

‘எவன்டா பெண்ணை முழுசா நேசிச்சு இருக்கீங்க?’ இப்படி சட்டைக் காலரைப் பிடித்து கேட்கும் ஒற்றை வரிக் கேள்வியை திரைக்கதையாக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். ஆனால் அந்த கேள்விக்கு பதில் கண்டடைய முடிந்ததா இல்லையா என்றால் இல்லை என்று தான் சொல்ல முடிகிறது. எந்தத் திசையில் பயணிக்க வேண்டுமோ அதற்கு நேர் எதிர் திசையில் ஒரு பயணம் மேற்கொண்டால் எங்கு போய்ச் சேர முடியும்? அப்படித்தான் அமைந்துவிட்டது இறைவியின் நோக்கமும் சென்றடைந்த இடமும். குழப்பமாக உள்ளதா? திரைப்படமும் இத்தகைய குழப்பங்களை உள்ளடக்கியுள்ளதால் அதைச் சற்று அலசினால் தெளிவு பெறலாம்.
கதா பாத்திரங்கள்
நான்கு ஆண்கள் – பெரியவர் (ராதாரவி) அவர் மகன்களான இயக்குநர் அருள் (எஸ்.ஜே.சூர்யா), கல்லூரியில் படிக்கும் அருளின் தம்பி ஜெகன் (பாபி சிம்ஹா) மற்றும் அருளிடம் வேலைப் பார்ப்பவனாக இருந்தாலும் அவர்களின் குடும்பத்தில் ஒருவனாகவே கருதப்படும் மைக்கேல் (விஜய் சேதுபதி) இவர்கள் தான் கதையின் நாயகர்கள்.
நான்கு பெண்கள் - அருளின் அம்மா (வடிவுக்கரசி), மனைவி யாழினி (கமலினி முகர்ஜி), மைக்கேலின் காதலி மலர்விழி (பூஜா), மனைவி பொன்னி (அஞ்சலி).
இந்த ஆண்களுக்கும் அவர்களுடைய பெண்களுக்கும் இடையே நடக்கும் உறவுப் பிணைப்புகளும், பிணக்குகளும், சிக்கல்களுமே ‘இறைவி’.
கதை
அருள் ஒரு சினிமா இயக்குனர். பெரும் போராடத்துடன் அவன் இயக்கிய இரண்டாம் படத்தின் வெளியீடு தடுக்கப்படுகிறது. காரணம் அவனுக்கும் அப்படத்தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்படும் பிரச்னை. அருள் அதனால் முழு நேர குடிகாரனாக மாறிவிட அவனுக்கும் யாழினிக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவனுக்கும் தயாரிப்பாளருக்கும் ஒரு மழை இரவில் சண்டை வலுக்க, அது கொலை வரை கொண்டு போய்விடுகிறது. அருளுக்காக கொலை செய்யும் மைக்கேலின் கதி என்ன, இவர்களால் வதைபடும் யாழினி மற்றும் பொன்னியின் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதே மீதிக் கதை.
திரைக்கதை
பெண்களின் பிரச்னை பெரும்பாலும் வாழ்க்கை துணையால் மட்டும் என்று சொல்லிவிட முடியாது. அவர்களுடைய பல பிரச்னைகளுள் முக்கியமானது இது என்று சொல்லலாம். தவிர எல்லா ஆண்களும் சதா சர்வ காலம் குடித்துக் கொண்டும், மனைவியைத் துன்புறுத்திக் கொண்டும் இருப்பதில்லை. இந்தத் திரைப்படத்தில் வரும் ஆண்கள் குடிக்கிறார்கள், கொள்ளை அடிக்கிறார்கள், சத்தமாகப் பேசி சண்டை போடுகிறார்கள், கொலை செய்கிறார்கள். ஒரு சாதாரண குடும்பத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதில்லை. படம் ஒரு கொலைகாரனைப் பற்றியோ அடியாள் பற்றியோ என்றிருந்தால் அதன் கோணம் வேறு. பெண்களின் பிரச்னையை மையப்படுத்தும் படமெனில் அதை ஒரு பெண்ணின் பார்வையில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். பெண்களைப் பற்றிய முழுமையான பார்வையோ சரியான புரிதலோ படத்தில் இல்லாதது பெரும் குறை. தவிர சிலைக் கடத்தல், கொலை என்று கதை மையத்தைத் தாண்டி வேறிடத்திற்கு அலைக்கழிக்கப்படுகிறது.
சில தருணங்கள்
மைக்கேல் கடுமையான சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு மனைவியைத் தேடி குக்கிராமத்திற்கு வருவதும், அவனை எதிர்கொள்ளும் பொன்னியின் இயல்பான கோபமும், அதன் பின்னான சமாதானமும் நேர்த்தியாக காட்சியமைக்கப்படுகிறது. தன்னுடைய மகள் அங்கிள் என்று தன்னை அழைப்பதைக் கேட்டு வருந்தும் மைக்கேல் அவள் கடைசியில் அப்பா என்று அழைத்து சாக்லெட் கேட்கையில் அவனால் ஒரு போதும் அந்த சின்னஞ்சிறிய குழந்தையின் ஆசையை நிறைவு செய்ய முடியாமல் கொல்லப்படுவது சோகம்.
மழை…. இந்தப் படம் மழையில் தொடங்கி மழையில் முடிவது கவித்துவம். மழையை சுதந்திரத்தின் குறியீடாகப் பயன்படுத்தியிருப்பதும் காட்சிரூபமான அழகான படிமம். யாழினி தன் தோழியுடன் ஒரு காபி ஷாப்பில் பேசிக் கொண்டிருக்கும் போது மழை வர, மழையில் நனையலாமா என்று கேட்பாள். அதற்குத் தோழி உடை நனைந்துவிடும் என மறுப்பாள். யாழினி அதனால் என்ன என்று சொல்வாள். அவள் மழையில் நனைய நினைத்தால் நனைந்துவிடும் இயல்புடையவள். மழை பற்றிய கனவுடன் மட்டுமே ஒதுங்கி இருப்பதில் பயனில்லை என்பதை அறிந்தவள். நனைய நினைத்து நனையாமல் இருப்பதை விட, நனைதலே சுகம் என்ற நிலைப்பாட்டில் இருப்பவள் அவள். தன் வாழ்க்கை, தன் முடிவு என்று சுயம் சார்ந்து சிந்திக்கும் பெண் யாழினி. அழகும் அறிவும் இணையும் போது ஒரு பெண் பேரழியாகிகிறாள். உள்ளும் புறமும் மலர்ந்த ஒரு பெண்ணால் தான் இறைவியாக முடியும். ஆனால் இந்தப் படத்தில் அது நிகழவில்லை.
சில குழப்பங்கள்
படத்துக்குத் தேவையான காட்சிகள் எடுக்கப்படாமலும் தேவையற்ற காட்சிகள் திணிக்கப்பட்டதுமாக இருப்பதால் இறைவி ஒரு முழுமையான திரையனுபவத்தை தர மறுக்கிறது. உதாரணமாக, கலைஞன், பரம்பரையான படைப்பாளி என்று ராதாரவியைப் பற்றி அடிக்கடி சொல்லிக் கொள்கிறார்களே தவிர அவர்களின் நடவடிக்கைகள், அவர்களுடைய கலையைப் பற்றிய நம்பகத்தன்மையை சொல்லும் அழுத்தமான காட்சி எதுவும் படத்தில் காண்பிக்கப்படவில்லை. பழம் பெருமை பேசியும், செட் ப்ராபர்ட்டி போல ஆங்காங்கே வெங்கல சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன அவ்வளவே. கலைஞர்கள் உணர்ச்சி வசப்படுவார்கள், உணர்வு நிலைப் பிறழ்வார்கள் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அதன் எல்லை எதுவென்று அறிந்தவர்கள். ஒரு உண்மையான கலைஞன் உயிரே போனாலும் தான் படைத்த சிலைகளை திருட உடன் பட மாட்டான். பிள்ளைகள், குடும்பம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு கலையை தன் வாழ்வையும் அர்ப்பணித்த பாரம்பரியமான கலைஞர்களைப் பற்றித் தான் நாம் கண்டும் கேட்டும் படித்தும் உள்ளோம். கலைஞனின் அடிப்படை குணங்களையே தவறாகச் சித்திரத்துள்ளபடியால் கதை நகர்வு நம்பகத்தன்மையை இழக்கிறது. சரி காலக் கொடுமை ஒரு கலைஞன் சிதைந்து போய், குணம் மாறிவிடுகிறான் என்றே வைத்துக் கொண்டாலும் எது அவனை இப்படியாக்கியது என்பதற்கான காரணம் எதுவுமே படத்தில் சொல்லப்படவில்லை. ஒரு கலைக் குடும்பத்தை குடிகார குடும்பமாகக் காண்பித்ததோடு அல்லாமல் சிலைக் கடத்தல் போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதாகக் காண்பித்திருப்பது சரியில்லை. ஒருசில குணநலன்களோடு இருப்பவர்கள் அதிலிருந்து மாறுவது சாத்தியம் தானா? எனில் அதற்கான அகர்னம் என்ன? வெறும் பணத் தேவை கலைஞனை கிரிமினலாக மாற்றிவிடுமா?
எந்த ஒரு பெண்ணும் கணவன் இறந்து கிடக்க, அடுத்த சில மணித்துளிகளில் தெளிவு பெற்று மழையில் நனைய மாட்டாள். அதே போல் முறையாக விவாகரத்துக் கூட பெறுமுன் யாழினி மறுமணத்திற்கு எப்படி தயாராக முடியும்? பெண் மனம் என்ன அவ்வளவு எளிதாக மாறும் இயல்புடையதா என்ன?முன்பு யாழினி மழையில் நனைய விரும்பும் பெண்ணாக காண்பிக்கப்பட்டு கடைசியில் அவளுடைய மகள் நனையலாம் எனும் போது வேண்டாம் ஆடை நடைந்துவிடும் என்று சொல்வது அவளுடைய கதாபாத்திரத்தின் சரிவாகவே உள்ளது. ஒரு பெண் தன் மிச்ச வாழ்க்கைக்காக எடுக்க வேண்டிய முடிவில் அவளுக்கு சில குழப்பங்கள் ஏற்படலாம். ஆனால் பழைய கணவன் புதுக் காதலன் இருவரையும் சூழ்நிலை மாற, மாற்றி மாற்றி நேசிப்பது இருவருக்குமே செய்யும் துரோகம். உண்மையில் ஆண்களால் பாதிக்கப்பட்ட சுயம் சார்ந்து இயங்கும் பெண் ஆண்களே வேண்டாம் என்று தான் முடிவெடுப்பாள். கசந்து போன அவள் மனம் உடனடியாக இன்னுமொரு திருமண உறவுக்குள் நுழைய விரும்பாது. தவிர குழப்பத்தில் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்காது என்று படித்து சுயமாக வேலை செய்யும் யாழினி போன்ற பெண்களுக்குத் தெரியாதா என்ன?
கடைசியாக ஒரு அரைவேக்காட்டு பாத்திர அமைப்பான ஜெகன் பற்றி சொல்லியே ஆகவேண்டும். பெண்கள் ஆண்களால் பாடுபடுவதைக் கண்டு வெறுப்படையும் ஜெகன் பெண்களின் மீது அதீத இரக்கம் கொள்வதாகச் சொல்கிறான். ஆனால் சொல்லில் இருக்கும் கரிசனம் செயலில் இருப்பதை. அண்ணனைப் போல பழகும் ஒருவனின் மனைவி மீது மோகம் கொள்வது மனப் பிறழ்வன்றி வேறென்ன? மைக்கேலை சிறைக்கு அனுப்பி அவன் மனைவியைத் திருமணம் செய்து கொள்ள அவன் நினைப்பது சரி தவறு என்பதைத் தாண்டி அவன் பெண்களின் மீது என்ன மரியாதை வைத்திருக்கிறான் என்று அவன் அடிப்படை குணத்தை சந்தேகிக்க வைக்கிறது. தவிர மைக்கேல் பிடிபட்டால் நிச்சயம் அவன் அருள் மற்றும் ஜகனின் ஆள் என்று தெரிந்து போலீஸ் அவர்களையும் பிடித்து விடும் தானே? இது போன்ற நிறைய லாஜிக் மீறல்கள் படம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.
இந்தத் திரைப்படத்தில் லாஜிக் மீறல்கள் அதிக உள்ளது. ஒரு முறை தவறு செய்தவன் அதற்கான தண்டனையையும் அனுபவித்துவிட்டவன் என்ன தான் எஜமான விசுவாசம் இருந்தாலும் தன் உயிரையும் வாழ்க்கையையும் தான் காப்பாற்றிக் கொள்ள நினைப்பான். பட்டுத் தெரிந்த பின்பு மீண்டும் அடி படத் துணிவதெல்லாம் அசாத்தியம். மைக்கேல் அப்படி அருளின் அன்புக்கு அடிமையாக இருக்கிறான் என்பதை நாம் நம்பினாலும் கடைசியில் அருள் தனக்காக இரண்டு முறை தவறு செய்தவனை தன் தம்பியைக் கொன்றான் என்ற காரணத்தால் அதுவும் அவன் உலகமகா உத்தம தம்பி எல்லாம் இல்லை, இன்னொருவனின் மனைவியை அடைய ஆசைப்பட்டவன், ஒரு கணவனாக ஒரு அறச்சீற்றத்தில் தான் ஜெகனை அவன் கொல்கிறான் அதற்கான மன்னிப்பையும் அவன் ரயில் நிலையத்தில் அருளிடம் கேட்கிறான். ஆனால் துளியும் இரக்கமற்று அவன் தனக்கு முன்னர் செய்த நன்மைகளை மறந்துவிட்டு மைக்கேலை கொன்றுவிடுகிறான் அருள். அவன் ஆண்களைப் பற்றியோ பெண்களைப் பற்றியோ அல்லது எதைப் பற்றியோ கருத்து கூற அருகதையற்றவனாகிவிடுகிறான். ஆண் நெடில் பெண் குறில் என்று வசனம் பேசி திரையரங்கில் கைதட்டல் வாங்கிவிடலாம் ஆனால் இப்படிப்பட்ட பல அடிப்படை கேள்விளுக்கான பதிலோ அதன் நியாயங்களோ படத்தில் எங்கேயும் காண முடியவில்லை.
வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என எதுவென்றாலும் அதனை குடித்து கொண்டாடுவோம் என்று வலியுறுத்தும் காட்சிகளை திரைவழியே சித்தரிப்பது பெரும் சமூகக் கேடு. தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு வேண்டுமென்று போராடி உயிர் விட்டவர்கள் இந்த மண்ணில் இன்னும் இருக்க, இப்படி குடித்துச் சீரழவதை கொண்டாடமாகக் காண்பித்திருப்பது எவ்வகையில் சரியாகும்? அதுவும் குடும்பத் தலைவரான தந்தையே மகன்களுக்கு ஊற்றிக் கொடுக்கும் காட்சிகளை எடுத்திருப்பது கண்டனத்திற்கு உரியது.
பெண்ணியம் என்றால் என்ன, சுதந்திரம் என்றால் என்ன, சுயம் சார்ந்த தேடல் உள்ள பெண் இது போன்ற வாழ்நிலைகளில் என்ன செய்வாள் என்பதையெல்லாம் மெனக்கிட்டு ஹோம் வொர்க் செய்து படம் இயக்கியிருக்கலாம். அல்லது அந்த கருத்தை தொடாமலாவது இருந்திருக்கலாம். வங்கால இயக்குனர் ரிது பர்னோ கோஷின் கிட்டத்தட்ட அனைத்துத் திரைப்படங்கள் பெண்களின் சுதந்திரத்தையும் வலியையும் வாழ்க்கையையும் பேசுபவை. அவை நேரடியாகவும் உண்மைத்தன்மையுடன் எடுக்கப்பட்டிருப்பதால் தான் இன்றளவும் உலக சினிமா வரிசையில் பேசப்படுகிறது. பெண்ணின் வலி, பிரச்னை என்பதை இத்தனை மேலோட்டமாக சொல்லிவிட முடியாது.
நடிப்பும் இசையும்
படத்தில் நடித்த அனைவரது நடிப்பும் அருமை. அஞ்சலி, புது முகம் பூஜா, கமலினி முகர்ஜி ஆகியோர் அனைவரும் தங்கள் பாத்திரம் உணர்ந்து இயல்பாக நடித்துள்ளனர். அருளின் சித்தப்பாவாக வரும் அனுமோகன் அதீத உணர்ச்சிப் பிடியில் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரங்களுக்கிடையே சற்று சாந்தமாக வெள்ளந்தியாக இருப்பவர். எஸ்.ஜே.சூர்யா சில இடங்களில் மிகை நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் இப்படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. விஜய் சேதுபதியை சந்திக்க நேரிட்டால் நிச்சயம் நமக்கே சந்தேகம் வந்துவிடும், உண்மையில் அவர் நடிகரா அல்லது அடியாளா என்று. மனிதர் அலுக்காமல் இத்தகைய பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் நமக்கு அலுப்பு ஏற்படுவது நிஜம். ஆனால் அவர் ஒரு காட்சியில் பொன்னியிடம் தயங்கி அவனுடன் எந்த அளவுக்குப் பழக்கம் என்று கேட்கும் கணத்தில் ஒரு கையறு நிலைக் கணவனை கண் முன்னே நிறுத்துகிறார். பின்ணனி இசை சொல்லும்படி இருந்தாலும் படத்தில் பாடல்கள் ஒட்டாமலும் அதிக கவனம் பெறாமல் இருப்பதும் உண்மை.
இறுதியாக….
நம்மிடைய எப்போதும் இரண்டு வகைப் படங்களே உள்ளன. ஒன்று நல்ல படம் மற்றது கெட்ட படம். இறைவியைப் பொறுத்தவரை ஒரு இரண்டும் கெட்டான் தனம் உள்ளது. அதாவது ஏதோ ஒரு நல்லதைச் சொல்ல நினைத்து, தீயவற்றை ஆழப் பதிய வைத்துவிடுகிறார் இயக்கிய்னர். இது பார்வையாளர்களை பெரும் குழப்ப நிலைக்குள் இட்டுச் செல்கிறது. வெள்ளையா இருக்கறங்க எல்லாம் நல்லவங்க, கறுப்பர்கள் கெட்டவர்கள் என்ற முட்டாள்தனமான சிலரின் நம்பிக்கையின் நீட்சியாக ஆண்கள் தவறு செய்பவர்கள் பெண்கள் துன்பப்படுபவர்கள் என்று இக்கதையில் சொல்லப்பட்டிருப்பது வேடிக்கை.
புதிய முயற்சி, பரீட்சார்த்தப் படம் என்றெல்லாம் பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், படத்தின் நோக்கம் மிகச் சரியானதாகவே இருந்தாலும், அதைக் கையாண்ட விதம கோணலாக இருப்பதால், இறைவி மனிதியாகக் கூட இல்லாமல் போனது பெரும் சோகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.