தொடரும் ‘காக்கா முட்டை’ பலே வசூல்! முதல் 5 நாள்களின் வசூல் நிலவரம்!

இப்படம் ஏற்கனவே லாபம் சம்பாதித்துக் கொடுத்துவிட்டது. முதல் நாள் வசூல் வந்தாலே...
தொடரும் ‘காக்கா முட்டை’ பலே வசூல்! முதல் 5 நாள்களின் வசூல் நிலவரம்!
Updated on
1 min read

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான காக்கா முட்டை படம் தொடர்ந்து நல்ல வசூலைப் பெற்று வருகிறது. சர்வதேச மற்றும் தேசிய அளவில் விருதுகள் வாங்கியுள்ளதால் இந்தியா முழுக்க இந்தப் படத்துக்கு கவனம் கிடைத்துள்ளது.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரது கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வெளியாகியுள்ள காக்கா முட்டை படம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சர்வதேச விருதுகளால் படத்துக்குக் கணிசமான வருமானம்  கிடைத்ததால், காக்கா முட்டையின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய தனுஷ், இப்படம் ஏற்கனவே லாபம் சம்பாதித்துக் கொடுத்துவிட்டது. முதல் நாள் வசூல் வந்தாலே எனக்கு லாபம் தான் என்று சொன்னார். ஆனால் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு வசூலைக் குவித்து வருகிறது காக்கா முட்டை.

தமிழ்நாட்டில் 109 திரையரங்குகள் உள்ளிட்ட இந்தியா முழுக்க 170 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வெளியான வெள்ளிக்கிழமை 90 லட்சம் வசூலித்தது. சனிக்கிழமை - ரூ. 1.10 கோடி, ஞாயிறு - ரூ. 1.35 கோடி, திங்கள் - ரூ. 85 லட்சம், செவ்வாய் - ரூ. 82 லட்சம் என இதுவரை ரூ. 5 கோடி வசூலித்து சாதனை செய்துள்ளது.  திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளிலும் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது பலரையும் வியக்க வைத்துள்ளது. தொடர்ந்து பல மல்டிபிளெக்ஸ்களில் காட்சிகள் அதிகமாக்கப்பட்டும், பெரிய திரையரங்குக்கு மாற்றப்பட்டும் வருகிறது. சென்னை கமலா சினிமாஸில் பெரிய திரையங்கில் இருந்த மாசு படம், இடம் மாற்றப்பட்டு இப்போது அந்த இடத்தில் காக்கா முட்டை திரையிடப்பட்டுள்ளது. எந்த ஒரு பெரிய நடிகரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்காமல், சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தச் சிறிய படத்துக்கு இந்த வசூலும் பாராட்டும் கிடைத்திருப்பது மகத்தான சாதனை என்றுதான் சொல்லவேண்டும். 

பிரபல பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹர், ‘காக்கா முட்டை என்ன ஒரு அருமையான படம், நெகிழவைத்துவிட்டது. ஃபாக்ஸ் நிறுவனத்துக்கும் தனுஷூக்கும் வாழ்த்துகள்’ என்று படத்தைப் பாராட்டியது மிகப் பெரிய விளம்பரமாக அமைந்துவிட்டது. வடமாநிலங்களில் சப்டைட்டிலுடன் வெளியிடப்பட்டுள்ளதால் வேற்று மொழி பேசும் பலரும் படத்தை ஆவலுடன் பார்த்துள்ளார்கள். சமூகவலைத்தளங்களில் பல வடமாநிலத்தவர், அவசியம் பார்க்கவேண்டிய தமிழ்ப் படம் இது என்று பாராட்டி வருகிறார்கள்.

தமிழில் பல சிறிய, அர்த்தமுள்ள படங்கள் வெளிவருவதற்கு காக்கா முட்டை ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com