

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான மாசு என்கிற மாசிலாமாணி, முதல் மூன்று நாள்களில் 17 கோடி வசூலித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று 5.30 கோடியும் சனியன்று 4.90 கோடியும் வசூலித்த மாசு, நேற்று மட்டும் 7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மொத்தமாக முதல் 3 நாள்களில் 17.30 கோடி வசூல் செய்து, நல்ல ஓபனிங் பெற்ற படம் என்கிற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான படங்களில், லிங்கா, ஐ, என்னை அறிந்தால், கத்தி, காஞ்சனா 2 ஆகிய படங்களுக்குப் பிறகு நல்ல ஓபனிங் பெற்றுள்ளது மாசு. (காஞ்சனா 2, முதல் மூன்று நாள்களில் 17.50 கோடி வசூலித்தது. அது 360 திரையரங்குகளில் வெளியானது.)
தமிழ்நாட்டில் 430 திரையரங்குகளில் இப்படம் வெளியானது. சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் பகுதிகளில் நல்ல வசூல் கிடைத்துள்ளது.
கேரளாவில் மாசு படத்துக்கு முதல் மூன்று நாள்களில் மூன்று கோடி ரூபாய் கிடைத்துள்ளது. முதல் நாளுக்குப் பிறகு அங்கு மாசு படத்தின் வசூல் மந்தநிலையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. கேரளா அளவுக்கு இல்லாமல் கர்நாடகாவில் படம் நன்றாக ஓடிக்கொண்டுள்ளது.
ஆனால் மாசு படத்துக்கு கிடைத்துள்ள விமரிசனங்கள் பெரும்பாலும் சாதகமாக இல்லாததால் வரும் நாள்களில் வசூலில் பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் இதுவும் படத்தின் வசூலைப் பாதிக்கும் அம்சமாகத் தெரிகிறது. இந்த வார இறுதிவரை மாசு படத்தின் வசூல் நன்றாக இருந்தால் மட்டுமே படம் ஹிட் என்கிற நிலைக்கு வரமுடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.