

சென்னையில் நேற்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், சரத்குமார் தலைமையிலான அணிக்கும், நாசர் தலைமையிலான அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. குற்றச்சாட்டுக்கள், விமரிசனங்கள் என இரு தரப்பிலும் இருந்து வந்ததால், தேர்தல் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் வெற்றிபெற்றார்கள்.
நாடக நடிகர்களின் பலத்த ஆதரவு சரத் குமார் அணிக்கு உள்ளதால் அந்த அணியே ஜெயிக்கும் என பலரும் எதிர்பார்த்தார்கள். மேலும் பல ஆண்டுகளாக பதவியில் உள்ளதால் சரத் குமார் - ராதாரவி என்கிற பெரிய ஆலமரத்தைச் சாய்ப்பது எளிதல்ல. நாடக நடிகர்கள், நண்பர்கள் என பலருடைய ஆதரவுடன் சரத் குமார் அணியே ஜெயிக்கும் என்று திரையுலகினரால் கருதப்பட்டது. ஆனால் விஷால் அணியினர் பலருடைய கணிப்புகளையும் தங்களுடைய சாதுர்யத்தால் தவிடுபொடியாக்கியுள்ளார்கள்.
கடந்த ஒரு மாத காலமாக பம்பரமாக சுழன்று பிரசாரம் செய்தது விஷால் அணியினரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சங்க உறுப்பினர்களின் முகவரிகள், தொலைப்பேசி எண்கள் முறையாக இல்லாதபோதும் ஒருவரைக் கூட விடாமல் தேடிப் பிடித்து பிரசாரம் செய்தார்கள். இதிலேயே பலருடைய நன்மதிப்பைப் பெற்றார்கள்.
மேலும் ஊடகங்களை விஷால் அணியினர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். சரத் குமார் அணியினரின் பேச்சு பலத்த விமரிசனங்களை வரவழைத்த நிலையில் தாங்கள் என்ன பேசவேண்டும், என்னென்ன தகவல்களைத் தெரிவிக்கவேண்டும் என்பதில் விஷால் அணியினர் தெளிவாக இருந்தார்கள். நடிகர் சங்கத்தில் மாற்றம் வேண்டும், எஸ்.பி.ஐ. சினிமாஸுடனான ஒப்பந்தம் ரத்து செய்யவேண்டும் என இந்த முக்கிய அம்சங்களை மையப்படுத்தியே பேசினார்கள். பதிலுக்கு சரத் குமார் அணியினர் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தியதால் அது அந்த அணிக்கு எதிர்மறையான விளைவையே உருவாக்கியது. கமலுக்கு எதிராக சரத் பேசியது, ராதாரவி, ராதிகா, சிம்புவின் பேச்சுகள் போன்றவை சினிமா ரசிகர்களிடையே விமரிசனங்களை வரவழைத்தன.
இதுதவிர விஷாலின் ஆளுமை. ஒரு போர்வீரன் போல செயல்பட்டார் என்று தேர்தலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாசர், விஷாலுக்குத் தனிப்பட்ட முறையில் பாராட்டு தெரிவித்தார். நடிகர் சங்கத்தில் மாற்றங்கள் வேண்டும், தவறுகள் களையப்படவேண்டும் என்று தைரியமாக முன்வந்து குரல் கொடுத்தார் விஷால். ரஜினி, கமல், விஜய், அஜித்துக்கு இல்லாத அக்கறை உனக்கு ஏன் என்கிற விமரிசனங்களைக் காதில் போட்டுக்கொள்ளாமல் சரத் குமார் - ராதாரவி கூட்டணியைப் பதவியில் இருந்து கீழே இறக்கவேண்டும் என்பதில் அவர் கடைசிவரை உறுதியாக இருந்தார். இளம் நடிகர்களை தங்கள் பக்கம் வரவழைத்தார். நாசர் அணியில் விஷால் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்த வெற்றி சாத்தியமில்லை என்றே பலரும் கூறுகிறார்கள். அந்தளவுக்கு ஒட்டுமொத்த பொறுப்பையும் தோளில் தாங்கிக்கொண்டு மாற்றத்துக்கு வழிவகை செய்துள்ளார் விஷால்.
விஷால் அணியினரின் வெற்றிக்கு இன்னொரு முக்கியமாகக் கருதப்படுவது அவர்களுடைய தேர்தல் அறிக்கைகளும் வாக்குறுதிகளும்தான். இந்த அணி ஜெயித்து வந்தால் நமக்கு நிறைய நல்லது செய்வார்கள் என்கிற நல்லெண்ணத்தை உருவாக்கினார்கள்.
தங்களது தேர்தல் அறிக்கையில் விஷால் அணியினர் தெரிவித்த வாக்குறுதிகள்:
புதிய கட்டடம் தொடர்பாக குழு அமைக்கப்படும்,
நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள நிலத்தை மீட்டெடுப்போம். அதை நடிகர் சங்கத்தின் சொந்த நிலமாக்குவோம்.
செயற்குழு, பொதுக்குழு ஒப்புதலோடு எஸ்.பி.ஐ. ஒப்பந்ததை ரத்து செய்வோம்.. எஸ்.பி.ஐ. சினிமாஸுக்கு நாங்கள் பணத்தை திருப்பி கொடுக்க தயாராக உள்ளோம். பணத்தை திருப்பி கொடுத்து நாங்கள் உறுதியாக நடிகர் சங்க கட்டிடத்தை மீட்டுவிடுவோம்.
நாடக நடிகர், திரைப்பட நடிகர்களுக்கு இலவச காப்பீடுத் திட்டம் வழங்கப்படும்.
சங்க கட்டடத்தில் அரங்கம், உணவு கூடங்கள் அமைக்கப்படும்.
கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும், மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
புதிதாக உருவாகவுள்ள அறக்கட்டளைக்கு மூத்த உறுப்பினர்கள் 9 பேரை உறுப்பினர்களாக நியமிப்போம்.
புதிதாக கட்டப்படவுள்ள கட்டடம் சங்கத்துக்கு பயன்படும் வகையிலும், மாத வருமானம் ஈட்டக் கூடிய வகையிலும் அமையும். சங்கத்துக்கு மாதம் ரூ. 30 லட்சம் கிடைக்க திட்டம் வகுக்கப்படும்.
இதுவரை நடந்த தவறுகள் சீர் செய்யப்படும்.
நடிகர் சங்கத்துக்கென தனி இணையதளம்.
நாடக நடிகர்களுக்கு சினிமா வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.
கடந்த நிர்வாகத்தால் செய்யப்பட்ட செலவுகள் மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு அதன்மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டடம் கட்டுவதற்கு பாண்டவர் அணி சார்பில் உடனடியாக ஒரு படம் தயாரிக்கப்படும். அதில் வசூலாகும் தொகையை நடிகர் சங்கத்துக்கு நன்கொடையாக வழங்கப்படும்.
என வாக்காளர்களைக் கவரும் விதத்தில் பாண்டவர் அணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பலனாகத்தான் அந்த அணி தேர்தலில் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதனால் தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய அத்தியாயத்துக்குத் தயாராகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.