

நுரையீரல் பிரச்னை, சிறுநீரகப் பிரச்னையால் சிகிச்சை பெற்று வந்த கலாபவன் மணி, சனிக்கிழமையன்று கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு நிம்மி என்கிற மனைவியும் ஸ்ரீலட்சுமி என்கிற மகளும் உள்ளார்கள்.
கலாபவனின் மரணம் குறித்து பிரபல நடிகர் மம்மூட்டி மிகவும் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
ஒரு கூடை நிறைய மங்குஸ்தான் பழங்களையும் அதன் மரக்கன்றுகளையும் மணி என் வீட்டுக்கு எடுத்துவரும் காட்சியை என்னால் எப்படி மறக்க முடியும்? அவன் இறந்துவிட்டான் என்பதை இன்னும் என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நான் பெங்களூரூவில் ஒரு படப்படிப்பில் பரபரப்பாக இருந்தேன். அப்போது டி.வி சானல்களில் ஸ்க்ரால் நியூஸ் பார்த்து தான் மணி இறந்த செய்தியை அறிந்தேன். மரணம் இந்த முறை எனக்கு மிகவும் நெருங்கிய ஒருவனை காவு வாங்கி விட்டது. அது நான் உடன் பிறந்தவனாகவே நினைக்கும் பிரியமானவனை இப்படி ஒரேடியாக பிரித்து எடுத்துச் சென்றுவிட்டதே!. என்னை எப்படி ஆறுதல்படுத்திக் கொள்வேன் என்றே தெரியவில்லை.
மணியைப் பொருத்தவரையில் என் வீடு அவனுக்கு இன்னொரு வீடு. எனக்கு அவன் இளைய தம்பியைப் போன்றவன். அவனும் என்னை தன் பெரிய அண்ணாவாகவே பாவித்தான். என் வீட்டுக்கு என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் பணிவுடன் தலை குனிந்தபடியேதான் வருவான். எதாவது தப்பு செய்திருந்தால் லேசாக கலங்கிய கண்களுடன் இருப்பான். நான் எதிரில் வரும் போது அவன் புகைத்துக் கொண்டிருந்தால், உடனே அதை மறைத்துக் கொள்வான். என்னை எவ்வித பாசாங்குமின்றி மிகவும் நேசித்தவன் அவன்.
‘மறுமலர்ச்சி’ என்ற தமிழ்ப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்த போது அதன் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்து கொண்டிருந்தது. படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த ஒரு நகைச்சுவை நடிகர் வராமல் போகவே, நான் மணியைப் பற்றி இயக்குநரிடம் சொன்னேன். அவனை அழைத்து நடிக்க வைக்கலாம், ஆனால் எக்காரணம் கொண்டும் அவனை திருப்பி மட்டும் அனுப்பிவிட வேண்டாம் என்று இயக்குநரிடம் உறுதியளிக்கச் சொன்னேன். ஏனென்றால் ஒரு திறமையான கலைஞனை ஆசை காட்டி மோசம் செய்துவிடக் கூடாது என்று நினைத்ததால் தான். அவர்களும் அவனை ஃபோனில் அழைத்துப் பேசியிருக்கிறார்கள். ஆனால் தமிழ் தெரியாது என்ற காரணத்தால் அந்த வாய்ப்பை மணி ஏற்றுக் கொள்ளவில்லை. மணிக்கு உடனே நான் ஃபோன் செய்து கொஞ்சம் கோபமாகத் திட்டினேன். இது ஒரு நல்ல வாய்ப்பு மணி என்று எடுத்துச் சொன்னதும் அவன் உடனே அதை ஏற்று அடுத்த நாள் காலையில் சென்னையில் இருப்பதாக வாக்குக் கொடுத்தான். அது தான் மணியின் தமிழ்ப் பட ஆரம்பம். அதன் பிறகு தமிழ்ப்படங்களில் அவனுக்கான ஒரு இடமும் நல்ல பேரும் புகழும் கிடைத்தது.
நான் சாலக்குடி அருகே எங்காவது படப்பிடிப்புக்காக வந்திருக்கிறேன் என்று தெரிந்துவிட்டால் போதும். மணி சிக்கன், மட்டன், மசாலா பொருட்களை எடுத்துக் கொண்டு தன் நண்பர்களுடன் அங்கே ஆஜராகிவிடுவார்கள். அவர்களுடன் ஒரு சமையல்காரரையும் அழைத்துவருவார்கள். மணியும் கூட நன்றாகச் சமைக்கத் தெரிந்தவன். எனக்குப் பிடித்தவற்றை எல்லாம் அருமையாகப் பார்த்துப் பார்த்துச் சமைத்துத் தருவான் அவன். நான் ரசித்து ருசித்துச் சாப்பிடுவதைப் பார்க்க அவனுக்கு அவ்வளவு ஆனந்தம். அத்தனை அன்புடன் அந்த உணவை சமைத்திருப்பான்.
ஆரம்பத்தில் நாங்கள் மணியை ‘கார்ல் லூயிஸ்’ என்றுதான் செல்லமாக அழைப்போம். அந்த அளவிற்கு உடற்கட்டான ஆள் அவன்.
மணியின் மீது ஏதாவது சிறிய புகார்கள் கேள்விப்பட்டு அவனை ஃபோனில் அழைத்து விசாரிக்கும் போது, மறுப்பு எதுவும் சொல்லாமல் அப்பிராணி போல நான் கூறும் அறிவுரைகளைக் கேட்டபடி சரிங்கண்ணா சரிண்ணே இனிமே அப்படி நடக்காதண்ணே என்று உறுதி அளிப்பான்.
சினிமாவில் மலையாள நாட்டுப்புறப் பாடல்களுக்கு ஒரு புது வீச்சை அளித்தவன் மணி. நூற்றுக்கணக்கான நாட்டுப்புற பாடல்களை தொகுத்து அவனே அவற்றை எழுதும் அளவிற்கு ஆர்வம். அதன்பிறகு இதற்கென ஒரு குழுவை ஆரம்பித்திருந்தான் மணி. அது இன்னும் பெரிய அளவில் அவன் கொண்டு போயிருக்க வேண்டியது.
ஆயிரக்கணக்கான மலையாளிகள் மட்டுமல்லாமல் அரபு நாடுகளில் அம்மொழி தெரியாத மக்கள் கூட பலர் மணியின் பாட்டுக்கு ஏற்றவாறு ஆடுவதை நானே பார்த்திருக்கிறேன். மணியின் கீதம், அவனுடைய உடல்மொழி மொழி கடந்து நாடு கடந்து அவனை அனைவருக்கும் அடையாளப்படுத்தி உள்ளது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.