவனம் பெறாமலோ போகலாம். அவற்றின் உண்மையான மதிப்பு பின்னாளில் நிச்சயமாக உரியவர்களால் உலகறியச் செய்யப்படும். அப்படிப்பட்ட கவிஞர்கள், ஓவியர்கள் ஒருவேளை அழிந்துபோகலாம். ஆனால் அவர்களுடைய படைப்பு வாழும்.

சினிமா ஒரு கூட்டுப் படைப்பாக இருப்பதால் எவ்வளவு பெரிய மேதைகளாக இருந்தாலும் தங்களுடைய காலகட்டத்தில் நிலவும் ரசனை மற்றும் முக்கிய விஷயங்களைத் தங்களுடைய படைப்புகளில் பதிவு செய்தல் அவசியம்.

""மக்கள் விரும்புகிறார்கள் நாங்கள் என்ன செய்ய?'' என்று சப்பைக் காரணம் கட்டி மலிவான படங்களைத் தராமல் மக்களின் ரசனையை மேம்படுத்தும் படங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சம்பந்தப்பட்ட கலைஞர்களும் தயாரிப்பாளர்களும் முன்வர வேண்டும். அதேபோல் திரைத்துறையில் கடும் முயற்சிக்குப் பிறகு வாய்ப்பு கிடைக்கப் பெறும் புதியவர்கள், சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய வலிமைதான் தங்களுக்கு வாய்ப்பாகக் கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்து தங்களது படைப்பில் கவனம் செலுத்தினால் "உலகத் தரம், உலகத் தரம்' என்ற பதம் மறைந்து "தமிழ்த் தரம்' என்ற வரம் வாய்க்கப் பெறும்.

ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படங்களையும் அவற்றில் விருதுகளை வென்ற படங்களையும் உற்று நோக்கினால் ஓர் உண்மை புலப்படும். அது, அவற்றில் பெரும்பாலான படங்கள், ஏராளமான வாசகர்களைக் கவர்ந்த நாவல்களையும் சிறந்த சிறு கதைகளையும் தழுவி எடுக்கப்பட்டவை என்பதுதான். அதாவது நான்தான் கதை எழுதுவேன்; நான்தான் நடிப்பேன்; நான்தான் திரைக்கதை, வசனம், இயக்கம், இசை இத்யாதி... இத்யாதி என எல்லாவற்றையும் நானேதான் செய்வேன் என அடம்பிடிக்காமல் நல்ல கதை, நல்ல படைப்பு எங்கிருக்கிறதோ அவற்றை நாடிச் சென்று முறையாக உரிமம் பெற்று படங்களை உருவாக்கியிருப்பதுதான் காரணம்.

அதே போல நவீன தொழில்நுட்பத்தில், கோடிகளைக் கொட்டி பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட படங்களில் கூட மனித உணர்வுகளைத் தட்டியெழுப்பும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதையும் கவனத்தில் கொள்ளலாம். ஆஸ்கர் போன்ற உயரிய கலைத்துறை விருதுகளை வென்ற கலைஞர்களைப் போல - நம்மவர்களும் திரைப்படத்துறையின் எந்தெந்தப் பிரிவுகளில் யார் யார் சிறந்து விளங்குகிறார்களோ அவர்களிடம் அந்தந்தப் பிரிவு சார்ந்த பொறுப்புகளை ஒப்படைத்து ஒற்றுமையுடன் களப்பணியாற்றும்போதுதான் தமிழனின் கலைத்திறனை தரணியெங்கும் தடம் பதிக்கும் நாள் வரும்; நம் தமிழ்ப் படைப்பாளிகளின் பெயர்கள் உலகத்தின் உதடுகளால் உச்சரிக்கப்படும் அந்த நன்னாள்... வெகுதொலைவில் இல்லை என்ற நம்பிக்கையோடு கலை செய்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com