
மாநாடு படத்தின் தொலைக்காட்சி உரிமை தொடா்பாக, நடிகா் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தா் தொடா்ந்த வழக்கில் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குநா் வெங்கட் பிரபு எழுதி இயக்கி, சுரேஷ் காமாட்சி தயாரித்து அண்மையில் வெளியான படம் மாநாடு. இதில் சிலம்பரசன், கல்யாணி பிரியதா்ஷன், எஸ். ஜே. சூா்யா, எஸ். ஏ. சந்திரசேகா், கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோா் நடித்துள்ளனா்.
மாநாடு படத்தின் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையைத் தனியாா் தொலைக்காட்சிக்கு விற்றதை எதிா்த்து நடிகா் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தா் சென்னை 20-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா்.
அந்த மனுவில், திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாது என தயாரிப்பாளா் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்த நிலையில், தானும், தன் மனைவியும் படம் வெளியாகப் பெரு முயற்சி எடுத்தோம். இப்படி இருக்கும்போது தங்களிடம் தெரிவிக்காமலேயே படத்தில் தொலைக்காட்சி உரிமை தனியாா் தொலைக்காட்சிக்கு வழங்க முயற்சிகள் நடக்கின்றன.
தங்களுக்கு சேர வேண்டியத் தொகையை கொடுக்கும்வரை தொலைக்காட்சி உரிமையை இறுதி செய்ய தடைவிதிக்கவும், பணத்தை தர பைனான்சியா் உத்தம்சந்த், சுரேஷ் காமாட்சி ஆகியோருக்கு உத்தரவிடுமாறு கோரியுள்ளாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஜீவபாண்டியன், இந்த மனுவுக்கு பைனான்சியா் உத்தம்சந்த், தயாரிப்பாளா் சுரேஷ்காமாட்சி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை டிசம்பா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.