
காக்கா முட்டை படம், ஆகச் சிறந்த படம் என்று இயக்குநர் வசந்தபாலன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
காக்கா முட்டை திரைப்படத்தை பார்க்கும்போது நான் எனக்கு மிக நெருக்கமாக உணர்ந்தேன். என் இரண்டு மகன்களை பார்க்கையில் சின்ன காக்காமுட்டை பெரிய காக்கா முட்டையாக உணர்ந்தேன். படத்திற்கு என் இரண்டு மகன்களை அழைத்து சென்றிருந்தேன். படம் பார்த்து வந்ததில் இருந்து அப்பா மை நேம் இஸ் காக்காமுட்டை என்று சொன்னபடியே இருக்கிறான்.
ஆகசிறந்த படம் என்று சொல்கிற உலகப்படங்கள் எல்லாம் அதீத வன்முறையையும் அளவுகடந்த சோகத்தையும் பிழியும், காக்காமுட்டை சந்தோசத்தை துள்ளலை பற்றி சொல்லவருகிறது. ஒரு அரசியல் படம் வழக்கமாக ஒரு டாகுமெண்டரி படம் போல் இருக்கும் ஆனால் காக்காமுட்டை அப்படியல்ல. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மிக சுவாரஸ்யமாக முன் வைக்கிறது திரைப்படம் சின்ன காக்காமுட்டை இரவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதில் இருந்து துவங்குவதே அத்தனை அழகு அத்தனை யதார்த்தம்.
படுக்கையில் சிறுநீர் கழிப்பதில் ஆரம்பித்த படம் அவன் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்துவதில் படம் முடிகிறது.
படத்தில் அந்த சிறுவர்களுடன் வரும் நாயும் நடித்திருக்கிறது.காலத்திற்கு ஏற்ப நாயும் வளர்கிறது. அந்த சிறுவனை அந்த அம்மா குளிக்கும் போது அந்த சிறுவன் அந்த நாயை குளிக்கவைக்கிறான். அந்த பாட்டி அந்த நாயிக்கு பால் வைக்கிறாள். அந்த அடித்தட்டு தாய் தன் குழந்தைகளை படம் நெடுக அடிக்கவேயில்லை அதுவே அத்தனை அழகு.
சாப்பிடும் போது காக்கைக்கும் கொஞ்சம் சாப்பாட்டை தன் டவுசர் பைக்குள் எடுத்து வைக்கிறான். காக்கா கூட்டில் 3 காக்கா முட்டைகள் இருக்க அதில் இரண்டை மட்டும் எடுத்துகொண்டு 1 முட்டையை காக்காவுக்கு வைத்துவிட்டு அந்த சிறுவன் மரத்தில் இருந்து கீழே இறங்குகிறான். அந்த சிறுவர்களிடையே தெரியும் இரக்கம் சிரிப்பு நேர்மை உண்மை தன்மானம் அத்தனை அற்புதம்.
பணக்கார சிறுவன் தரும் எச்சி பீட்சாவை வேண்டாமென்று சொல்லிவிட்டு அந்த சிறுவர்கள் நடந்து செல்வது சூப்பர்ஸ்டார் ரஜினி நடந்து வருவது போல் இருந்தது..
அட்ரெஸ் இல்லாத வீட்டிற்கு இந்த அரசாங்கம் இரண்டு விலையில்லா தொலைக்காட்சிகளை தந்து என்ன பிரயோசனம்? அவர்களின் வாழ்க்கைத்தரம் அப்படியே தான் இருக்கிறது. அடித்தட்டு மக்களுக்கு விலையில்லா பொருட்கள் தருவதன் முலம் ஒன்றும் நடந்து விடபோவதில்லை
எத்தனை பெரிய கேள்வி அரசாங்கத்தை நோக்கி...
காக்காமுட்டை வெறும் சிறுவர்கள் படம் மட்டுமல்ல. சிறுவர்களை முன்னிருத்தி அரசியல் பேசிய படம். ஒரு சினிமா சமுதாயத்தை நோக்கி எழுப்புகிற கேள்வி மிக பெரியது. அதை தானே தமிழ் திரைப்படங்கள் தங்கள் பொறுப்பாய் எடுத்து கொண்டு செய்யவேண்டும். அப்போது தான் தமிழர்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.
காக்காமுட்டையில் காணக்கிடைக்கும் சிறுவர்கள் சுதந்திரப்பறவைகள் அவர்கள் எப்போதும் எங்கையாவது நடந்து கொண்டே இருக்கிறார்கள் பணக்காரச்சிறுவர்கள் ஒரு கூண்டுக்குள் அடைப்பட்டு கொண்டு சிறைக்குள் இருந்து கொண்டு இந்த உலகை பார்க்கிறார்கள். அந்த குறியீடை இயக்குனர் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அடித்தட்டு சிறுவர்களின் வாழ்க்கையை சொல்ல முயல்கையில் பணக்கார சிறுவர்கள் பற்றியும் இந்த படம் பேசுகிறது.
கூண்டுக்குள் அடைப்பட்ட வாழ்க்கை. ஆனால் விளையாட ரிமோட் ஹெலிகாப்டர் இருக்கிறது. ஆனால் சுதந்திரம் இல்லை… பானிபூரி சாப்பிடமுடியவில்லை என்ற அந்த பணக்கார சிறுவனின் ஏக்கம் இந்த சேரி சிறுவர்களை போல சுதந்திரப்பறவையாய் சுற்ற முடியவில்லை என்ற ஏக்கம்…இப்படி கரையின் மறுப்பக்கத்தின் வலியையும் இந்தப்படம் பதிவு செய்கிறது.
கடலை பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் மீனாய் மாறவேண்டும்
மழையை பார்க்கவேண்டும் என்றால் நீங்கள் தவளையாய் மாறவேண்டும்
இந்த கதையை அந்த சிறுவர்களாய் மாறாமல் எழுதியிருக்க முடியாது..
அந்த சேரியில் ஒரு மனிதனாய் வாழ்ந்து தான் இயக்குனர் மணிகண்டன் இந்த கதையை எழுதியிருக்க முடியும்.கதையில் அத்தனை நுணுக்கம் அத்தனை உண்மை இந்த கதையில் கலந்திருக்கிறது.
அந்நிய நாட்டு முதலீடு நம் இயற்கை வளத்தை அழித்து விட்டு தான் வளர்கிறது என்பதை அந்த மரம் வெட்டப்படுவதில் மிக அழகாக வெளிப்பட்டிருக்கிறது. அந்நிய உணவு நம் ரச சாதத்தை கொன்று விட்டு வளர்கிறது. என்பதில் தொடங்கி முட்டை வாங்க முடியாத நிலையில் தான் சேரி மக்கள் வாழ்கிறார்கள் என்று பேசுகிறது.
புரதசத்து குறைபாட்டால் எத்தனை லட்சம் குழந்தைகள் ஒரு ஆண்டிற்கு இந்தியாவில் இறக்கின்றன என்று தொடங்கி அத்தனை தகவல்கள். கோழிமுட்டை விக்கிற காசுல எங்க வாங்கமுடீயுது அதான் இவனுங்க காக்காமுட்டையை குடிக்கிதுங்க என்று பாட்டி சொல்கிறாள்.
கெட்டு போன உணவு தான்டா நூல்நூலா வரும் என்று சொல்வதில் தொடங்கி பீட்சா தின்றபிறகு பையன்கள் ஆயா சுட்ட தோசை தான்டா நல்லாயிருக்கு என்று படம் நெடுக வரும் இயல்பான வசனங்கள்.
பீட்சாவுக்கு வைத்திருந்த காசை ஆயா சாவுக்கு அந்த பையன்கள் தருகிறார்கள். வழக்கமாக சேரிப்பையன்கள் எப்படி குறறம் செய்ய பழகுகிறார்கள் சேரியிலிருந்து எப்படி ஒருவன் வளர்ந்து ரவுடியாகிறான், ரவுடிக்கூட்டத்தின் தலைவனாகிறான் என்று அடித்தட்டு மக்களை ஒரு குறறவாளியாய் சித்தரித்து தான் படம் வரும். இங்கே அதற்கு மாற்றாக அந்த சேரி மக்களிடையே காணக்கிடைக்கிற நேர்மையை அத்தனை அழகாக இயக்குநர் காட்டியிருக்கிறார். அதற்கே அவரை பாராட்டவேண்டும்.
சிறுவர்கள் தாய் அத்தனை நேர்மையாக நடந்து கொள்கிறார். அத்தனை கஷ்டத்திலும் ஒழுக்கம் தவறாமல் வேறு கெட்ட வழிகளுக்கு செல்லாமல் வேலை செய்து பணம் தருகிறார். நிறைய பணம் இருப்பதை அந்த சிறுவர்களிடையே பார்க்கையில் எங்கயிருந்துடா இந்த பணம் கிடைத்தது என்று கறாறாய் உறுமுகிறார்.
சேரிகளிடையே கொக்கோ கோலா பாட்டில் நுழைந்து விட்டது. பீட்சா வந்து விட்டது. அதை வாங்கி திங்க முடியாத நிலையில் தான் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் இருக்கிறது என்பதை இதைவிட எப்படி சொல்லமுடியும்.
இந்த நூற்றாண்டில் இந்தியாவின் அடித்தட்டுமக்களின் வாழ்க்கையின் உண்மை நிலையை உரக்க சொன்னதற்காக காக்காமுட்டை ஆக சிறந்த படமாகிறது காணக்கிடைக்கிற சிற்சில குறைகளுடன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.