

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் ஆபரேஷன்ஸ் மேனேஜர், அந்நிறுவனத்தில் ஒரு பகுதியாக இயங்கிக் கொண்டிருக்கும் ‘ஃபோகஸ் யூனிட்டை’ நிர்வாகம் செய்தவர் பாணி எனும் வேலாயுதம் பாணி. திரையுலகைச் சேர்ந்த பலரால் ’பாணி சார’ என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டவர்.
இளையராஜாவுக்கு புருஷோத்தமன், வைரமுத்துவுக்கு பாஸ்கரன், கலைஞருக்கு சண்முகநாதன் எப்படி எப்போதும் உடனிருப்பார்களோ அது போலத்தான் இயக்குநர் மணிரத்னத்திற்கு பாணி இருந்து வந்தார். ‘இதயத்தை திருடாதே’ வில் தொடங்கி ‘ஓகே கண்மணி’ வரை இயக்குநருடன் தொடர் பயணம் செய்துள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் வயது காரணமாக மணிரத்னம அவருக்கு ரிட்டையர்மென்ட் கொடுத்தும், அடுத்த சில நாட்களில் அலுவலகம் வந்துவிட்டார் பாணி. வேலை என்பதே ஓய்வு எனும் கொள்கை உடையவர் அவர். மணிரத்னத்திற்கும் அவரைப்போன்ற நம்பிக்கையான நபர்கள் உடனிருப்பது பலம் எனவே பாணி சார் திரும்பி வந்ததும் மகிழ்ந்தார்.
உடல்நலம் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாணி கடந்த ஜூன் 9-ம் தேதி உயிர் நீத்தார். அவரது வயது 85. அவரது மறைவை ஈடு செய்ய முடியாத இழப்பாக நினைத்த மணிரத்னம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு ஏவிஎம் ஸ்டூடியோ ப்ரிவ்யூ தியேட்டரில் இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். மெட்ராஸ் டாக்கீஸ் ப்ரொடக்ஷன் நிர்வாகி மாலா மணியன், அலுவலக மேலாளர் நித்யா பாலகிருஷ்ணன் மற்றும் மணி ரத்னத்தின் உதவி இயக்குநர் சிவகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
பக்திப் பாடலில் ஆரம்பித்த நிகழ்ச்சியில் முதலில் பேசியவர் சுஹாசினி மணி ரத்ன்ம். தெலுங்குத் திரையுலகில் இருந்த பாணி சாரை கணவருக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான் என்றும் வெள்ளை உடையில் எப்போதும் காணப்படும் பாணி வெள்ளை உள்ளம் கொண்ட அன்பான மனிதர், அவரது மறைவு அவர் பழகிய அனைவருக்கும் பேரிழப்பு என்று உருக்கமாகப் பேசினார். அவரைத் தொடர்ந்து பி.சி.ஸ்ரீராம், தோட்டா தரணி, பி.லெனின், அழகம்பெருமாள், ஸ்ரீகர் பிரசாத், ஆர்.கண்ணன் ஆகியோர் பேசினார்கள்.
இறுதியில் பேசிய மணி ரத்னம், ‘பாணி சாரை நண்பர் எனச் சொல்வதா, அண்ணன் என்பதா அப்பா போன்றவரா இதில் எந்த வயதிலும அவரில்லை ஆனால் எனக்கான எல்லாமமாகம் இருந்தவர் அவர். என்னைப் போல இல்லாதவர். நிறைய பேசுவார், எப்போதும் புன்னகைப்பார், வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பவர் அவர். எனக்குத் தர வேண்டிய தகவல்களை தெளிவாக எழுதி, ஒரே நிமிஷத்தில் நான் படிக்கும்படி ஹைலைட் செய்து தருவார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாது இழப்பு’ என நெகிழ்ச்சியாக தன் மனத்தில் உள்ளவற்றைப் பேசினார்.
ரவி வர்மன், கே.வி.ஆனந்த், ஸ்ரீகர் பிரசாத், வி.ப்ரியா, ஆர்.கண்ணன், நடிகர்கள் கார்த்தி, சித்தார்த் மற்றும் பாணியின் உறவினர்கள், மெட்ராஸ் டாக்கீஸ் பணியாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இரங்கல் கூட்டத்தின் நிறைவாக பாணியைப் பற்றிய காணொலி திரையிடப்பட்டுள்ளது.
பாணி 1977-ஆம் வருடம் ‘ஜீவிதம்லோ வசந்தம்’ என்ற தெலுங்குப் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.