

ஒரு காலத்தில் தென்னிந்திய திரைப்படங்களின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த, தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கிய அங்கமாக இப்போதும் திகழும் ஏவி.எம். ஸ்டுடியோ தனது பொலிவை இழக்கிறது. இதன் ஒரு பகுதியானது பல அடுக்குமாடிக் குடியிருப்புகளாக உருமாறி வருகிறது.
காரைக்குடியில் "ஜெனரல் ஸ்டோர்ஸ்' என்ற பெயரில் தனது தந்தை நடத்தி வந்த பல்பொருள் வணிகத்தில் நாட்டம் கொண்ட ஏவி.மெய்யப்ப செட்டியார், பின்னாளில் "கிராம்போன் பிளேட்' எனும் இசைத் தட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர், அந்த உந்துதலில் "சரஸ்வதி சவுண்ட் புரொடக்ஷன்ஸ்', "சரஸ்வதி டாக்கீஸ்' ஆகிய நிறுவனங்களைத் தொடங்கி, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே அவர் திரைப்படத் தயாரிப்பிலும் இறங்கினார். அதன்பிறகு, சென்னை மயிலாப்பூர் பகுதியில் "பிரகதி ஸ்டுடியோ' எனும் பெயரில் திரைப்பட ஸ்டுடியோவை உருவாக்கினார்.
ஸ்டுடியோவான குதிரை லாயம்! பின்னர், "ஏவி.எம். புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கிய மெய்யப்ப செட்டியார், கோடம்பாக்கம் சாலிகிராமத்தில் தோல் வியாபாரம் செய்து வந்த இஸ்லாமியர் ஒருவருக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை (மாந்தோப்பாக இருந்து குதிரை கட்டும் லாயமாக மாறிய இடம்) வாங்கினார்.
அதுவரை காரைக்குடியில் ஸ்டுடியோ அமைத்து திரைப்படங்களை உருவாக்கி வந்த மெய்யப்ப செட்டியார், சென்னை சாலிகிராமத்தில் வாங்கியிருந்த நிலத்தில் ஸ்டுடியோக்களை உருவாக்கினார். ஏவி.எம்.மின் முதல் தயாரிப்பாக "வாழ்க்கை' என்ற திரைப்படம் உருவானது.
நான்கு தலைமுறைகளைக் கடந்து...:தொடர்ந்து திரைப்படங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஏ.வி.எம். நிறுவனம், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என தலைமுறை நடிகர்களைத் தாண்டி நடை போட்டது. ஏவி.எம். மெய்யப்ப செட்டியாரின் மறைவுக்குப் பிறகு அவரது மகன்கள் நால்வரும் ஏவி.எம். நிறுவனம் மூலம் தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரித்து வந்தனர்.
பங்கு பிரிக்கப்பட்ட ஏவி.எம். ஸ்டுடியோ! காலப்போக்கில் இதில் மாற்றம் ஏற்பட்டு ஏவி.எம். சரவணனும், ஏவி.எம். பாலசுப்பிரமணியனும் இணைந்து திரைப்படங்களைத் தயாரித்து வந்தனர். ஏவி.எம். குமரனும், ஏவி.எம். முருகனும் பிரிந்து சென்றனர். கடைசியாக ஒட்டுமொத்தமாக மெய்யப்ப செட்டியார் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த உயிலின்படி ஏவி.எம். ஸ்டுடியோ பங்கு பிரிக்கப்பட்டது.
இதில் தனக்குக் கிடைத்த இடத்தின் ஒரு பகுதியை ஏவி.எம். குமரன் தனியாருக்கு விற்பனை செய்துவிட, அங்கே இப்போது தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது.
ஏவி.எம். சரவணனுக்குச் சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி வாங்கி, தனது படப்பிடிப்புகளை நடத்தும் ஸ்டுடியோவாக மாற்றிவிட்டார். பிற இடங்கள் தனியார் தொலைக்காட்சியின் படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஏவி.எம்.முருகனும் தனக்குரிய பங்கு நிலத்தை விற்பனை செய்துவிட்டார்.
பல நூறு கோடி ரூபாயில் குடியிருப்புகள்: இந்த நிலையில், ஏவி.எம்.பாலசுப்பிரமணியனுக்குச் சொந்தமான இடத்தை ஒரு தனியார் நிறுவனம் சுமார் ஏழு லட்சம் சதுர அடியில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்ட முடிவு செய்தது. பல நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்தக் கட்டுமானப் பணியை ஏவி.எம். பாலசுப்பிரமணியத்துடன் அந்த நிறுவனம் இணைந்தே மேற்கொள்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதியாகிவிட்ட நிலையில், தற்போது கட்டுமானப் பணிகள் தொடங்கி விட்டன. பழைமையும், பெருமையும் வாய்ந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு, அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.
சிவாஜி வசனம் பேசிய இடம் என்னவாகும்? 1952-இல் ஏவி.எம். நிறுவனம் தயாரித்த "பராசக்தி' படத்தின் மூலம் அறிமுகமான சிவாஜி, அந்தப் படத்துக்காக "சக்சஸ்...' என்று முதல் வசனத்தைப் பேசினார். அவர் முதன்முதலாக வசனம் பேசிய இடத்தில் அவரது உருவச் சிலை பொறிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கட்டுமானப் பணிகள் நடந்து வரும் நிலையில், சிவாஜியின் அந்த அடையாளச் சின்னம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பின் பகுதியில் இருந்த ஏ.சி. படப்பிடிப்பு தளம், பேருந்து நிறுத்தம் ஷெட், பல படங்களுக்கு பூஜை போடப்பட்ட பிள்ளையார் கோயில், நடிகர், நடிகைகள் தங்கும் அறைகள் மற்றும் பல கட்டடங்கள் இடிக்கப்பட்டுவிட்டதால் ஏவி.எம். நிறுவன வளாகம் தனது பிரதான அடையாளங்களை இழந்துவிட்டது.
ஸ்டுடியோக்கள் குறைந்து வருவதால் திரைத்துறையினர் வருத்தம்! சென்னையில் இயங்கி வந்த பல லேப் மற்றும் ஸ்டுடியோக்கள் மூடப்பட்டுவிட்டன. பிரபலமான பிரசாத், ஜெமினி உள்ளிட்ட ஒரு சில லேப்களில் மட்டுமே படச் சுருள்களைச் செம்மையாக்கும் வேலைகள் நடந்து வந்தன. படச் சுருள்கள் மூலமான திரைப்படங்கள் தயாரிக்கப்படாததால், லேப்களில் பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு விருப்பு ஓய்வு (வி.ஆர்.எஸ்.) கொடுக்கப்பட்டுவிட்டது.
இதேபோல, ஜெமினி லேப்பிலும் வேலைகள் குறைந்துவிட்டன. ஏற்கெனவே இயங்கி வந்த பிரபலமான விஜயா லேப் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டுவிட்டது. தற்போது அந்த இடத்தில் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், தென்னிந்திய திரைப்படங்களின் தாயகமாக விளங்கிய சென்னை தனது பெருமையை தற்போது இழந்து வருகிறது.
ஏற்கெனவே பல ஸ்டுடியோக்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும், நட்சத்திர விடுதிகளாகவும், வர்த்தக நிறுவனங்களாகவும் மாறிவிட்ட நிலையில், ஏவி.எம். ஸ்டுடியோவும் குடியிருப்புகளாக மாறுவது திரைத்துறையினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் வரவே காரணம்...!
வீண் செலவுகள், கால விரயத்தை தவிர்ப்பதோடு, நினைத்த காட்சிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பது உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் ஒளிப்பதிவு கேமரா இப்போது உபயோகப்படுத்தப்படுகிறது. இதனால், படச் சுருள்களைக் கொண்டு திரைப்படங்கள் தயாரிக்கும் முறை வழக்கொழிந்து வருகிறது. திரையரங்குகளின் கருவிகளும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டதால், ஹாலிவுட், ஐரோப்பிய நாடுகளில் திரைப்படங்களை முழுவதுமாக டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆக்கிரமித்துவிட்டது.
பல்வேறு நாடுகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்தான் திரைப்படங்களை உருவாக்கி வருகின்றனர். தமிழ்த் திரைப்படத் துறையிலும் தற்போது 90 சதவீத திரைப்படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாகி வருகின்றன. இதனால், படச் சுருள்களை செம்மையாக்கும் பணிகள் பெருமளவு குறைந்து விட்டன. டிஜிட்டல் வரவு, ஸ்டுடியோக்களையும் விட்டுவைக்கவில்லை.
தென்னிந்தியாவின் திரையுலகத் தலைநகராக இருந்த சென்னை அதன் பெருமையை இழந்துவருவது திரைத்துறையினருக்கு மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.