சில்க் ஸ்மிதாவின் நிறைவேறாத ஆசை!

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாளையொட்டி...
சில்க் ஸ்மிதா I சினிமா எக்ஸ்பிரஸ்
சில்க் ஸ்மிதா I சினிமா எக்ஸ்பிரஸ்

1979 – முதல் படமான வண்டிச்சக்கரத்தில் சாராயக் கடையில் சேலை கட்டியபடிதான் வருவார் சிலுக்கு ஸ்மிதா. ஆனால், மறக்கவே முடியாது. வா மச்சான் வா... வண்ணாரப்பேட்டை... என்ற ஒரே பாடல் காட்சியின் மூலம் பிற்காலத்தில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு சினிமா ரசிகரையும் தன் பெயரை உச்சரிக்க வைத்தார் சில்க் ஸ்மிதா.

நீண்டதான ஒரு காலகட்டத்தில் சில்க் ஸ்மிதா இல்லாத திரைப்படமே இல்லை என்கிற நிலைமையும் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் ஸ்மிதாவின் அழகுக்கு மயங்காதவர் என்று யாராவது சொன்னால் அவர் பொய் சொல்கிறார் என்றுதான் பொருள்.

சரசரவென மேலே உயர்ந்துகொண்டே சென்றார் ஸ்மிதா. பிற்காலத்தில் ஒருகட்டத்தில் சின்னதாக ஒரு சரிவும் நேரிட்டது. 17 ஆண்டுகால திரை வாழ்க்கையில் 450-க்கும் மேற்பட்ட படங்கள்.

1996-ல் தன்னுடைய 35-வது வயதில், திடீரென ஒரு நாள், தன் வீட்டில் இறந்துகிடந்தார் ஸ்மிதா. தற்கொலை என்றார்கள். நிறைய காரணங்கள் சொன்னார்கள். இன்னமும்கூட அவருடைய மரணம் மர்மமான ஒன்றாகத்தான் தொடருகிறது.

தமிழ்த் திரையுலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் ஸ்மிதா. கவர்ச்சி வேஷங்களில் நடித்தாலும் பல்வேறு விஷயங்களில் திடமான கருத்துகளைக் கொண்டிருந்தவர் – நக்சல்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படையாகவே தெரிவித்தவர்!

நேர்காணல்களில் அவ்வப்போது நிறைய ஆசைகளைத் தெரிவித்திருப்பார். அனேகமாகப் பல நிறைவேறாமல் போய்விட்டிருக்கும் – நாவல்களில் வரும் சீரியஸான பாத்திரங்களில் நடிப்பதுவும்கூட அவற்றில் ஒன்று.

சில்க் ஸ்மிதா உச்சத்தை நெருங்கும் காலத்தில், 1982 ஏப்ரலில், சினிமா எக்ஸ்பிரஸுக்கு அளித்த நேர்காணலில் பட்டுக் கத்தரித்தாற்போல தன் கருத்துகளை அவர் கூறுகிறார்:

_ நடிக்க வரும்போதே கவர்ச்சியாகத்தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினீர்களா?

“கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். கவர்ச்சியாக நடிப்பதால் அவர் கவர்ச்சிக்கு மட்டுமே பொருத்தமானவர்; கதாபாத்திரத்துக்குப் பொருத்தமானவர் அல்ல என்று எப்படிச் சொல்ல முடியும்? ஜோதிலட்சுமி, ஜெயமாலினியெல்லாம்கூட அவ்வப்போது சில படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் தோன்றி நடிக்கவில்லையா? இப்போதும் சில நாவல்களைப் படிக்கிறபோது அதில் வருகிற ஒரு சீரியஸான பாத்திரத்தை ஏற்று நாம் நடித்தால் எப்படி இருக்கும்? என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வது உண்டு.”

_ சில்க் ஸ்மிதா என்றால் படு கவர்ச்சி, குறைந்த உடைகள், மயக்கும் கண்கள் என்ற இமேஜ் ஏற்பட்டுவிட்டதே, இந்த இமேஜை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறீர்களா?

“நிச்சயமாக. அதில் என்ன ஆட்சேபனை? நான் பெரும்பாலும் ஏற்று நடித்துள்ள கேரக்டர்கள் அப்படிப்பட்டவை. அதிலிருந்து எனக்கு அந்த மாதிரி இமேஜ் உருவாகியிருக்கிறது என்றால் அது என்னுடைய கேரக்டர்களுக்குக் கிடைத்த வெற்றியே தவிர வேறென்ன? ஒரு படத்தில் நடிக்கும்போது அதில் வரும் கேரக்டருக்குத் தகுந்தமாதிரிதான் காஸ்ட்யூம்ஸ், ஒப்பனை ஆகியவை அமைகின்றன. சில்க் ஸ்மிதா படத்தில் இருக்கிறார் என்றால் எந்த மாதிரி கேரக்டர் என்று சொல்லிவிட முடிகிறது அல்லவா? அதைத்தான் சொல்கிறேன். இது வரை நடித்துவந்துள்ள கேரக்டர்களின் வெற்றிதான் அதற்குக் காரணம். பல வகையான வெரைட்டி ரோல்களைச் செய்யத்தான் வேண்டும்.”

_ அலைகள் ஓய்வதில்லை படத்தில் சிறந்த கேரக்டரில் தோன்றியதைப் போல அதேமாதிரியில் வேறு ஏதேனும் கேரக்டரில் நடிக்கிறீர்களா?

“வண்டிச்சக்கரத்துக்குப் பிறகு கிளாமரான ரோல்களே வந்துகொண்டிருந்தபோது, பாரதிராஜா எனக்கு முற்றிலும் வித்தியாசமான வேஷத்தைக் கொடுத்து என்னுடைய நடிப்புத் துறையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். சாதாரணமாக, கிளாமராக நடித்து, கவர்ச்சி முத்திரை குத்தப்பட்டவர்கள் அந்த மாதிரி கேரக்டர்களை ஏற்று நடிக்கத் தயங்குவார்கள். அதுபோல எந்த டைரக்டரும் அந்த மாதிரி வேஷத்துக்கு ஒரு நடிகையைப் போடும்போது ஏற்கெனவே அதேமாதிரி நடித்திருப்பவர்களைத்தான் தேடிக்கொண்டு போவார்கள். ஆனால், பாரதிராஜா துணிச்சலாக எனக்கு அந்த வேஷத்தைக் கொடுத்தார். இன்றைக்கு என்னைச் சந்திக்கின்ற ரசிகர்களும் கடிதம் எழுதுகிற ரசிகர்களும் அலைகள் ஓய்வதில்லையில் என்னுடைய கேரக்டரையும் நடிப்பையும் வாயாரப் பாராட்டும்போது எனக்கே புல்லரிக்கிறது.

அலைகள் ஓய்வதில்லை படத்தில் சில்க் ஸ்மிதா
அலைகள் ஓய்வதில்லை படத்தில் சில்க் ஸ்மிதா

அந்தப் படம் எனக்கு அப்போது கிடைத்திராமல் தொடர்ந்து கிளாமராகவே தோன்றிக் கொண்டிருந்தால், ஒருவேளை எனக்கு அந்த வாய்ப்பே கிடைக்காமலேயே போனாலும் போயிருக்கலாம். நல்லவேளையாக ஆரம்ப கட்டத்திலேயே  நெஞ்சில் நிலைக்கிற மாதிரி ஒரு கேரக்டர் செய்திருக்கிறேன். ஐ யாம் வெரி ஹேப்பி. அதுபோல இன்னொரு கேரக்டர் செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால், அது மாதிரி அழகாக அமைய வேண்டுமே, ஐம்பது பெர்சன்ட் நம்பிக்கை இருந்தால்கூட முயற்சி செய்யலாம். பட்.. அந்த மாதிரி அமைவது அபூர்வம்.”

_ கவர்ச்சிக் காட்சிகளில் மிகவும் தாராளமாக நடிக்கிறீர்களே, குடும்பப் பெண்கள் அதை ரசிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

“கதையில் வரும் கேரக்டருக்கு ஏற்ற மாதிரிதானே நடிக்கிறேன். அலைகள்  ஓய்வில்லை படத்தில் டேவிட்டின் மனைவியாக குடும்பப் பெண்ணாக நடித்தேன். மற்ற படங்களில் வித்தியாசமான வேஷங்கள் போடும்போது தோற்றமும் நடிப்பும் வித்தியாசமாகத்தான் இருக்கும். எனக்கு தினசரி வருகிற நூற்றுக்கணக்கான ரசிகர்களின் கடிதங்களிலிருந்து அவர்கள் நான் கவர்ச்சியாக நடிப்பதையும் விரும்புகிறார்கள் என்று புரிந்துகொண்டிருக்கிறேன்.”

சில்க் ஸ்மிதா ஒருவேளை இப்போதும் உயிருடன் இருந்திருந்தால்... சிவாஜி கணேசனைப் போல, சாவித்திரியைப் போல நடிப்புத் திலகமாக ஒளிர்ந்திருப்பாரோ என்னவோ?

[டிச. 2 – சில்க் ஸ்மிதா பிறந்த நாள்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com