

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்கள் சமீபமாக மலையாளம் மற்றும் தெலுங்கில் நேரடி பதிப்பாக வெளிவருகிறது. ரஜினி, கமல் ஆகியோரின் படங்களைத் தொடர்ந்து இளம் நடிகர்களின் படங்களுக்கும் வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக விஜய், விக்ரம், சூர்யா ஆகியோரின் படங்களுக்காக எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
தற்போது விஜய்யின் "தெறி' மலையாளம், தெலுங்கில் வெளியாகவுள்ளது. தமிழில் வெளியாகவுள்ள ஏப்ரல் 14-ஆம் தேதியே அங்கும் இப்படம் வெளியாகிறது. விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா, பிரபு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகின. தெலுங்கில் வெளியாகும் படத்துக்கு "போலீஸ் ஓஹ்டு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு மொழிக்கான டப்பிங் பதிவு ஏவி.எம். கார்டனில் பல வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
"துப்பாக்கி' படத்தின் தெலுங்கு பதிப்புக்கு விஜய்க்கு குரல் கொடுத்த வாசு இப்படத்துக்கும் குரல் கொடுக்கிறார். அதே போல் மலையாளப் பதிப்புக்கான வேலைகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. "தெறி' என்பது மலையாளத்தில் கெட்ட பொருள் தரும் வார்த்தையாக இருந்து வருகிறது. அதனால் அங்கே எந்த வார்த்தையை தலைப்பாக பயன்படுத்தலாம் என படக்குழு ஆலோசித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.