அது ஒரு நிலாக் காலம்

பிரசாத் ஸ்டூடியோவில் பரந்த புல்வெளியில் நடுவே இளையராஜாவின் கம்போஸிங் ரூம். டைரக்டர் பாரதிராஜா
அது ஒரு நிலாக் காலம்
Updated on
3 min read

பிரசாத் ஸ்டூடியோவில் பரந்த புல்வெளியில் நடுவே இளையராஜாவின் கம்போஸிங் ரூம். டைரக்டர் பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து, ஆர்.சி.பிரகாஷ், வாத்தியக் குழு, உறுப்பினர்கள் மூவர். இவர்களிடையில் சிவசக்தி பிஸிம்ஸாரின் ‘டிக்.டிக்.டிக்’ படத்துக்கான ரெகார்ட் செய்யப் போகும் ஒரு பாடல் பற்றிய சீரியஸ் டிஸ்கஷன்.

படத்துக்காக ரெகார்டு செய்யப் போகும் மூன்றாவது பாடல் இது என்றாலும், படத்தில் முதலில் வருகிற பாட்டு. நாயகியின் உதட்டசைவு இல்லாமல், அசரீரியின் குரலாய் படத்தில் எஸ்.ஜானகி எழுப்பப் போகும் இசை மழை. சுகந்த கீதம்.

மாடல் பெண்கள், நவநாகரீக நங்கையரின் அசைவுகள், நடவடிக்கைகள், நெளிவு சுளிவுகள், அழகுகள் அனைத்தும் பாடலில் சொல்லப்பட்டு விட வேண்டும் என்கிறார் பாரதிராஜா.

பாடலின் உட்பொருள் ஆக (கன்டென்ட்) என்ன இருக்க வேண்டும் என்று கேட்ட வைரமுத்துவிடம், ‘உங்களுக்கு முழுச் சுதந்திரம் தந்துவிட்டேன். நவநாகரீக நங்கையரை வார்த்தைகளில் சிறைப்படுத்தி வர்ணித்துக் கொடுங்கள். மேற்கத்திய இசையின் உச்ச அழகு இதில் வெளிப்பட வேண்டும்’ என்ற தன் ஆசையைத் தெரிவித்தார் பாரதிராஜா.

இரண்டு மூன்று டியூன்கள் போட்டுப் பார்த்து, விவாதித்து, நான்காவதாய் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏகப்பட்ட ஆர்க்கெஸ்ட்ராக்களுடன், இடையிடையே டி.வி.கோபாலகிருஷ்ணனின் ‘ஹம்மிங்’ வருமாறு டியூன் அமைக்கப்பட்டது.

டியூனைப் போடும் போதே பாரதிராஜாவின் அபிநயங்கள் அவருடைய ரசிப்புத் தன்மையையும், சந்தோஷத்தையும் வெளிப்படுத்துவதாக இருந்தன.

பாடலுக்கு நடுவே ‘தந்தன…தந்தன…தந்தன…தந்தன…தந்தன….என்று டி.வி.கோபாலகிருஷ்ணனின் ஹம்மிங்குக்கான இடைவெளியைக் கேட்டதும் வைரமுத்துவுக்கு உற்சாகம் பிறந்துவிட்டது.

‘இந்த இடத்தில் அருமையான சொற்கள் வைத்து விளையாடலாமே’ என்றார் பாரதிராஜாவிடம்.

‘எப்படி சொல்லுங்கள்’ என்றார் பாரதிராஜா.

‘சந்திர மண்டல சுந்தரி என்னிடம் மந்திரம் சொன்னது நெஞ்சினில் நின்றது…கனவிலே…’

ஆச்சரியமாய் நின்றுவிட்ட பாரதிராஜா, ‘ரொம்பப் பிரமாதம் வைரமுத்து; பட், இந்த இடத்துல ஹம்மிங் மட்டும்தான். வார்த்தைகள் இல்லை’ என்றதும் கொஞ்சம் ஏமாற்றமடைந்தார் வைரமுத்து.

டியூனை மட்டும் கேசட்டில் பதிவு செய்து கொண்டு, ஒரே நாளில் பாடலைத் தந்து விடுவதாகச் சொல்லிவிட்டு, வெளியே வந்தார் வைரமுத்து.

வைரமுத்து சொன்னார்:

இதுவரை கேட்டிராத அளவுக்கு மிக இனிமையான, வித்யாசமான டியூன் இது. இளையராஜாவின் விலாசம் அதில் இருந்தது.

அடர்த்தியான நம்பிக்கையோடு, இந்தப் பாடலை எழுத ஆரம்பிக்கும் முன்னால், வெறும் லுங்கி சட்டையுடன் டிரஸ்ட்புரத்தின் தெருக்களில் நடந்து கொண்டிருந்தேன்.

கேட்டு கேட்டு டியூன் அடி மனத்தில் பதிந்து விட்டதால் டேப் ரிகார்டர் தேவையில்லை.

- வானத்தைப் பார்த்தேன்.

- முக்கால் நிலா காய்ந்து கொண்டிருந்தது.

நிலவு லேசாய் மங்கி, மேகங்கூட்டங்களைத் துளைத்து ஊடுருவும் போது, வானம் ஒரு மெல்லிய கனவு காண்பதாய் எனக்குப் பட்டது.

பட் பட்டென்று பொட்டில் கற்பனைச் சிறகுகள் கதவைத் தட்ட, வார்த்தைகள் துள்ளித் துள்ளி வந்து விழுந்தன. அத்தனையையும் சொல்ல மீட்டரில் தான் இடமில்லை. பாஷை ராஜபாட்டை போட்டு விட்ட பிறகு, பல்லவி குதித்துக் கொண்டு வந்தது…

‘இது ஒரு நிலாக் காலம்…

இரவுகள் கனாக் காணும்…

ஆடை கூட பாரமாகும்

பாரிஜாதம் ஈரமாகும்…

சபாஷ் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டிருந்தேன்.

சரணத்தை எப்படித் தொடங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

இந்தப் பெண்ணின் அழகு ஒரு ஆணைப் பரவசப்படுத்துவதில் ஆச்சரியமில்லை. ஒரு பெண்ணுக்கே கிளர்ச்சி ஏற்படுத்துவது பெரிய விஷயம். ஆனால் அத்துணை அழகு ஒரு அஃறிணையக் கூட கவர்ந்திழுத்து, வெட்கப்படச் செய்கிறது. கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்வதன் மூலம் தான், அந்த விசாலமான அழகை விவரிக்க முடியும் போலிருக்கிறது.

பாரதிராஜா சொன்ன அனைத்தும் என் காது மடல்களில் உட்கார்ந்து கொண்டிருந்தது.

தமிழ் சினிமாவுக்கும், இலக்கியத்துக்கும் பெண்களை வர்ணிப்பதென்பது புதிய விஷயமன்று. ஆனால் திரும்ப திரும்ப சொன்னது மாதிரியும் வார்த்தைகளை இடம் மாற்றிப் போடுவது மாதிரியும் இருந்துவிடக் கூடாது என்பதில் ஜாக்கிரதையாய் இருந்தேன்.

சரணம் இப்படி ஆரம்பித்தது

‘பாவை கண்டாலே

நிலவு நெளியாதோ

அழகி பார்த்தாலே

அருவி நிமிராதோ

வண்டு வந்து உடைக்காத பூவும் நானே

உள்ளக் கனவில் சொர்க்கம் வந்து உறங்கிடக் கண்டேனே!’

தந்தன…தந்தன…தந்தன…தந்தன…

இன்னொரு சரணம், முதல் சரணம் மாதிரி குறிப்பிட்ட ஒரு பெண்ணின் வர்ணனையுடன் மட்டும் நின்றுவிடாமல் மொத்தப் பெண்களின் உயர்ந்த அழகுப் பற்றியதாய் அமையட்டும் என்று பாரதிராஜா ஏற்கனவே சொல்லியிருந்தார்.

இது ஒரு ‘ரிச் சாங்’ பணக்கார பாட்டு; குபேர வார்த்தைகள்.

ஸோ…

‘தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ

ராஜ மேகங்கள் பூவை தூவாதோ

கண்ணாடி உனைக் கண்டு கண்கள் கூசும்

வானவில்லும் நகச் சாயம் வந்து பூசும்

பருவப் பூக்கள் புருவம் அசைந்தால் பூமி சுற்றாது’

இந்தப் பாடலுக்காக என் மனத் திரையில் வந்து போன வார்த்தைக் கொத்துக்கள் ஏராளம்! என் மன சிலேட்டில் வார்த்தைகளை எழுதிப் பார்த்து அழித்து எழுதுவேனே தவிர, பேப்பரில் எழுத ஆரம்பித்துவிட்டால் ஒரு அடித்தல், திருத்தல் கூட இருக்காது.

திருப்தியாய் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டேன்.

மறுநாள் ஹோட்டல் அட்லாண்டிக்கில் இருந்த பாரதிராஜா என்னை வரச் சொன்னார். போய்ப் பார்த்தேன்.

அவர் முகத்தில் சந்தோஷ ரேகைகள் தெரிந்தன.

அதே சமயம் முகத்தில் ஏதோ சரியில்லாத மாதிரி ஒரு ஏமாற்றக் குறி!

’வைரமுத்து, இது ஒரு அசரீரி குரல். பாடப்படுகிறவர் படர்க்கையாகி விடுகிறார். தன்மையலல்ல ஒன்லி பேக்ரவுண்ட் ஸாங். ‘நானே’ என்று வருகிற இடங்கள் இடிக்கிறது’ என்றார்.

உடனே பேப்பரை வாங்கி ‘நானே’ என்று வரும் இடங்களில் ‘நீயே’ என்று மாற்றிக் கொடுத்தேன்.

ஃபெண்டாஸ்டிக் என்று பாராட்டினார் பாரதிராஜா.

ரெகார்டிங் அன்று பாடலைப் பிரசவித்த வைரமுத்து முதல் டைரக்டர் பாரதிராஜா வரை எல்லோரும் ஒரு டென்ஷனோடு இருந்தனர். பாடல்போகிற ஜானகி வழக்கமான புன்சிரிப்போடு உள்ளே நுழைந்தார்.

மைக் முன்னால் தயாரானார். இளையராஜா குரல் கொடுக்கவும் ஒரே கோரஸில் ஒரே நேர்க்கோட்டில் ஆர்க்கெஸ்ட்ரா மொத்தமும் பிசகாமல் பிசிறாமல் பயணித்து, மேலெழும்பி, மரம், செடி கொடிகளைத் தழுவி, பரப்பில் நுழைந்து, வெளியை நிரப்பி, ஜானகியின் தேனிசைக்கு வழிவிட்டு ஒதுங்கின.

இது ஒரு நிலாக் காலம்..

இரவுகள் கனாக் காணும்..

இளையராஜா சொன்ன சில மாற்றங்களோடு ஜானகி மறுபடி பாட ஆரம்பித்தார்.

வாத்தியக் குழுவின் இசையில் பாரதிராஜாவின் கைகள் நடனமாடின. வீணையின் தந்திகளை மீட்டின. வயலினோடு இசைந்தன. குதிபோட்டு…சரி..கம…பத…நி. நடனமாடும் பெண்களின் கால்களாய் வளைந்தன. அந்த இன்வால்வ்மென்டும், ஈடுபாடும், அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதையே ஒரு அனுபவமாக நினைக்க வைத்தன.

‘எப்படி’ என்கிற விதமாய் இளையராஜா, வைரமுத்துவைப் பார்க்க, ‘சப்தங்கள் தலைவாரி ஜடை போட்டு பூ முடிக்கின்றன’ என்றார் வைரமுத்து.

திரும்பும் போது வைரமுத்து சொன்னார்:

‘பாரதிராஜா, இளையராஜா இருவரின் திறமையை நினைக்க நினைக்க பிரமிப்பு ஏற்படுகிறது. இவ்வளவு அசாதரண கற்பனை வளமா என்று வியப்பு மேலிடுகிறது. சில பேரைப் பற்றி பிரமாதமாய்க் கேள்விப்பட்டு பழகத் தொடங்குகிறோம். ஆனால் அந்த மயக்கம் விரைவில் தெளிந்து விடுகிறது. பாரதிராஜா எனக்கு உறவினர் என்றாலும் கூட, அவர் மீது உறவினர் என்ற சாயம் துளியும் ஒட்டிக் கொள்ளாத அன்பும், பக்தியும், ஈடுபாடும் ஏற்பட்டுவிட்டது. இது நாளாக நாளாக அதிகரிக்கிறதே தவிர குறைகிற வழியாய்த் தெரியவில்லை.

‘அதே மாதிரி இளையராஜா, அவருக்கு மட்டும் மேலை நாட்டு சாதனங்களும், செளகரியங்களும் வாய்த்தால் உலகத்திலேயே குறிப்பிடத்தக்க ஒரு மியூசிக் டைரக்டராகத் திகழ்வார்’ என்றார்.

ஒரு பெண்ணின் மன ஆழத்தைக் குடைந்து ஆராய்வது உலக அபத்தங்களில் ஒன்று என்று அறிஞர் பெட்ரண்ட் ரஸ்ஸல் சொன்னது நினைவுக்கு வந்தது. அது போல்தான் ஒரு உன்னதமான இசைப் பிரவாகத்தை வார்த்தைகளில் சிறைப்படுத்திக் காட்டுவது, அந்தப் பிரவாகம் அனுபவித்தால் மட்டுமே புரிகிற விஷயம்.

-உத்தமன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.9.1981)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com