ஜிவி பிரகாஷைக் காப்பாற்றியதா மல்ட்டி யுனிவர்ஸ்? அடியே திரைவிமர்சனம்

நடிகர்கள் ஜிவி பிரகாஷ் குமார், கெளரி கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள அடியே திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் இயக்கியுள்ளார். டைம் டிராவல் எனும் ஒன்றை அடிப்படையாக வைத்து அதில் காதல் கதை பேச முயற்சித்திருக்க
ஜிவி பிரகாஷைக் காப்பாற்றியதா மல்ட்டி யுனிவர்ஸ்? அடியே திரைவிமர்சனம்

நடிகர்கள் ஜிவி பிரகாஷ் குமார், கெளரி கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள அடியே திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். டைம் டிராவல் எனும் ஒன்றை அடிப்படையாக வைத்து அதில் காதல் கதை பேச முயற்சித்திருக்கும் இயக்குநரின் வெற்றி சாத்தியப்பட்டதா?

பொதுவாக தமிழ் திரைப்படத்தில் டைம் டிராவல் எனும் விஷயம் தற்காலத்தில் அதிகம் ரசிகர்களுக்கு பழக்கப்பட்டதுதான். அதை எந்தளவு சுவாரஸ்யமாகவும், புதுமையான கதை சொல்லல் வகையிலும் வழங்குகிறோம் எனும் அடிப்படையில் இருக்கிறது ஒரு இயக்குநரின் வெற்றி.

பள்ளிக் காலத்தில் கெளரி கிஷன் மீது காதல் வயப்படும் நடிகர் ஜிவி பிரகாஷ் அதை அவரிடம் சொல்ல முயற்சிக்கும் போது தனது பெற்றோரை இழந்துவிடுகிறார். அந்த இழப்பு அவரது காதல் பயணத்தை தடுத்து விடுகிறது. தனது பாடலுக்கு வந்த ஜிவி பிரகாஷ் குமாரின் பாராட்டுக் கடிதத்தை யார் எழுதியது எனத் தெரியாமலேயே அவரை விரும்ப ஆரம்பிக்கிறார் கெளரி கிஷன். சில ஆண்டுகளுக்குப் பிறகு, தான் எழுதிய கடிதத்தை கெளரி கிஷன் பாதுகாத்து வைத்திருப்பதையும் அவர் தன்னை விரும்பி தன்னைத் தேடி வருவதையும் அறிந்து கொள்ளும் ஜிவி பிரகாஷ் குமார் கெளரியிடம் காதல் சொல்ல முயலும்போது  ஒரு விபத்தை சந்திக்கிறார். இதனால் கெளரியிடம் எதுவும் சொல்ல முடியாமல் போக அவரோ கனடா பயணமாக ஆயத்தமாகிறார்.

மறுபுறம் விபத்தில் சிக்கிய பிறகு கண்முழிக்கும் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. விபத்தில் கிடைத்த ஒரு டைம் டிராவல் கருவியின்மூலம் வேறு உலகத்தில் இருக்கிறார் ஜிவி பிரகாஷ். அந்த உலகத்தில் கெளரி ஜிவி பிரகாஷின் மனைவியாக இருக்கிறார். அந்த உலகம் தனது நிஜ வாழ்ந்த உலகைத்தை விட வித்தியாசமாக இருக்கிறது. குழப்பத்தில் திரியும் ஜிவிக்கு ஒரு கட்டத்தில் நிலைமை புரிந்து காதல் வாழ்க்கை தொடங்க அந்த உலகம் அத்துடன் முடிவடைகிறது.

இதற்கிடையில் கெளரிக்கு வேறு ஒரு ஆணுடன் காதல் ஏற்படுகிறது. நிஜத்தில் கெளரியை அடைய துடிக்கும் உலகத்திற்கும், நினைவில் கணவன் மனைவியாக வாழும் வேறு ஒரு உலகத்திற்கும் இடையே சிக்கித் தவிக்கிறார் நடிகர் ஜிவி பிரகாஷ். அவரின் காதல் என்ன ஆனது? மல்ட்டி யுனிவர்ஸ் விஷயம் அவரது காதலை காப்பாற்றியதா என்பதே அடியே திரைப்படத்தின் கதை.

பேச்சுலர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நல்ல கதையை தேர்வு செய்திருக்கிறார் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார். டைம் டிராவல் கதை என்றாலும் அதற்குள் மல்ட்டி யுனிவர்ஸ் என முயற்சித்த புதிய விஷயம் நன்றாக கைகொடுத்திருக்கிறது. கோமாவில் ஒரு உலகம், நிஜத்தில் வேறு உலகம் என மாறி மாறி விரியும் காட்சிகள் படத்திற்கு சுவாரஸ்யத்தை கூட்ட உதவியிருக்கிறது. குறிப்பாக மல்ட்டி யுனிவர்ஸில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் இயக்குநரின் கற்பனைத் திறனை காட்டுகின்றன. அஜித் குமார் ஒரு கார் பந்தயக்காரர், ஏ ஆர் ரஹ்மான் ஒரு கிரிக்கெட் பயிற்சியாளர், விஜய்யின் யோகன் திரைப்படம், இசையமைப்பாளர் பயில்வான் ரங்கநாதன், இயக்குநர் கெளதம் மேனனாக வரும் வெங்கட் பிரபு, பிரதமர் கேப்டன் என புதிய விஷயங்கள் காட்சிக்கு காட்சி ரசிக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக தமிழ் சினிமாவின் பல காட்சிகளும், அம்சங்களும் நகைச்சுவைக்காக கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. குறிப்பாக இயக்குநர் அட்லியை கிண்டல் செய்த இடம். இரு வேறு உலகம் என்றாலும் அதில் டைம் மிஷினை பயன்படுத்துவது எனும் சிக்கலான விஷயத்தை ரசிகர்களுக்கு புரிய வைக்கத் தவறியிருந்தால் மொத்த முயற்சியும் வீணாகியிருக்கும். ஆனால் அதை சாதுர்யமாகத் தவிர்த்திருக்கிறார் இயக்குநர். குறிப்பாக டைம் மிஷினை வைத்து எப்படி மல்ட்டி யுனிவர்ஸுக்குள் போய் வருவது என கிராபிக்ஸ் காட்சிகளில் விளக்கியது சரியான அணுகுமுறை. காட்சிக்கேற்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார் நடிகை கெளரி. 96 திரைப்பட  பாணியில் அவர் பள்ளி உடையில் பாடுவது தொடங்கி ஜிவி பிரகாஷை நினைத்து கவலைப்படுவது வரை தனது நடிப்பாற்றலில் முன்னேறியிருக்கிறார் கெளரி.

இந்தப் படத்தில் நடிகர்கள் ஜிவி பிரகாஷ் குமார், கெளரி கிஷன் உடன் நடிகர்கள் வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். படத்தின் ஓரத்தில் காமெடி என்று இல்லாமல் படம் முழுக்க நகைச்சுவை காட்சிகள் மூலம் இவர்கள் கைகொடுத்திருக்கின்றனர். குடிபோதையில் மிர்ச்சி சிவாவும், ஜிவி பிரகாஷ் குமாரும் பேசிக் கொள்ளும் மல்ட்டி யுனிவர்ஸ் குறித்த உரையாடல் நன்றாக வந்திருக்கிறது.

முதல் பாதி நல்ல விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதியில் கதையை முடிக்க முடியாமல் ஒரே வட்டத்திற்குள் சுற்றி வந்தாரோ இயக்குநர் எனும் எண்ணம் எழாமல் இல்லை. முதல் பாதியில் சரியாக கதைக்குள் வந்த பின்னும் இரண்டாம் பாதியில் மல்ட்டி யுனிவர்ஸை ஏன் மீண்டும் விளக்க முயன்றார் இயக்குநர் எனும் கேள்வி ரசிகர்களுக்கு எழலாம். அதேபோல் மல்ட்டி யுனிவர்ஸில் வித்தியாசமாகக் காட்டிய பல விஷயங்கள் ஒரு கட்டத்திற்குள் மேல் மீண்டும் மீண்டும் தொடர்வது காட்சியின் தீவிரத்தைக் குறைக்கின்றன. தமிழ் சினிமாவின் கிண்டல் காட்சிகள் ஒரு கட்டத்தில்  நடிகர் சிவா நடித்த தமிழ்ப்படத்தைப் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது.

மல்ட்டி யுனிவர்ஸில் எல்லாம் மாறியிருக்க கதாநாயகியின் பெயர் மட்டும் செந்தாழினி எனத் தொடர்வது ஏன் எனப் புரியவில்லை.  தன்னுடைய நண்பன் தனது காதலியிடம் பொய் சொல்லி இருப்பதை அறியும் ஜிவி பிரகாஷ் எதற்காக மல்ட்டி யுனிவர்ஸில் சென்று கெளரியிடம் உண்மையைச் சொல்ல வேண்டும்? நிஜத்திலேயே அவருக்கு புரிய வைத்திருக்கலாமே? இப்படி ஆங்காங்கே சில திரைக்கதை ஒட்டைகள் எட்டிப் பார்க்காமல் இல்லை. அதேபோல் மல்ட்டி யுனிவர்ஸ் பாடல். ஏற்கெனவே சுற்றும் கதையில் ரசிகர்களை மேலும் சுற்ற விடுகிறது அப்பாடல். பின்னணி இசையும், திரைக்கதை உருவாக்கமும் படத்தை தப்பிக்கச் செய்ய உதவியிருக்கின்றன. அதிகப்படியான நீளமும், அவசியமற்ற பாடலையும் இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.

எனினும் முழுக்க முழுக்க இளைஞர்களைக் குறிவைத்து வந்திருக்கும் அடியே திரைப்படம் நல்ல எண்டர்டெயின்மெண்டை கொடுக்கத் தவறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com