
தேர்தல் தோல்விக்குப் பிறகு, தமிழன் என்று சொல் படத்தில் நடித்து வருவதாக விஜய்காந்த் அறிவித்துள்ளார்.
2010-ல் விருதகிரி படத்தில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த் பிறகு அரசியல் தீவிரமாக கவனம் செலுத்தியதால் படங்களில் நடிக்காமல் இருந்தார். பிறகு சமீபத்தில், தனது இளைய மகன் சண்முக பாண்டியனுடன் இணைந்து தமிழன் என்று சொல் என்கிற படத்தில் நடிக்க சம்மதம் அளித்தார். அருண் பொன்னம்பலம் இயக்கும் இந்தப் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். சகாப்தம் படத்துக்குப் பிறகு சண்முக பாண்டியன் நடிக்கும் 2-வது படம் இது.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது விஜய்காந்த் கூறும்போது: அரசியல் பிரவேசத்துக்குப் பின்னர் சினிமாவில் நடிக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தேன். சண்முகபாண்டியன் நடித்து வருவதால், அவருக்காக எனது மனைவி பிரேமலதாவும், மூத்த மகன் விஜய் பிரபாகரும் பல கதைகளைக் கேட்டு வந்தனர். அப்போது நானும் இந்தக் கதையைக் கேட்டேன். அரசியலில் பல பணிகள் என்று சொல்லி விலகியபோதும், என் மூத்த மகன் விஜய் பிரபாகர் கேட்டுக் கொண்டதால் நடிக்க வந்தேன். சண்முக பாண்டியனுக்காக இந்தப் படத்தில் நடிக்கவில்லை. இது என் மொழி படம். தமிழுக்காகவும், இந்தக் கதையில் இருந்த தமிழ் உணர்வுக்காகவும் மீண்டும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றார்.
2005-ம் ஆண்டு தேமுதிகவைத் தொடங்கிய விஜயகாந்த், 2006-ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். ஆனால், விஜயகாந்த் மட்டுமே விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். இருப்பினும் அந்தக் கட்சி 12 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர்ந்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கட்சி தொடங்கிய ஆறே ஆண்டுகளில்...திமுகவைக் காட்டிலும் அதிகமான இடங்களைப் பெற்றதால், கட்சி தொடங்கிய ஆறே ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலையை விஜயகாந்த் அடைந்தார்.
2016-ம் ஆண்டு தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணி முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து தேர்தலைச் சந்தித்த தேமுதிக, போட்டியிட்ட 104 இடங்களில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு, வைப்புத் தொகையையும் இழந்தார். தேமுதிக போட்டியிட்ட அனைத்துத் தொகுதியில் வைப்புத் தொகையை இழந்துள்ளது. 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 7.88 சதவீத வாக்குகளைப் பெற்ற தேமுதிக இம்முறை வெறும் 2.4 சதவீத வாக்குகளையே பெற்றது. இந்தத் தோல்வி தேமுதிக கட்சியை மிகவும் பாதித்துள்ள நிலையில் உடனடியாக தனது அடுத்தப் பணியைத் தொடங்கிவிட்டார் விஜய்காந்த்.
தமிழன் என்று சொல் படத்தில் நடித்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்காந்த் அறிவித்துள்ளார். படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.