திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்

கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகள் கொண்ட பஞ்சு அருணாசலம் (75) மாரடைப்பு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்

கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகள் கொண்ட பஞ்சு அருணாசலம் (75) மாரடைப்பு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

ஏற்கெனவே இருதயக் கோளாறு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பஞ்சு அருணாசலத்தின் உயிர் செவ்வாய்க்கிழமை முற்பகலில் தூக்கத்திலேயே பிரிந்தது.

இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர்: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல் பட்டியில் பிறந்தவர் பஞ்சு அருணாசலம். பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன், கவியரசு கண்ணதாசன் ஆகிய இருவரும் இவரது சித்தப்பாக்கள். கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் மீது ஆர்வம் கொண்ட பஞ்சு, அவர் மூலம் சென்னைக்கு வந்தார்.

சினிமா மீது பஞ்சுவுக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்த அவரது சித்தப்பா ஏ.எல்.சீனிவாசன் சென்னையில் இயங்கி வந்த பரணி ஸ்டூடியோவில் வேலைக்கு சேர்த்து விட்டார்.

பின்னர் கண்ணதாசன் நடத்தி வந்த தென்றல் பத்திரிகையில் அவரது உதவியாளராக சேர்ந்தார்.

பாடலாசிரியராக அறிமுகம்: 1962-ல் வெளியான சாரதா படத்துக்கு பாடல் எழுதினார். அதில் அவர் எழுதிய ""மணமகளே மருமகளே வா வா'' என்ற பாடல் பெரிய புகழைப் பெற்றுத் தந்தது.

பின்னர், நாகேஷ் கதாநாயகனாக ஹலோ பார்ட்னர் படத்துக்கு கதை எழுதினார். அதைத் தொடர்ந்து ஏராளமான படங்களுக்கு கதை வசனம் எழுதினார் பஞ்சு அருணாசலம். கே.ஏ.தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், சோ நடிப்பில் வெளியான "கல்யாணமாம் கல்யாணம்' இவரது ஆரம்பகால கதை வசன முயற்சியில் பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து, சிவாஜி நடித்த "வாழ்க்கை', "அவன்தான் மனிதன்', "ரஜினி நடித்த ராஜா சின்னரோஜா', "தம்பிக்கு எந்த ஊரு', "பாயும் புலி', "எங்கேயோ கேட்ட குரல்', "முரட்டுக்காளை', "கமல் நடித்த சிங்காரவேலன்', "உயர்ந்த உள்ளம்', "தூங்காதே தம்பி தூங்காதே', "சகலகலா வல்லவன்', "மீண்டும் கோகிலா', "உல்லாசப் பறவைகள்', "எல்லாம் இன்பமயம்', விஜயகாந்த் நடித்த "எங்கிட்ட மோதாதே' உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு திரைக்கதை எழுதினார்.

பின்னர், தனது நண்பர் பிலிமாலயா ராமச்சந்திரனுடன் இணைந்து "உறவு சொல்ல ஒருவன்' படம் மூலம் சினிமா தயாரிப்பிலும் இறங்கினார்.

இவரிடம் உதவியாளராக இருந்த செல்வராஜ் எழுதிய கதைக்கு இவர் திரைக்கதை எழுதிய படம் அன்னக்கிளி. சிவக்குமார், சுஜாதா, நடிப்பில் தேவராஜ் மோகன் இயக்கிய இப்படத்தின் மூலம்தான் இளையராஜா தமிழ் திரையுலகில் நுழைந்தார்.

வெற்றிகரமான தயாரிப்பாளர்:

 ரஜினிகாந்த் நடித்த "ஆறிலிருந்து 60 வரை', "எங்கேயோ கேட்ட குரல்', "குரு சிஷ்யன்', "வீரா', கமல்ஹாசன் நடித்த "கல்யாணராமன்', "ஜப்பானில் கல்யாணராமன்', "மைக்கேல் மதன காமராஜன்', பாக்யராஜ் இயக்கி நடித்த "ராசுக்குட்டி', சரத்குமார் நடித்த "ரிஷி', விஜயகாந்த் நடித்த "அலெக்ஸாண்டர்', சிவக்குமார் நடித்த "ஆனந்த ராகம்', சூர்யா நடித்த "பூவெல்லாம் கேட்டுப்பார்', சேரன் கதாநாயகனாக அறிமுகமான "சொல்ல மறந்த கதை', ரகுமான் நடித்த "தம்பி பொண்டாட்டி' ஆகிய படங்களை தனது பி.ஏ.ஆர்ட்ஸ் பட நிறுவனம் மூலம் தயாரித்தார். இவரது தயாரிப்பில் வெளிவந்த படங்கள் வெற்றிகரமான படங்களாக அமைந்தன.

"புதுப்பாட்டு', "கலிகாலம்', தம்பி பொண்டாட்டி ஆகிய படங்களின் மூலம் இயக்குநராகவும் முத்திரை பதித்தார் பஞ்சு. பாடலாசிரியராகவும் முத்திரை பதித்த பஞ்சுவின் பாடல்கள் தமிழ் திரையுலகில் தனித்துவம் பெற்று விளங்குகின்றன.

விருதுகள்: இவர் கதை வசனம் எழுதி தயாரித்த "எங்கேயோ கேட்ட குரல்' படத்துக்கு தமிழக அரசின் சிறந்தப் படத்திற்கான முதல் பரிசும், தங்கப் பதக்கமும் கிடைத்தது. அதே போல ரஜினிகாந்த் நடித்த "பாண்டியன்' படத்துக்காக சிறந்த கதை ஆசிரியருக்கான விருது பெற்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

இறுதிச் சடங்கு:

பஞ்சு அருணாசலத்தின் உடல் தியாகராய நகர் பாகீரதி அம்மாள் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர்கள் பாரதிராஜா, சுந்தர்.சி, நடிகர்கள் சிவகுமார், சூர்யா, நடிகை குஷ்பூ உள்ளிட்ட திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த பஞ்சு அருணாசலத்துக்கு மனைவி மீனா, மகன்கள் சண்முகம், சுப்பிரமணியம் (நடிகர் சுப்பு), மகள்கள் கீதா, சித்ரா உள்ளனர்.

பஞ்சு அருணாசலத்தின் மகள் மற்றும் மகன் இருவரும் அமெரிக்காவில் இருப்பதால் அவர்கள் இருவரும் சென்னை திரும்பியதும் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. அதுவரை அவரது உடல் சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com