தமிழின் முதல் மாய எதார்த்த திரைப்படம் ‘பஞ்சுமிட்டாய்’

சிறுகதை, அல்லது நாவல்களில் தான் நாம் மாய எதார்த்தவாதத்தைப் படித்திருப்போம். சில ஆங்கிலப்
Updated on
2 min read

சிறுகதை, அல்லது நாவல்களில் தான் நாம் மாய எதார்த்தவாதத்தைப் படித்திருப்போம். சில ஆங்கிலப் படங்களிலும் அந்த யுக்தி கையாளப்பட்டிருக்கிறது. முதல்முறையாக மாய எதார்த்தவாத யுக்தியை தமிழ்த் திரையில் கையாண்டு, சொல்லப்பட்ட கதை தான் பஞ்சுமிட்டாய் திரைப்படம்.

ஜேபி.சாணக்யா, எழில் வரதன், கோபாலகிருஷ்ணன் மற்றும் எஸ்.செந்தில்குமார் ஆகிய நான்கு எழுத்தாளர்கள் திரைக்கதை  எழுதியுள்ளார்கள். இசை டி.இமான், பாடலாசிரியர் யுகபாரதி. ‘மை வொஃப் ரொம்ப ப்யூட்டிஃபுல்லு….’ பாடல் யூ டியூப்பில் அதிகம் பார்க்கப்பட்டு இளைஞர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ஒளிப்பதிவு மகேஷ் கே.தேவ், படத்தொகுப்பு ராம்சுதர்சன். இப்படத்தை எஸ்.கணேஷ் மற்றும் எம்.எஸ்.வினோத்குமார் தயாரித்துள்ளனர். நடிகர்கள் மா.கா.பா.ஆனந்த், நிகிலா மற்றும் மூடர் கூடம் புகழ் சென்றாயன் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்துள்ளார்.

பஞ்சுமிட்டாய் திரைப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.மோகன் இயக்குனர் அமீரிடம் பருத்தி வீரன் மற்றும் யோகி திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சிக்காக 11 குறும்படங்களை இயக்கியுள்ளார். ‘தபேலா வாசித்த கழுதை, களறு ஆகிய இரண்டு குறும்படங்களுக்கு விருது வாங்கியுள்ளார்.

இயக்குனர் எஸ்.பி. மோகனிடம் பேசிய போது அவர் பஞ்சுமிட்டாய் திரைப்படமாக்கம் பற்றி தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பஞ்சுமிட்டாய் திரைப்படம் திரைப்படம் எந்த விதத்தில் மற்ற படங்களிலிருந்து வித்தியாசப்படுகிறது?

இந்தியாவின் முதல் மாய எதார்த்த திரைப்படம் என்பதால் கண்டிப்பாக இப்போது வரும் படங்களிலிருந்து வித்தியாசப்படும்.

மாய எதார்த்த திரைப்படம் என்றால் என்ன?

நம்பமுடியாத நிகழ்ச்சிகளை, நம்பக் கூடியவற்றுடனும், நடைமுறையுடனும் இணைத்து ஒரு மாயத்தோற்றத்தினை உருவாக்கும் போக்கு தான் மாய எதார்த்தம். இது போல, இப்படத்தின் கதாநாயகன் தான் பார்க்கும் உண்மை நிகழ்ச்சிகளை கற்பனையில் மிகைப்படுத்தி பார்க்கிறான். இதனால் என்ன நடக்கிறது என்பது தான் திரைக்கதையின் சுவாரசியம்.

இந்தத் திரைப்படத்தின் தலைப்பின் பெயர் காரணம் என்ன?

கலர் கான்செப்ட் இந்தப் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பஞ்சுமிட்டாய்களின் நிறத்திற்கும் படத்திற்கும் ஒரு மறைமுகத் தொடர்பு இருக்கிறது. தவிர ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத காலகட்டம் ஒன்று உண்டு என்றால் அது அவர்களின் பால்ய காலமாகத் தான் இருக்கும். அந்தப் பருவத்தில் நமக்கு பிடித்த விஷயங்களும் ஒன்று இனிப்பு. பஞ்சுமிட்டாய் சுவைக்காதவர்கள் இருக்கிறார்களா என்ன? காற்றில் பறக்கும் லேசான பஞ்சு போன்ற, அதே சமயத்தில் எல்லோருக்கும் பிடித்த பஞ்சுமிட்டாயை வாயில் போட்டவுடனே இளகி உள்ளே செல்வதுபோல் இந்த படத்தின் உணர்வுகளும் நமக்குள்ளே இளகிச் செல்லும். இப்படி தலைப்பிற்கான காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம், உண்மையில் நச்சென்று ஒரு டைட்டில் கொஞ்சம் பொருத்தமாகவும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து பஞ்சுமிட்டாய் என்று வைத்தேன்.

இந்தத் திரைப்படத்தின் தலைப்பின் லோகோவிலுள்ள கழுதையை வைத்தற்கான காரணம்?

படம் பார்க்கும் ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்தவும், சென்டிமென்டிற்காகவும் கழுதை மறைமுகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. படம் பார்த்தபிறகு கண்டிப்பாக இதன் அர்த்தம் இன்னும் தெளிவாக புரியும்.

இந்தப் படம் எல்லா தரப்பினரையும் திருப்திபடுத்துமா?

இந்தப் படம் வரிவிலக்கு வாங்கி இருப்பதால் கண்டிப்பாக எல்லா வயதினரும் பார்த்து ரசிக்கக் கூடியதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்தப் படத்தின் கரு, மொழியைத் தாண்டி ரசிக்கப்படும் என்று நம்புகிறேன்.

நடிகர்கள் பற்றி…

மா.கா.பா ஆன்ந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். காமெடி காட்சியாகட்டும், எமோஷனல் காட்சியாகட்டும் மா.கா.பா அற்புதமாக நடித்துள்ளார். கதாநாயகி நிகிலாவும் போட்டி போட்டு நடித்துள்ளார். படம் பார்த்தவுடன் நிச்சயம் சென்றாயனை நீங்கள் பாராட்டுவீர்கள்.

இது அவார்ட் படமா, கமர்ஷியல் படமா?

இது முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான பொழுதுபோக்குப் படம். காமெடி, செண்டிமெண்ட், டிராமா என்று கமர்ஷியல் விஷயங்கள் அத்தனையும் உள்ளடக்கியதுதான். படம் பார்த்தால் உங்களுக்கே தெரிந்துவிடும். விரைவில் வெளிவர இருக்கிறது. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com