பேய்களுடன் போட்டி! வென்றாரா சந்தானம்? டிடி ரிட்டன்ஸ் - திரை விமர்சனம்

பேய்களுடன் போட்டி! வென்றாரா சந்தானம்? டிடி ரிட்டன்ஸ் - திரை விமர்சனம்

நடிகர்கள் சந்தானம், சுரபி நடிப்பில் வெளியாகியுள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தை இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். 

நடிகர்கள் சந்தானம், சுரபி நடிப்பில் வெளியாகியுள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தை இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். 

நடிகர் சந்தானத்தின் மூன்றாவது பேய்ப் படமாக வந்திருக்கிறது டிடி ரிட்டன்ஸ். தமிழ் சினிமாவில் பேய் படத்திற்கென்று இருக்கும் வழக்கமான பயமுறுத்தல் காட்சிகளுடன் ‘உள்ளே வெளியே’ ஆட்டம் ஆடியிருக்கிறார் இயக்குநர் பிரேம் ஆனந்த். 

நாயகனாக உருமாறிவிட்டாலும் இன்னும் காமெடி சார்ந்த படங்களிலேயே தன்னை நிலைநிறுத்தி வரும் நடிகர் சந்தானத்திற்கு இந்தப் படமும் அப்படியே வந்திருக்கிறது. 

1965 ஆம் ஆண்டு காலத்தில் புதுச்சேரியில் சூதாட்ட விடுதி நடத்திவரும் பிரதீப் ராம் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் பொதுமக்களுடனான சண்டையில் இறந்து பேய்களாக மாறுகின்றனர். இந்நிலையில் தற்காலத்தில் மூன்று காமெடி திருட்டு கும்பல்களிடையே பணத்திருட்டு நடக்கிறது. ஒவ்வொரு கும்பலும் மற்றுமொரு கும்பலைத் துரத்த பணம் நடிகர் சந்தானத்தின் கைகளுக்குள் வருகிறது. திருட்டுப் பணம் என்பதால் சந்தானத்தின் நண்பர்கள் காவல்துறையிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க பேய் பங்களாவில் பணத்தைப் பதுக்குகின்றனர்.

இதற்கிடையில் நடிகை சுரபியை வில்லன் விஜயன் பிடித்து வைக்க அவரிடம் பணத்தைக் கொடுத்து சுரபியை மீட்கும் முயற்சியில் இறங்குகிறார் நடிகர் சந்தானம். அதற்காக பேய் பங்களாவிற்கு செல்ல அங்கு பேய்க் குடும்பத்திடம் சிக்குகின்றனர் அவரும் அவரது நண்பர்களும். அவர்கள் மீண்டு வந்தனரா? சுரபி என்ன ஆனார்? என்பதே திரைப்படத்தின் கதை. 

முன்பே சொன்னதைப் போல் பேய்ப் படம் என்றாலே வரும் வழக்கமான காட்சிகளுடன் சில சுவாரஸ்யமான திரைக்கதை உருவாக்கத்தை முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர். பேய் வீட்டிலிருந்து வெளியில் வர அவை முன்வைக்கும் சூதாட்டத்தில் வெற்றி பெற வேண்டும் எனும் சின்ன பொறியை நகைச்சுவையுடன் படம் முழுவதும் கடத்தியிருக்கிறது டிடி ரிட்டன்ஸ். 

பேய்களுக்கென விதி, வெளியில் செல்வதற்கான சாவியைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு கட்டம் என மூன்று நிலைகள், இதற்கிடையில் வில்லன்களும் பேய் பங்களாவிற்குள் மாட்டிக் கொண்டு அல்லல்படுவது போன்ற காட்சிகளால் படத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார் இயக்குநர். நடிகர் சந்தானத்திற்கு இது வழக்கமான ஒரு படம் போலவே அமைந்திருக்கிறது. அதேசமயம் நகைச்சுவைக் காட்சிகளில் கலக்கியிருக்கிறார். தனது  நகைச்சுவை காட்சிகள் மீது வரும் விமர்சனங்களுக்கு இந்தப் படத்தில் கவனம் செலுத்தியிருக்கிறார் சந்தானம். படத்திற்கு சந்தானம், சுரபியைக் கடந்து பெரும் பலம் துணை நடிகர்கள். நடிகர்கள் மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி, முனிஸ்காந்த், தங்கதுரை, தீனா, லொள்ளுசபா மாறன், கூல் சுரேஷ் என பலரும் ரசிகர்களை ஏமாற்றவில்லை. 

குறிப்பாக இரண்டாம் பாதியில் இவர்களின் பங்களிப்பு படத்தை நன்றாக நகர்த்த உதவியிருக்கிறது. நடிகை சுரபி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் தோன்றியிருக்கிறார். பணத்தைப் பிரதானமாகக் கொள்ளும் அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். இவர்களைத் தவிர பெப்சி விஜயன், மசூம் சங்கர் பிரதீப் சிங் ராவத் ஆகியோர் உதவியிருக்கின்றனர். பெப்சி விஜயனின் “டே..டே.டே..” வசனம் ரசிகர்களை சிரிக்க வைக்கத் தவறவில்லை. 

அதேசமயம் புதிய விஷயங்கள் இல்லாததால் ஒரே வட்டத்திற்குள் சுற்றுகிறதோ திரைப்படம் என எண்ணச் செய்கிறது. யூகிக்கக்கூடிய காட்சிகள் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. பேய் படம் என்றாலே வரும் திகில் பங்களா, கத்திக் கொண்டு முன்னே வரும் தலைவிரி கோலத்தில் இருக்கும் பேய் என பழைய காட்சிகள் படத்தின் மீதான ஈர்ப்பைக் குறைக்கின்றன. திரைப்படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் வருகிறது. அதையும் கூட தவிர்த்திருக்கலாம். இவை தவிர கிராபிக்ஸ் காட்சிகளில் ஒவ்வொரு கட்டத்திற்கும் வரும் பேய்கள் முன்வைக்கும் போட்டி குறித்த அறிவிப்புகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. பின்னணி இசை மற்றும் கேமரா பணிகள் படத்திற்கு இறுதிக் காட்சிகளில் வரும் பேய்களுடனான பேச்சுவார்த்தைகள் எல்லாம் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கின்றன. 

பேய் படமானாலும் ரசிகர்களை சிரிக்க வைக்க  எங்களால் முடியும் எனும் வகையில் டிடி ரிட்டன்ஸ் ரசிகர்கள் விரும்பக் கூடியதாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com