கபாலி – ரஜினி ரசிகையாக படம் பார்த்த அனுபவம்!

நினைவு தெரியாத நாளிலிருந்தே ரஜினி ரசிகையாகவே இருந்துள்ளேன். அதன்பின் சில வருடங்கள் இயக்குனர்கள் தான்
கபாலி – ரஜினி ரசிகையாக படம் பார்த்த அனுபவம்!
Updated on
4 min read

நினைவு தெரியாத நாளிலிருந்தே ரஜினி ரசிகையாகவே இருந்துள்ளேன். என் பெற்றோர் என்னை திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். ரஜினியின் கொடி  பறக்கத் துவங்கியது அக்காலகட்டத்தில் தான். அதன்பின் சில வருடங்கள் இயக்குனர்கள் தான் படத்தின் உண்மையான நாயகர்கள். அவர்கள் ஆட்டுவிக்கும் பாவைகள் தான் நடிகர்கள் என்ற அபிப்ராயம் வந்தது. அதனால் ரஜினியுடன் சேர்ந்து எனக்குப் பிடித்தவர்களின் பட்டியலில் சில இயக்குனர்களும் இணைந்தார்கள்.  மணிரத்னம், பாரதிராஜா, கே.பாலசந்தர் இவர்களின் படத்தில் ரஜினி நடிக்கும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு ஏற்படும். கபாலியைப் பற்றிய பேச்சுக்கள் டீஸர்கள் வெளிவந்த போது என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கூடுமானவரையில் பதிந்து மகிழ்ந்தேன். இதென்ன நாயக வழிபாடு என்று நண்பர்கள் முகம் சுழித்தாலும் ரசனை சுய விருப்பங்கள் சார்ந்து வாழும் என் போன்ற சராசரி திரை ஆர்வலர்களுக்கு அது ஒரு பொருட்டாக இருக்கவில்லை.

64 வயது, 40 வருட கால திரை வாழ்க்கை, 160 படங்கள் என்ற ரஜினியின் க்ராஃப் யாரும் எட்டாத உயரம். தவிர அவரது ரசிகர்களின் மனத்தில் அவர் பிடித்துள்ள இடம் நிகரற்றது.  வெகு நாள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்த்த அனுபவம் மறக்க முடியாத ஒன்றாகியது.காரணம், முன்பெல்லாம் படம் முழுவதும் கேட்கும் விசில் சத்தமும் தலைவா என்ற கூச்சலும் தற்போது சற்று மட்டுப்பட்டுள்ளது. சென்னை திரைப்பட விழாவின் முக்கிய அரங்கான உட்லண்ட்ஸ் திரையரங்கில் காலைக் காட்சி தொடங்குவதற்கு முன் முதலில் ஆயிரம் சர வெடி வெடிக்கப்பட்டது. ரஜினிக்கு வைக்கப்பட்ட மிகப் பெரிய கட் அவுட்டுக்கு ரசிகர் ஒருவர் கோக் அபிஷேகம் செய்தார். அடுத்து மற்றொரு ரசிகர் பாலாபிஷேகம் செய்ய அதை பலர் மொபைல் ஃபோனில் படம் பிடித்தும், உரக்கக் கத்தியும் தங்கள் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். தொலைக்காட்சி சானல்களும் தங்கள் பங்குக்கு வளைத்து வளைத்து இக்காட்சிகளைப் படம் பிடித்துக் கொண்டிருந்தன. ஜப்பானிலிருந்து வந்திருந்த சிலரும் படத்தைப் பார்க்க வந்திருந்தார்கள். 

தியேட்டர் கதவு திறக்கப்பட்டதும் சொர்க்க வாசலே திறந்தது போல ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு உள்ளே மடை திறந்த வெள்ளமாக ஓடினார்கள். நல்ல வேளை நெறியாளர்களும் காவலாளர்களும் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி வரிசையாக உள்ளே அனுப்பினார்கள். முன் பதிவு செய்திருந்த பி7 சீட்டுக்கு வந்து அமர்ந்தேன். வெகு சில பெண்களே இருக்க, அரங்கம் முழுக்க ஆண்கள். படத்தின் முதல் காட்சியில் சீட்டை விட்டு எழுந்தும், பேப்பர்களை துண்டுகளாக்கி பறக்க விடுவதும் ஊ என்றூ கத்தியும் ரசிகர்கள் தங்களுடைய தலைவருக்கு வாழ்த்தையும் மரியாதையும் தெரிவித்தார்கள். ஒருவழியாக அவர்களின் சந்தோஷ ஆரவாரம் முடிவடைய பத்து நிமிடங்கள் ஆனது. அதன் பின் அமைதியாக படம் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். வசனங்கள் காதில் விழும் அளவிற்கு ரசிகர்கள் பக்குவப்பட்டுவிட்டது ஆச்சரியமான நிகழ்வு.

மலேஷியா வாழ் தமிழர்களின் நலனுக்காக பாடுபடும் டானாக ரஜினி சிறப்பாக நடித்துள்ளார். எனினும் அவருடைய பாத்திரப்படைப்பில் சில பிரச்னைகள் உள்ளதை மறைக்க முடியாது. மலேசியத் தமிழரின் பிரச்னையை கருப்பொருளாக எடுத்திருப்பது புதிய களம். வட்டார வழக்கு மொழியில் உச்சரிப்பில் காட்டிய அக்கறையை கதையிலும் சற்று விரிவாகவும் காட்டியிருந்தால் கதையின் ஜீவன் கூடியிருக்கும். ஆனால் கதைக்குள் பொதிந்திருக்கும் உட்பொருளை உணரும் இடங்களில் ஆயிரம் முறை கை தட்டலாம். அதை நேரடியாகவே தீவிரமான காத்திரமான ஒரு கலைப்படமாக இயக்குனர் முன் வைத்திருக்கலாம்.  கதையை நேரடித் தன்மையில் சொல்லியிருக்கலாம். மேட்டிலிருந்து பள்ளத்துக்கு நீர் எப்படி வேகமாக ஓடிச் செல்லுமோ அதைப் போலத் திரைக்கதை ஓட்டமாக ஓடி முடிந்தும் சட்டென வடிந்தும் விடுகிறது.

கேங்வாரை பின்புலமாக வைத்து இயக்கப்பட்ட பல திரைப்படங்கள் நினைவுக்கு வந்தாலும் கபாலியை தனியாக வித்யாசப்படுத்திக் காட்டுவது ரஜினி மட்டுமே. அவர் நடை உடை, அவர் குரல், ரஜினி என்னும் நடிகரின் மேஜிக் என எல்லாமும் கதை நெடுகிலும் பயணிக்கிறது. திரைக்கதை வழமையாக இருப்பதுடன் பல இடங்களில் தொய்வும், இறுதி வரை பெரிய திருப்பங்கள் ஏதுமற்றும் உள்ளது. சில வசனங்கள் பளீர், சில வசனங்கள் பளிச், சில வசனங்கள் நெகிழ்ச்சி. முக்கியமாக நீ செத்துட்டேன்னு நினைச்சிட்டு இருந்தேன் என்று ராதிகா ஆப்தேவிடம் ரஜினி கூறுகையில் அவர் நான் செத்து தான் போயிருந்தேன்….நீங்க தேடி வர்ற வரைக்கும் என்ற வசனம் அன்பான உறவின் ஆழத்தை மிகையற்று சொல்கிறது. மகிழ்ச்சியை ஒரே தொனியில் சொன்னது சற்று சலிப்பாக இருந்தாலும் மகிழ்ச்சி என்ற வார்த்தைக்கே மகிழ்ச்சி ஏற்படும் வகையில் அத்தனை மகிழ்ச்சிகளை ரஜினி சொன்னது ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் அமிழ்த்தியது. படம் பரபரப்பாக இல்லை, வேகமான ரஜினி இதில் இல்லை என்றாலும் ரஜினி ரஜினியாக இருந்தார். ரஜினி என்ற மகா நடிகரை, நிகரற்ற கலைஞரை மீட்டெடுத்துத் தந்த இயக்குனர் பா.இரஞ்சித்தை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும். 

கண்களை இறுகக் கட்டிவிட்டு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் போது ஏற்படும் மெல்லிய பயமும் அந்த விளையாட்டு தரும் விறுவிறுப்பும் நாம் சிறு வயதில் கடந்து வந்திருப்போம். அப்படிப்பட்ட ஒரு அனுபவம் ஒரு திரைப்படத்தின் மூலம் கிடைக்குமா என்றால் கபாலியைப் பார்த்து கிடைக்கும் என்று சொல்லலாம். திரைப்படங்கள் நம்மை சில மணி நேரங்கள் ஒருவித மயக்க நிலையில் ஆழ்த்த செய்பவை. ரஜினி சினிமா எப்போதும் இரட்டிப்பு மயக்கத்தை தந்துவிடும். கபாலி அதை பன்மடங்காக்குகிறது.

ரஜினி ரசிகையாக எனக்குப் பிடித்த காட்சிகள் சில - கூண்டுப் பறவையொன்றை நடந்து செல்கையில் லாவகமாக திறந்து அதற்கு விடுதலை அளிப்பது. சிறையில் பல வருடங்களாக இருந்த வலியும், காலம் காலமாக ஒடுக்கப்பட்டோரின் உணர்வாக அக்காட்சியைக் கொள்ளலாம். பறத்தலை பற்றிய விளக்கங்களை சொல்லாமல் பறக்க விடுவது தான் சிறப்பு. சுதந்திரம் என்பது ஒவ்வொரு உயிரின் பிறப்பு உரிமை பறவையானாலும் சரி மனிதரானாலும் சரி அவரவர் வானம் அவரவர் வாழ்க்கை.எத்தனையோ டான் படங்கள் பார்த்திருந்தாலும் அவற்றில் சில காட்சிகள் நம் நினைவுக்கு வந்தாலும் கூட கபாலியைத் தனித்துவமாகக் காட்டுவது சூப்பர் ஸ்டாரின் நடிப்பு, மிக இயல்பான அவர் படத்தில் பொருந்தியிருக்கிறார். குறிப்பாக குமுதவல்லி உயிருடன் இருக்கிறாள் என்று தெரிந்த பிறகு அவர் உடல்மொழியிலிருந்து பார்வை வரை லேசான துடிப்பு வரை ரஸமாக வெளிப்படுத்தியிருப்பார். மகளுடன் பாண்டிச்சேரி கிளம்பிச் செல்கையில் முகத்தை ஷேவ் செய்ததுடன் படியிறங்கி வருகையில் அங்கிருக்கும் நிலைக்கண்ணாடி ஒன்றில் தன்னைப் பார்க்க ஒரு நொடி நின்றுவிட்டு திரும்புவார். அது பிரிந்தவர் மீண்டும் சேருகையில் ஏற்படும் பரவசத்தை குறுஞ்சிரிப்பில், முக அசைவில், உடல்மொழியில் காண்பித்திருப்பார். அவ்வளவு அழகு! குமுதவல்லியின் மெல்லிய கண்டிப்பான அன்பு, தன்னுடைய கணவன் எப்போதும் யாரிடமும் தாழ்ந்து போய்விடக் கூடாது என்ற உறுதி என அப்பாத்திரப்படைப்பு அழகு.

கதாநாயகிகளை நம் தமிழ் சினிமா எப்படியெல்லாம் காட்சிப்படுத்தியுள்ளது என்பதை எழுதத் தொடங்கினால் ஒரு புத்தகம் அளவிற்கும் மேலாக எழுத முடியும். வயிற்றில் பம்பரம் விடுவதும், லைம் லைட்டில் இருந்த நாயகியரைக் கூட ஐட்டம் டான்ஸ் ஆட வைப்பதும் இன்றளவும் தொடர்கிறது. சினிமா என்றால் இவை இருக்க வேண்டும் என்ற விஷயங்களை கட்டுடைத்த சில இயக்குனர்களில் முதன்மையானவர் பா.இரஞ்சித். தன் மனத்துக்கு சரியென்ற படைப்பை நேர்மையாக முன் வைப்பதில் அவருக்குள்ள தெளிவு பாராட்டுக்குரியது. அதுவும் கபாலியில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது அருமையான விஷயம். கதாநாயகியை தெளிவான பெண்ணாக காட்சிப்படுத்தியிருப்பார். கபாலியின் மனைவி தீர்க்கமான பெண். ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை மெய்ப்பித்தவள். மகளான தன்ஷிகாவும் சராசரிப் பெண் அல்ல. தைரியமும், சூழலை எதிர்க்கும் போராட்ட குணமும் கொண்டவராக உள்ளார். தந்தை மகற்காற்றும் உதவி என்பதற்கு சான்றாக விளங்கி தன்னுடைய பங்களிப்பை அற்புதமாகச் செய்திருப்பார். தந்தை மகள் உறவை அவர்கள் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் பிரமாதப்படுத்தியிருப்பார்கள். அதுவும் கார் பயணத்தில் ரஜினி தன்ஷிகாவிடம் பேசுகையில் கண்கள் மட்டுமல்ல மனத்தும் ஈரமாகிவிடும். பல இடங்களில் கணவர் ரஜினியை விட அப்பா ரஜினி அதிகம் ஸ்கோர் செய்துவிடுகிறார். ரித்விகாவின் பாத்திரமும் சாதாரண ஒன்றல்ல. ஒரு பெண் இழந்துவிட்ட தன் இயல்பை மீட்டெடுக்க போராடும், அன்பை தரும், அன்பை கோரும் ஒரு அழகிய கவிதை போன்ற சித்தரிப்பு அப்பாத்திரம். அப்பா என்று கபாலியை அழைக்கும் அந்தக் குரலை வெகு நாட்கள் மறக்க முடியாது. மற்ற கதாபாத்திரங்கள் அனேகம், அவர்களுக்கான குறுங்கதைகள் ஏராளம்  ஒவ்வொன்றும் போகிற போக்கில் காண்பிக்கப்பட்டாலும் ஒவ்வொன்றும் தனித்துவம் மிக்கவை.

ஒளிப்பதிவாளர் முரளியின் கைவண்ணத்தில் மலேஷியா, தாய்லாந்து, பாண்டிச்சேரி மற்றும் ரஜினி தோன்றும் எல்லா காட்சிகளும் சூப்பர் பளிச்.இசை சந்தோஷ் நாராயணன். டீஸர் வெளிவந்த சமயத்திலே மில்லியன் கணக்கில் ரஜினி ரசிகர்களின் அன்பை சம்பாதித்துவிட்டார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் மனத்தை கொள்ளை கொண்டுவிட்டார். நெருப்புடா, உலகம் ஒருவனுக்காக, வானம் பார்த்தேன் கபிலனின் மூன்று பாடல்களும் திரும்ப திரும்ப கேட்கும் வகையில் உள்ளன. அனைத்துப் பாடல்களும் மனத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டது. கு.உமாதேவியின் மாய நதி பாடலின் மயில் இறகு வரிகளைக் கேட்டுக் கொண்டே  மனத்தை ஏதோ செய்கிறது. அதிலும் ஒரு டானின் வாழ்க்கையை சொல்லும்விதமாக ‘தேசம் எல்லாம் ஆளுகின்ற ஒரு படையை நான் அடைந்தேன், காலம் எனும் வீரனிடம் என் கொடியை நான் இழந்தேன்’ என்ற வரிகளின் ஆழம் மனத்தை விட்டு அகலாது. பிரிவுத் துயரையும் காதலையும் கண்ணீரையும் இதைவிட சிறப்பாக யாரும் சிறிய பாடலொன்றில் சொல்லிவிட முடியாது.

இத்திரைப்படத்தில் பல அழகிய தருணங்களைப் பரிசளித்த இயக்குனர் வன்முறையை சற்றுக் குறைத்திருக்கலாம். தினேஷ் கொலையாகும் இடம் பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துவிட்டது. தவிர படம் முழுவதும் யாராவது செத்து விழுந்து கொண்டே இருக்கிறார்கள். க்ளைமாக்ஸ் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாம். டான் லீ அருமையான பாத்திரத்தேர்வு ஆனால் அவர் சோபிக்கவில்லை. மற்றபடி கபாலி வழக்கமான பழக்கமான ரஜினி படங்களையும், ரஜினி ஸ்டைல்களும் இல்லாவிட்டாலும் கூட ரஜினியின் அழகையும், நடிப்பையும், அவருக்கே உரிய தனித்தன்மையான மாயத்தன்மையை பார்வையாளர்களுக்குக் கடத்த முயன்றிருப்பதில் இயக்குனர் வெற்றி பெற்றுள்ளார். கபாலி ரஜினி ரசிகர்களுக்கு புது வகையான விருந்து. என்னவெனில் இந்த விருந்தில் கொஞ்சம் மருந்தும் கலந்துள்ளது. அவ்வளவே! விமரிசனங்களையும், மற்றவர்களின் கருத்தெனும் மூட்டைகளையும் தூர எறிந்துவிட்டு நெம்மதியாக (ரஜினி அப்படித்தான் நிம்மதியை உச்சரிப்பார்) மற்றுமொரு முறை படம் பார்க்க வேண்டும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com