ராஜா மந்திரி - விமரிசனம்

கையளவு பேப்பரில் எழுதிவிடலாம் எனும் கதையில் கடலளவு ஆழமான உணர்வுகளைச் சொல்லியிருக்கும்
ராஜா மந்திரி - விமரிசனம்
Updated on
3 min read

கையளவு பேப்பரில் எழுதிவிடலாம் எனும் கதையில் கடலளவு ஆழமான உணர்வுகளைச் சொல்லியிருக்கும் இயக்குனர் உஷா கிருஷ்ணனுக்கு முதலில் பாராட்டுகள். அழகான சிறிய கிராமம்.அதில் வாழும் எளிமையான குடும்பம ஒன்று. அண்ணன் சூர்யா (காளி வெங்கட்) தம்பி கார்த்தி (கலையரசன்) இவர்களின் பாசமும் நேசமும் காதல் மற்றும் கல்யாணத்தில் ஏற்படும் சிக்கலும் தீர்வும் தான் ‘ராஜா மந்திரி’ கதை.

சூர்யாவும் கார்த்தியும் சின்ன வயதிலிருந்து அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டாலும் அடுத்தவர் அதில் தலையிட்டால் அவர்களை ஒருவழி பண்ணிவிடுவார்கள். படிப்பு வராததால் அப்பாவின் சிறிய சோடா கம்பெனி முடங்கி விடாமல்  தொடர்ந்து நடத்துகிறார் காளி. தம்பி படிப்பை தொடர, காளியின் உழைப்பால் அந்தக் குடும்பம் ஓரளவு வசதியாக இருக்க முடிகிறது. அவர்களின் ஒரே பிரச்னை முப்பது வயதைத் தாண்டியும் காளிக்கு ஒரு வரனும் அமையவில்லை என்பதுதான். இந்நிலையில் பக்கத்து வீட்டில் குடிவரும் மகாலட்சுமியைப் (வைஷாலி) பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார காளி. தம்பியின் அழகும் ஆங்கிலமும் அண்ணனுக்கு லேசான பயத்தை வரவழைக்க கல்லூரிக்கு பேக் செய்து அனுப்பிவிடுகிறார். பஸ்சில் சந்திக்கும் சுபா (ஷலின் ஸோயா) உடன் மோதல் அதன் பின் காதல் என்று இந்தப் படத்தில் காமெடி, எமோஷனல் என வித்தியாசமாக களம் இறங்கியிருக்கிறார் கலையரசன். இந்த இருவரின் காதல் கைகூடியதா என்பதை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் நிறைவாக ஒரு ஃபீல் குட் படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர்.

அண்ணன் தம்பிகளுக்கிடையே பாசக் காட்சிகள் அல்லது வசங்கள் வரும் போதெல்லாம் அப்பா உருகி கண்ணீர் வழிய அவர்களைப் பாராட்டுவது நகைச்சுவை டபுள் டீரீட். பாலசரவணனின் ஹாஸ்டல் ஜோக்ஸ் பழசு என்றாலும் அவருடைய டயலாக் டெலிவரி மற்றும் இயல்பான நடிப்பும் அருமை.

இசை ஜஸ்டின். அனைத்துப் பாடல்களும் பின்னணி இசையும் அருமை. ஒளிப்பதிவாளர் பி.சி.முத்தைய்யா ஆரம்பக் காட்சியிலிருந்து கடைசி வரை கண்களுக்கு உருத்தாத ரம்யமான கதைக்கு தேவையான ஒளிப்பதிவை செய்துள்ளார். படம் முழுவதும் ஒரு கோர்வையாக தொய்வில்லாமல் எந்த இடத்திலும் நீர்த்துப் போகாமல் நேர்த்தியாக வந்துள்ள காரணம் செல்வாவின் க்ளியர் கட் எடிட்டிங். நீளம் கருதி திருவிழா பாடல் காட்சியை பலி கொடுத்திருக்க வேண்டாம்.

படத்தில் நடித்துள்ள அனைவருமே தங்கள் பாத்திரம் உணர்ந்து அருமையான பங்களிப்பு செய்துள்ளனர். முக்கியமாக காளி வெங்கட்டைச் சொல்லியே ஆகவேண்டும். வைஷாலி கோபமும் வருத்தமுமாக பஸ்சில் ஏறிச் சென்றுவிட தன்னுடைய டிவிஎஸ் 50 யில் மகா மகா என்று அழைத்துக் கொண்டே பஸ் பின்னாடி வந்து வைஷாலி இறங்குமிடத்தில் இறங்கி வருவார். வசனம் எதுவுமில்லாத அக்காட்சி படத்தில் உயிரோட்டமும் முக்கியத்துவமும் வாய்ந்த காட்சியாகும். உடல் மொழியிலும், குரலிலுமே காளி வெங்கட் அதன் அழுத்தத்தை உணர்த்தியிருப்பார். கலையரசன் அண்ணனுக்காக தன்னுடைய ஆசையை விட்டுக் கொடுக்க முயன்று, அண்ணனுக்கும் சுபாவுக்கும் இடையே மாட்டிக் கொண்டு கலங்கி நடித்திருப்பது சிறப்பு. சுபாவின் அப்பாவாக நடித்திருக்கும் பெராராவின் குரலும் தோரணையும் அருமை. பாசமுள்ள தந்தையாக அளவுடன் நடித்திருக்கிறார்.

ஆண்கள் என்றாலே இப்படித்தான் என்று எந்த முத்திரையும் குத்தாமல் எதார்த்தமாக ஆண்களின் பாசத்தை, குடும்ப வாழ்க்கையின் அசலான பக்கத்தை எள் அளவும் மிகையில்லாமல் காட்சிப் படுத்தியிருக்கிறார். வைஷாலி மற்றும் ஷலின் இருவருமே தங்களுடைய இயல்பான நடிப்பில் ஜொலிக்கிறார்கள். தங்களுடைய முடிவை எதற்காகவும் யாருக்காகவும் மாற்றிக் கொள்பவர்கள் இல்லை அவர்கள். அமைதியுடனும் அதே சமயம் அழுத்தமான பிடிவாதத்துடன் சுயம் சார்ந்து இருப்பவர்கள். தமிழ்த் திரையில் மீண்டும் உறுதியான பெண் பாத்திரங்களைப் படைத்தவர் என்று உஷா கிருஷ்ணன் பெருமை கொள்ளலாம்.

பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்ற குற்றச்சாட்டு இங்கு எப்போதும் உண்டு. அதை நீக்கும் வகையில் இப்பபடத்தின் பல காட்சிகள் அரங்கம் அதிர சிரிப்பலைகளை வரவழைக்கிறது. முக்கியமாக செல்ஃபி ஜோக். கலையரசனின் நண்பனாக நடித்த பாலாவின் பங்களிப்பு கதைக்கு பலம் சேர்த்துள்ளது. ஸ்கிட் ஸ்டாண்ட் அப் காமெடி அம்சங்கள் இருந்தாலும் இயல்பான நடிப்பாலும், டைமிங்கினாலும் அசத்திவிட்டார். தவிர கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் மலையாளத் திரைப்படங்கள் போல நம்முடைய திரைப்படங்கள் இல்லையே எனும் குறையை முழுக்க முழுக்க கதையை நம்பி எடுக்கப்பட்ட இப்படம் நீக்கியுள்ளது.

இந்தப் படத்தில் நெகடிவ்வாக எந்த விஷயம் இல்லை. குடிகாரராகக் காட்டப்படும் சித்தப்பு கூட குடித்துக் கொண்டே இருந்தாலும் யாரையும் கெடுப்பதில்லை. பொசுக்கென்று கோபப்படும் ஜோசியரும் அந்த அளவுக்கு வன்மமாகக் காண்பிக்கபடவில்லை. இப்படி ஒரு ஃபீல் குட் பாசிட்டிவ் படத்தைப் பார்த்து உண்மையில் அதிக காலமாகிவிட்டது. குறை என்று சொல்லவேண்டுமெனில் ஒரு காட்சியில் அண்ணனுக்காக பாருக்குச் சென்று கலையரசன் சண்டையிடும் காட்சி. இரண்டு முறை பாட்டிலால் குத்தப்பட்டும் அவருக்கு காயம் படாமல் இருப்பது ஆச்சரியம் தான். முதல் பாதியில் காமெடிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை காதலுக்கும் கொடுத்திருக்கலாம். தமிழ் சினிமாவில் தான் ஒரே பாடலில் எல்லாமும் நடந்துவிடும், அவ்வகையில் கார்த்தி சுபாவின் காதலும் ஒரே பாடலில் கனிந்துவிடுகிறது. இடைவெளிக்கு முன்னால் அருமையான டிவ்ஸ்ட் வைத்திருந்த இயக்குநர் இடைவெளிக்குப் பின் கதையை நேர்க்கோட்டில் நகர்த்திச் செல்கிறார். தவிர எதிர்ப்பார்த்தவை எதிர்ப்பார்த்த விதத்தில் திரையில் நடப்பது சில சமயம் சலிப்பூட்டுகிறது. இறுதிக்காட்சியை சற்று விறுவிறுப்பாக்கியிருக்கலாம். இவற்றையெல்லாம் குறையென்று சொல்லிவிட முடியாது. அடுத்தடுத்த படங்களில் இயக்குனர் இவற்றை தவிர்க்க வேண்டும் என்பதுதான்  நோக்கம்.

குடும்பங்கள் சிதைந்து கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் அண்ணன் தம்பி பாசம், குடும்ப உறவுகளை பேணுதல் போன்ற விஷயங்களை உள்ளடக்கிய இந்தப்படம் வெளிவந்தது மிகவும் அவசியமான ஒன்றாகும். ராஜா மந்திரி படத்தை கொண்டாட வேறெந்த காரணமும் தனியாகத் தேவை இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com