

ஒரு கமல் படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது தூங்காவனம். முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரைத் திரையில் மின்னும் ஓர் நட்சத்திரம் கமலஹாசன் மட்டுமே.
ஃப்ரெடரிக் ஜார்டின் இயக்கியிருக்கும் Sleepless Night என்ற ஃப்ரெஞ்ச் படத்தின் தழுவல் இத்திரைப்படம் என்ற தகவல் முன்னரே வெளிவந்துவிட்டது, எனவே தமிழில் இதனை எப்படி எடுத்துள்ளார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்படுவது இயல்பு. இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா நடிகர் கமலை முதன்மைப்படுத்தி கச்சிதமான ஆக்ஷன் படத்தை எடுத்திருக்கிறார். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பான காட்சியமைப்புக்களால் கவனம் பெறுகிறது. இரண்டாம் பாதியில் சில வேகத்தடைகள் காரணமாக சாதாரணமாகிவிட்டது என்பதே உண்மை.
படத்தின் சுருக்கமான கதை இதுதான். ஒரு கொலை மற்றும் ஒரு (போதை மருந்து) கொள்ளை. ஒரு கடத்தல், ஒரு இரவு விடுதி. அதில் இரண்டு போதைப் பொருள் வியாபாரிகள், இரண்டு தனிப் போலீஸ் குழு. இவர்களுக்குள் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் கதை.
திவாகர் (கமல்) Narcotics Control Bureau (போதை மருந்து தடுப்புத் அமைப்பு) அதிகாரி. டாக்டர் மனைவி (ஆஷா சரத்) இவருடன் வாழப் பிடிக்காமல் பிரிந்துவிடுகிறார். மகன் வாசுவை (அமன் அப்துல்லா) இருவரும் இங்கும் அங்குமாக அலைக்கழிக்கிறார்கள். வாசு தந்தையின் மீது சிறிது கசப்புணர்வுடன் இருக்கிறான். சக ஊழியர் மணி (யூகி சேது) உடன் சேர்ந்து திவாகர் கோடிக்கணக்கில் விலைமதிப்புள்ள போதைப்பொருள் (பத்து கிலோ கோகைய்ன்) கைப்பற்றுகிறான். கடத்தலின் போது நடக்கும் கைகலப்பில் திவாகருக்கு கத்திக் குத்து ஏற்படுகிறது. மணி ஒரு அடியாளை சுட்டுவிட, அந்த இடத்திலிருந்து இருவரும் கோகைய்ன் பையுடன் தப்பிக்கிறார்கள். அந்த கோகைய்ன் நிழல் உலக தாதா விட்டல் ராவ் (பிரகாஷ் ராஜ்)க்கு சொந்தமானது. திவாகரும் சேதுவும் கடத்திய பொருளைப் பிரித்துக் கொள்ளும் முன், திவாகரின் மகன் வாசுவை (அமன் அப்துல்லா)வை விட்டல் ராவ் கடத்திவிடுகிறான். திவாகரிடம் தன் பொருளை திரும்பத் தரும்படி மிரட்ட, அவன் மணிக்கு ஃபோன் செய்கிறான். மணி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. மகனின் உயிர் தான் முக்கியம் என்று மணியிடம் சொல்லிவிட்டு, பையை எடுத்துக் கொண்டு விட்டல் ராவுக்குச் சொந்தமான ‘Insomnia’(ஹாலிவுட் நடிகர் அல் பாசினோ நடித்த ஒரு திரைப்படத்தின் பெயர் இது. தமிழ் சினிமாவின் அல்பாசினோ கமல் என்பது குறிப்பிடத்தக்கது) என்ற இரவு விடுதிக்குக் கிளம்புகிறான் திவாகர். விட்டல் ராவின் அடியாள் கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிகாரியான மல்லிகா (த்ரிஷா) எதேச்சையாக திவாகர் பதற்றமாக விரைவதைப் பார்த்து பின் தொடர்கிறார். திவாகர் தன் கையில் கொண்டு வந்த பையை ஆண்கள் கழிப்பறையில் ஒளித்து வைப்பதைப் பார்த்த மல்லிகா, அவன் சென்றபின் அந்தப் பையை எடுத்து பெண்கள் கழிப்பறையின் மேற்கூரையில் ஒளித்து வைத்துவிட்டு தன்னுடைய சக அதிகாரியான திரவியத்திடம் (கிஷோர்) உடனே அந்த விடுதிக்கு வரும்படி சொல்கிறார். விட்டல் ராவிடம் மகன் இருப்பதை உறுதி செய்தபின், திரும்ப பையைத் எடுக்க வந்த திவாருக்கு பெரும் அதிர்ச்சி. பையையும், பையனையும் எப்படி மீட்கிறார் என்பதைச் தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்கள்தான் மீதிக் கதை.
கதை ஓர் இரவில் நிகழ்கிறது. இதில் திவாகர் நல்லவனா கெட்டவனா, ஏன் அந்த கோகைனைக் கடத்த வேண்டும், மணியின் மரணத்திற்கு காரணமான தான் தேடிக்கொண்டிருக்கும் கறுப்பு ஆடு யார் என்பதை கண்டுபிடிக்கிறாரா என்பது தான் கதைக்கு மையமான காட்சிகள். படத்தில் பாடல்கள் இல்லை, தேவையில்லாத ஹீரோயிஸம் இல்லை., காரணம் கதைநாயகனின் சின்னச் சின்ன செய்கைகளும் ஹீரோயிஸத்திற்கும் மேலாகப் போற்றப்படுகிறது, தனக்கு சுயமாக சிகிச்சை செய்து கொள்வதிலிருந்து, கிடைத்த சிறிய இடைவெளியில் ஒரு நர்ஸை மூன்று முறை முத்தம் கொடுப்பது வரை நாயகன் கமலின் பிம்பத்தை மீள் பதிவுச் செய்யும் காட்சிகள். இது போன்ற சில காட்சிகள் கதையின் ஓட்டத்தில் இடைச்செறுகலாக இடம்பெறுகிறது என்பதை நுட்பமான ஒரு ரசிகன் உணர்ந்துகொள்வான். திரையில் தன் முகத்தை மறைத்துக் கொள்ளவும், நிஜத்தில் தன் பிம்பத்தை நிலைநறுத்தவும் கதைநாயகன் முத்தமிட்டுத்தான் ஆகவேண்டும் போலிருக்கிறது. கமல் கதைநாயகனாக வாழ்ந்த ஒரே படம் ‘பாபநாசம்’, அதில் மட்டுமே சுயம் மறைத்து சுயம்புலிங்கமாக வாழ்ந்திருப்பார். மற்ற எல்லா படங்களிலும் கதைநாயகனுக்கு நியாயம் செய்யாது, கதாநாயகனே வானளாவ உயர்ந்து நிற்பார். கமலும் அவர் ரசிகர்களும் விரும்புவது அதைத் தான்.
தூங்காவனத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தும் இயங்கிக் கொண்டே, நடித்துக் கொண்டே, அல்லது அடித்துக் கொண்டே இருக்கும் ஒரே பாத்திரம் கமல் மட்டுமே. எழுத்தாளர் சுஜாதா முன்பு ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கமலைப் பற்றி இப்படி சொல்லியிருப்பார். ‘நடிகர் கமலஹாசனுக்கு கதை எழுத ஆசை, கவிதை எழுத ஆசை. சண்டை போட்டு கையை உடைத்துக் கொள்ள ஆசை, ஹாலிவுட் படங்களைப் பார்த்து அது போல நம்மால் இயக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எப்போதும் உண்டு. ஒரு ஆங்கில படத்தை விட தரமான தமிழ் படம் எடுக்க அதிக ஆசை, தவிர பாடவும், இயக்கவும், கேமரா மற்றும் எடிட்டிங் போன்ற டெக்னிக்கலான விஷயங்களிலும் ஆர்வம் அதிகம். இன்னும் இன்னும் என்று நிறைய கற்றுக் கொள்ள ஆசைப்படுபவர் அவர். இதுவே அவருக்கு ஒரு பெரிய சவாலாகி விடுகிறது…’ என்று கூறியிருப்பார். அதே நிகழ்ச்சியில் இயக்குநர் கே.பாலசந்தர் கூறுகையில், ‘எனக்கு அனந்து இருந்தார். உயிருடன் இருந்தவரை என்னை சரியாக சேனலைஸ் செய்தவர் அவர்தான். ஆனால் கமலைப் பொறுத்தவரையில் சுற்றிலும் முழுக்க முழுக்க அவருக்குக் கை தட்டும் கும்பல் தான் இருக்கிறது’’ என்று சொல்லியுள்ளார். உண்மைதான். கமல் என்ற மகா நடிகன் ஏனிப்படி இருக்கிறார் என யோசிக்கையில், அவரின் மீதான அழுத்தமான பிம்பம் அவரை அப்படி உருவாக்கி வைத்துவிட்டது. அவரே நினைத்தால் கூட அதைக் கட்டுடைக்க முடியாத அளவிற்கு அந்த வலை மிக அழுத்தமாக அவர்மீது பின்னப்பட்டுவிட்டது. தனக்குச் சமமாக அல்லது தன்னைவிட உயர்வாக திரையில் ஒருவரைக் காட்சிப்படுத்த (ஸ்க்ரீன் ஷேர் செய்ய) கமல் ஒருவரையும் அனுமதிப்பதில்லை. அந்தந்த கதாபாத்திரங்களின் இயல்பை கட்டுக்குள் கொண்டுவந்து தன் பிம்பத்தின் மிகை வெளிச்சத்தால் அதை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவது பல முறை நடந்துள்ளது. அது சற்று வெளிப்படையாக தூங்கவனத்தில் தெரிகிறது.
NCB அதிகாரியான யூகி சேது முதல் அதிரடி தாதாவான சம்பத் வரை அனைவரின் பாத்திரப்படைப்புக்களும் மட்டம் தட்டப்பட்டிருக்கின்றன. யூகி சேதுவின் உடை மிகச் சாதாரணமாக இருக்கையில் கமலின் நாயக பிம்பத்தை சற்றும் தளர்த்த விரும்பாத அவருடைய கோட் சூட் ரோலெக்ஸ் வாட்சுடன் ஸ்டைலிஷாக தோன்றுவார். அடிபட்ட நிலையிலும் நேர்த்தியாகவே தோன்றுகிறார். குணா போன்ற படங்களில் தன்னைச் சிதைத்து தன் பிம்பத்தை உயர்த்திக் காட்டும் அதே கமல், படத்தின் தேவை கருதி இப்படத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் ஒருவருக்கு அந்த நடை உடை அவசியம் தான். என்றாலும் யூகி சேதுவின் ஆடை வழியே ஒரு இன்ஃபார்மர் போல மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். விட்டல் ராவ் கதாபாத்திரத்தைப் பொருத்தவரையில் திவாகரின் நெஞ்சில் கால் வைத்து வசனம் பேசும் ஒரு காட்சியைத் தவிர மற்ற எல்லா இடத்திலும் ஒரு ஜோக்கரைப் போலவே சித்திரிக்கப்படுகிறார். அவரைப் பார்த்து ஒருவருக்கும் பயம் ஏற்படுவதில்லை. ‘யெஸ் பாஸ்’ என்று அவர் அருகிலேயே இருக்கும் ஒரு அல்லக்கை அடியாள் வேறு. சம்பத் பாத்திரம் அதைவிட மோசம். மிரட்டலான காட்சிகளுக்கு வழியிருந்தும் ஏதோ வருகிறார் போகிறார் சாகிறார். இந்தக் கதாபாத்திரங்கள் வீணடிக்கப்பட்டதுடன் அவர்கள் மீது பரிதாபமே மிஞ்சுகிறது. இவர்களுடன் சண்டை போடுவதற்குப் பதில் திவாகர் மல்லிகாவுடன் ஒரு சுவாரஸ்யமான கட்டிப்பிடி சண்டை போட்டு அவர் கையை உடைக்கிறார். கடைசியில் அதற்கு மன்னிப்பும் கேட்டு, உடன் பயணிக்கும் அதிகாரியாக இறுதிக் காட்சியில் தன் Stardom (நாயகத்தன்மையை) நிலை நிறுத்திவிடுகிறார். நட்சத்திரக் கும்பலாக ஆஷா சரத், உமா ரியாஸ், சந்தான பாரதி, நண்டு ஜகன், மது ஷாலினி இன்னும் பலர் வெறுமனே திரையில் தோன்றி மறைகிறார்கள்.
படத்தில் நெருடலாக இருக்கும் ஒரு விஷயம் விட்டல் ராவுக்கு தன்னுடைய நைட் கிளப்பில் இருக்கும் போலீஸ் அதிகாரிகளின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க முடியாதா என்ன? குழந்தைகள் தங்கள் வீட்டில் கண்ணாமூச்சி விளையாட்டு ஆடும் போது அது தன்னுடைய வீடாக இருக்கும்பட்சத்தில் எதிரியை எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். காரணம் அது அவர்கள் வீடு. அங்கிருக்கும் அனைத்து இடங்களும் தெரிந்திருக்கும். இந்தப் படத்தில் விடுதியில் நிறைய பெளன்ஸர்கள், பார் அட்டெண்டர்கள் இருக்கிறார்கள். சமையல் பட்டாளம் ஒன்று உள்ளே தனி உலகமாய் இயங்கி வருகிறது. இவர்கள் யாரும் விட்டல் ராவுக்கு உதவுவதில்லை. இன்னொரு விஷயம் திவாகருக்கு மகனை ஒளித்துவைத்திருக்கும் இடம் ஒரு கட்டத்தில் தெரிந்துவிடுகிறது. ஆனால் உடனே அவர் அங்கு செல்லவில்லை. இடையில் தேவையின்றி சில காட்சிகளுக்குப் பிறகு தான் அவனிடம் செல்கிறான். ஏன் என்பது படம் பார்த்து சற்று ஆழமாக யோசித்தால் மட்டுமே புரியும். இப்படி திரைக்குள் பல நுண்ணரசியல் இருந்தும் இரண்டு மணி நேரம் படத்தைப் பார்க்கத் தூண்டும் வகையில் எடுத்திருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். அரை மணி நேரம் தேவையற்ற காட்சிகளைக் குறைத்து இன்னும் படத்தின் உண்மைத்தன்மை அதிகரித்திருக்கும்.
படத்தின் வசனம் சுகா. ஒரு திரில்லர் படத்தில் வசனம் அதிக கவனம் பெறாது என்றாலும் ஆங்காங்கே சில இடங்களில் பளிச்சென்று தெறிக்கிறது வார்த்தை விளையாட்டுக்கள். கமல் கிச்சனுக்குள் நுழைந்து சாம்ஸுடன் பேசுவது கவனம் பெறுகின்றன. இன்னொரு ஆறுதல் தரக்கூடிய விஷயம் இரவு விடுதியில் கதை நிகழ்ந்தும் நைட் க்ளப் பாடல் ஆடல்கள் எதுவுமில்லை. கதையின் ஓட்டத்திற்கு அது பெரும்தடையாக இருந்திருக்கும்.
இத்திரைப்படத்தின் முக்கியமான அம்சம் இசை. கதையோட்டத்திற்கு ஏற்றவகையில் தாங்கிப் பிடிப்பது இசை. ஜிப்ரானின் இசையில் இந்தப் படத்தில் இறுதிக் காட்சியில் ஒரே ஒரு பாடல் மட்டுமே என்றாலும், பிஜிஎம்மில் மிரட்டியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் சானு ஜானின் பங்களிப்பும் முக்கியமானது. இரவில் ஒரு விடுதிக்குள் இத்தனை அழகாகவும் இயல்பாகவும் ஒரு கேமரா இயங்க முடியும் என்று சாத்தியப்படுத்தியிருக்கிறார்.
படத்தில் செஃப் ஆக வரும் இயக்குநர் ராஜேஷ் திரைக்குள்ளும் சரி திரைக்கு வெளியேயும் சரி நடக்கும் யாவற்றையும் வேடிக்கைப் பார்க்கிறார். போலீஸ் ஐடி கார்ட் அவரிடம் காட்டப்படும் போது கூட ’ஆதார் அட்டையைக் காட்டினா எல்லாம் உள்ளே விட முடியாது’ என்று சொல்லும் அளவிற்கு அப்பாவி. அறிவுஜீவி என்று உலகறிய அறியப்பட்ட ஒருவருக்கு இன்னொருவரின் பெயர் இன்னும் எதற்கு என்றுதான் புரியவில்லை. தவிர உலகப் படங்களைப் பார்த்து இன்னும் எத்தனை காலம் தமிழ்ப் படம் எடுக்கப் போகிறார்கள்? உலகத்தரமான கலைஞர்கள் நம்மிடம் இருந்தும் இன்னும் மொழிமாற்றப் படங்களில் ஏன் நம்பிக்கை வைக்கிறார்கள்? அந்த நம்பிக்கையை தன் மீது வைத்திருந்தால் இதை விட சிறப்பான படம் நிச்சயம் தந்திருக்க முடியும் தானே? தமிழ் படத்தை தழுவி ஒரு கொரிய இயக்குநரோ அல்லது ஹாலிவுட் இயக்கநரோ எப்போது திரைப்படம் எடுக்கப் போகிறார்கள்?
தூங்காவனத் திரையில் பல கதவுகள் திறக்கின்றன. பல கதவுகள் மூடப்படுகின்றன. எதிர்பாராத நேரத்தில், எதிர்பார்த்த நபர் திறந்த கதவின் வழியே வருவதில்லை. எதிர்பாராத நபர் ஒரு கதவின் திடிரென்று தோன்றுகிறார். புதிர்வழிப்பாதைப் போன்ற இந்த வாழ்க்கையில் எந்த கதவு எப்போது திறக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. இப்படி தத்துவங்களை நாமே சிந்தித்துக் கொள்ளும் உயர்தளத்தில் இப்படம் இயங்குவதால் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம். கமல் ரசிகர்களை இந்தப் படம் வெகுவாக கவர்ந்துவிடும் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை. சினிமா ரசிகர்களுக்கு இது மற்றுமொரு படம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.