பொம்மை: எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கு தீனி போடுகிறதா? திரைவிமர்சனம்

நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் இயக்குநர் ராதா மோகன் இயக்கியுள்ள திரைப்படம் பொம்மை.
பொம்மை: எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கு தீனி போடுகிறதா? திரைவிமர்சனம்

நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் இயக்குநர் ராதா மோகன் இயக்கியுள்ள திரைப்படம் பொம்மை. மொழி, அபியும் நானும், பயணம் உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படம் என்பதால் இந்தப் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ரசிக்கும்படியான கதை சொல்லல் திரைபாணியால் ரசிகர்களைக் கவர்ந்தவரின் பொம்மை திரைப்படம் எப்படி இருக்கிறது?   

சிறுவயதிலேயே தாயை இழந்த சிறுவனான ராஜ்குமார் (எஸ்.ஜே.சூர்யா) தனிமையில் தவிக்கிறார். அவரது தனிமையைப் போக்கும் விதமாக அவரது வகுப்புத் தோழியான நந்தினி அவருக்கு ஆறுதலாக இருக்கிறார். நந்தினியின் பாசத்தால் கட்டிப்போடப்பட்ட ராஜ்குமார் கோவில் திருவிழா ஒன்றில் நந்தினியை இழந்துவிடுகிறார். நந்தினியின் இழப்பு ராஜ்குமாரை மனநோயாளியாக்குகிறது.

வளர்ந்த பிறகு நந்தினியின் தாடை மச்சம் போன்ற அடையாளம் கொண்ட பொம்மையைக் கண்ட ராஜ்குமார் அதை தனது நந்தினியாகவே நினைத்து காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த பொம்மை தன்னை விட்டு பிரிந்து செல்ல அதை எப்படியாவது தன்னுடன் கொண்டு சென்று விட வேண்டும் எனப் போராடுகிறார் ராஜ்குமார். அவரது ஆசை நிறைவேறியதா? அவரது மனநலப் பிரச்னை சரியானதா இல்லையா? என்பதே திரைப்படத்தின் கதை. 

இறைவி திரைப்படத்திலிருந்து தன்னை தேர்ந்த நடிகர் என நிரூபித்துவரும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கு மீண்டும் தீனி போட்டிருக்கிறது ‘பொம்மை’. பொம்மைகளை வரையும் கலைஞனாக வரும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ஒட்டுமொத்த படத்தையும் தாங்கியுள்ளது. நந்தினியாக வரும் பிரியா பவானி சங்கரை நினைத்து உருகும் இடங்களில் தொடங்கி அதற்காக செய்யும் கொலை வரை தனது நடிப்பால் விமர்சகர்களின் வாயை அடைத்துள்ளார். வணிக வளாகத்தில் நந்தினி பொம்மையை மேலாளர் தொடும் போது ஆத்திரங்களால் வெடிக்கும் இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.

முழு படமும் எஸ்.ஜே.சூர்யாவுக்கான க்ளோஸப் காட்சிகளால் நிறைந்து கிடக்கிறது. அதற்கு நியாயம் தரும் வகையில் அமைந்திருக்கிறது எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு. காவல்நிலையக் காட்சிகள் அபாரம். நடிகை ப்ரியா பவானிசங்கருக்கு பெரிதாக நடிக்க இடமில்லை என்றாலும் படம் முழுக்க வருகிறார். துணிக்கடையிலிருந்து தன்னை கொண்டு சென்று விட கெஞ்சும் இடங்களிலும், கிளைமேக்ஸ் காட்சிகளில் காவல்நிலையத்தில் நடக்கும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். உடன் நடித்துள்ள சாந்தினிக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். 

யுவன் இசையில் தெய்வீக ராகம் பாடல் மீண்டும் மீண்டும் காதுகளுக்குள் ஒலிக்கிறது. அதைக் கடந்து மற்ற பாடல்கள் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. எஸ்.ஜே.சூர்யாவுக்கு வைக்கப்பட்ட க்ளோஸப் காட்சிகளை அலுப்புதட்டாத வகையில் கொடுத்திருக்கிறது கேமரா. 

பொம்மை திரைப்படத்தின் கதை தமிழ் சினிமாவில் ஏற்கெனவே பழகிப்போன கதைதான். முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் தடுமாறுகிறது. பொம்மையை வீட்டுக்குக் கொண்டு செல்ல அப்படி என்ன பிரச்னை என யோசித்தால் அது அவ்வளவு நியாயப்பூர்வ காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. திரைக்கதை வடிவமைப்பில் அதற்கு கொஞ்சம் இடம் கொடுத்திருக்கலாம். தனது நண்பன் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த பின்னரும் மிக மெதுவாக இருக்கும் நண்பன் கதாபாத்திரம், மனநோயால் பாதிக்கப்பட்டவரை தனியே கண்டுகொள்ளாமல் விடும் தங்கை போன்ற லாஜிக் மீறல்கள் பெரிதாக தொந்தரவு செய்யவில்லை. 

இயக்குநர், இசையமைப்பாளர் என்பதையெல்லாம் தாண்டி தான் ஒரு நடிகன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்காக பொம்மையைத் தவறாமல் பார்க்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com