களி - திரை விமரிசனம்

களி என்றால் ரெளத்திரம்… கட்டுக்கடங்காத கோபம். எதற்கடுத்தாலும் அத்தகைய கோபம் கொள்பவன் சித்தார்
களி - திரை விமரிசனம்
Updated on
3 min read

களி என்றால் ரெளத்திரம்… கட்டுக்கடங்காத கோபம். எதற்கடுத்தாலும் அத்தகைய கோபம் கொள்பவன் சித்தார்த் (துல்கர் சல்மான்) பள்ளி நாட்களிலிருந்து கல்லூரி காலம் வரை அடி தடி சண்டைகளில் முன் நிற்பவன். எதனால் அவன் கோபம் தூண்டப்படும் என்று சொல்லவே முடியாத அளவுக்கு ஆத்திரம் தலைக்கேறி எதிரில் இருப்பவர்களை துவம்சம் செய்துவிடுவான். அவனுடைய காதலி அஞ்சலி (சாய் பல்லவி). இருவர் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு ஏற்படவே, கல்லூரிப் படிப்பை முடித்தவுடனே பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

சித்தார்த்துக்கு எதற்கெல்லாம் கோபம் வரும் என்றே சொல்ல முடியாது. யாரேனும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால், அதிக சத்தம் கேட்டால் என இயல்பு நிலையிலிருந்து சிறிது மாற்றம் என்றாலும் கூட அவனால் அதனுடன் ஒத்துப் போக முடியாது. பதற்றமும் எரிச்சலும் இணைய உடனே அதற்கு மாற்றாக எதையாவது செய்வான். அவனை சாந்தப்படுத்தும் ஒரே ஒரு விஷயம் அஞ்சலி மட்டுமே. ஆனால் அவளிடமும் அவன் சிடுசிடுப்பைக் காட்டத் தவறுவதில்லை. எப்படியோ ஒரு பாங்க் வேலை கிடைக்க அதில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள அவன் கடினமாகப் போராட வேண்டியிருக்கிறது. தனக்கான ஒரு குடும்பம் அமைந்துவிட்டது அஞ்சலியை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்வு கூடவே, மிகவும் கஷ்டப்பட்டு அலுவலகச் சூழலில் தன்னைப் பொருத்திக் கொள்கிறான். அடிக்கடி முதுகில் தட்டிப் பேசும் சக ஊழியன் பிரகாசம், எதிர் சீட்டிலிருந்து காதல் கணை வீசும் மத்திய வயதுப் பெண் மேலாளர், எரிச்சலூட்டும் கேள்விகளைத் தொடர்ந்து கேட்கும் வாடிக்கையாளர்கள் என அவனுடைய கோபத்திற்குத் தூபம் போட நிறைய விஷயங்கள் தினந்தோறும் நடந்தேறும். ஆனால் எல்லாவற்றையும் பொறுமையாக சகித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் கோபத்தை அடக்கிக் கொள்கிறான் சித்து. ஒருசில சமயம் அடக்கமாட்டாமல் எரிச்சல் வரும் போது கழிப்பறைக்குள் சென்று ஓவென்று கத்திவிட்டு திரும்புவான்.

அவனுடைய காதல் மனைவி அஞ்சலியோ இவனுக்கு நேர் எதிர் குணமுடையவள். கோபமே வராதவள். எல்லோரிடமும் சிரித்துப் பேசும் இயல்புடையவள். ஃபோனில் தன்னை எரிச்சல் படுத்தும் ஏதோ ஒரு ஆளைக் கூட மன்னிக்கும் சுபாவம் உடையவள். கடைகளில் வெளியில் தன்னை உற்று நோக்கும் ஆண்களின் பார்வைகளை புறம் தள்ளி தன் போக்கில் போய்க் கொண்டிருப்பவள். எளிதில் மன்னிக்கும் குணம் அவளுடைய அழகுக்கு அழகு சேர்க்கும் ஒன்று. சித்துவின் கோபம் அவளையும் பாதிக்க, பல தடவை அவனிடம் அது குறித்துப் பேசி அவனை இயல்பாக இருக்கச் செய்வாள். ஒரு நாள் வீட்டுக்குள் நுழையும் போது பக்கத்து வீட்டுச் சிறுவன் ஹாலில் டிவியை அதிக சத்தத்துடன் ஒலிக்கச் செய்து அஜித் நடித்த வேதாளம் படப் பாடலை முழு சவுண்டில் பார்த்து அதற்கேற்றபடி சோபாவில் குதித்து ஆட, சித்து ஆத்திரம் கொள்கிறான். அந்தப் பையனை வெளியேற்றிவிடும் வரை அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. இதைக் கவனித்த அஞ்சலி அவனிடம் இந்தச் சுபாவம் இப்படியே தொடர்ந்தால் வாழ்க்கையை எதிர்கொள்வது மிகவும் கடினம். நமக்கு மனிதர்கள் தேவை என்று அன்பாகச் சொல்ல அவள் வார்த்தைக்குக் கட்டுபடுகிறான் சித்து.

தன் தங்கையின் திருமணத்துக்குக் மசினக்குடிக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் தருவாயில் சித்துவுக்கும் அவளுக்கும் மனக்கசப்பு ஏற்பட நள்ளிரவில் தனியாக வீட்டை விட்டு வெளியேறுகிறாள் அஞ்சலி. கோபத்தில் அவளை அனுப்பிவிட்ட சித்து சற்று கோபம் தணிந்தவுடன் அவளைத் தேடி காரில் விரைகிறான். அஞ்சலியை திருமணம் ஊரில் பத்திரமாக விட்டு விடுகிறேன் என்று சொல்லி அழைக்கிறான். இருவரும் மெளனமாக பயணம் செய்யும் போது அந்த இரவில் அவர்களுக்கு ஏற்படும் திகில் அனுபவம் தான் மீதிக் கதை.

முதல் பாதி சண்டை, காதல், திருமணம் என்று மெல்லிசையாக போய்க் கொண்டிருக்கும் இத்திரைப்படம் இடைவெளிக்கு பிறகு ஜெட் வேகம் பிடிக்கிறது. அவர்களின் காரை இடிக்கிறது ஒரு லாரி. கோபத்துடன் அந்த லாரியை விரட்டிப்பிடித்து முன் நிறுத்தி அந்த ட்ரைவரை அடிக்க சித்து துடித்த போது அஞ்சலி அவனிடம் கெஞ்சி தகராறு வேண்டாம் என்று சமாதானப்படுத்துகிறாள். வேறு வழியின்றி சித்து அவள் சொல் பேச்சைக் கேட்கிறான். அதன் பின் சிறிது தூரத்தில் அஞ்சலி பசிக்கிறது என்று சொல்லவே, தமிழ்நாட்டு எல்லையில் இருக்கும் ஒரு மோட்டலில் இருவரும் சாப்பிட இறங்குகிறார்கள். அங்கு அவர்களுக்கு முதல் அதிர்ச்சி அதே லாரி ட்ரைவர் அங்கு சாப்பிட இறங்கியிருந்தான். தவிர பகலில் மோட்டலாகவும் இரவில் நிழல் காரியங்கள் நடக்கும் இடமாகவும் இருக்கும் அந்த இடம் முழுக்க ரெளடிகளால் சூழப்பட்டிருக்கிறது. இது பற்றித் தெரியாத அவர்கள் அங்கு சாப்பிட்டு முடித்தவுடன் பணம் இல்லாமல் சிக்கிக் கொள்கிறார்கள். கிரெடிட் கார்டை சித்து தர அதை அவர்கள் திருப்பித் தந்து சற்று தொலைவில் இருக்கும் ஏடிஎம்மில் பணம் எடுத்துத் தரச் சொல்கிறார்கள். அதுவரை அஞ்சலி அங்கே இருக்க வேண்டும் என்று சொல்ல, சித்துவின் நாடி நரம்புகள் கோபத்தில் முறுக்கேறுகிறது. அஞ்சலி அவனிடம் பிரச்னை வேண்டாம். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று சொல்ல, அவளிடம் கார் சாவியும் கார்ட்டையும் தந்து அனுப்புகிறான்.

மோட்டலில் என்ன நடந்தது? தனியாக காரோட்டிச் சென்ற அஞ்சலியின் நிலை என்னவாயிற்று என்பதை ஒருசில காட்சிகளில் பரபரப்பாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குனர் சமீர் தாஹிர். வழக்கமான ஒரு படத்தில் வேகமான இந்தக் காட்சிகள் இல்லையென்றால் படத்தைப் பற்றிச் சொல்வதற்கு எதுவும் இருந்திருக்காது.

இந்தப் படத்தின் மற்றொரு வெற்றி துல்கர் சல்மான் சாய் பல்லவி ஜோடி. சாய் பல்லவியின் மலையாளப் பேச்சு ரசிக்கும்படி உள்ளது. மலையாளக் கரையோரத்திலிருந்து பல நடிகைகளை கோலிவுட் சுவீகரித்து கொண்டாடிக் கொண்டிருக்க சாய் பல்லவி போன்ற தமிழ்ப் பெண்கள் மலையாளத் திரைப்படங்களில் கொண்டாடப்படுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயம். அதுவும் சாய் பல்லவியின் முதல் படமான பிரேமம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இயல்பான நடிப்பும், எளிமையும் அழகும் கூடிய தோற்றமும், பளிச்சென்ற சிரிப்பும் சாய் பல்லவியின் ப்ளஸ். இயக்குனர் துல்கர் சல்மான் சாய் பல்லவி ஜோடியை கவிதையாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

படத்தில் தேய்வழக்குக் காட்சிகள் நிறைய இருந்தாலும் அதை அலுக்காமல் கூடுமானவரை புதியதாகக் காட்ட முயற்சி செய்துள்ளார்கள். படம் முழுவதும் இருவரே பிரதானப் பாத்திரங்கள். அவர்களைச் சுற்றி சம்பவங்கள் இறுக்கமாகப் பின்னப்பட்டுள்ளது. அதை நயமாகச் சொல்லிய விதம் உண்மையில் பாராட்டுக்குரியது. அடுத்த நொடி என்பது நம் கையில் இல்லை. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சூழலில் சிக்கிக் கொள்ளும் போது ஒரு மனிதன் எப்படி தன் அறிவையும் வலிமையையும் பயன்படுத்தி அதிலிருந்து தப்ப வேண்டும் என்பதை இரண்டு மணி நேரத்தில் நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியதற்கு இயக்குனர் சமீரைப் பாராட்டலாம். பாடல்கள் சுமார் ரகம். பின்னனி இசை நன்றாக இருந்தாலும் இது ஒரு ஆங்கிலப் படத்திலிருந்து எடுத்துக் கையாளப்பட்டது என்பதை இசையமைப்பாளர் கோபி சுந்தர் ஒப்புக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com