ஏழைகளைக் காக்கும் பிச்சைக்காரன் (2): திரைவிமர்சனம்

பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதே கதைக்களத்தில் உருவாகி வெளியாகியிருக்கிறது பிச்சைக்காரன் 2.
ஏழைகளைக் காக்கும் பிச்சைக்காரன் (2): திரைவிமர்சனம்

பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதே கதைக்களத்தில் உருவாகி வெளியாகியிருக்கிறது பிச்சைக்காரன் 2. சிறுவயதில் பெற்றோர்களை இழந்த சத்யா தனது தங்கையை பிச்சை எடுத்து கவனித்து வருகிறார். அதன்பின் காப்பகத்தில் சேர அங்கு தனது தங்கையை ஒரு கும்பல் பிடித்துக் கொண்டு சென்று விடுவதை தெரிந்து கொண்டு அதிர்கிறார் விஜய் ஆண்டனி. தனது தங்கையை பிரிந்த பிறகு சிறையில் சத்யா அடைபட வெளியில் வந்து கொள்ளைக் கும்பல் தலைவனைக் கொன்றுவிட்டு சிறை தண்டனை அனுபவிக்கிறார். மீண்டும் 20 வருடங்களுக்குப் பிறகு வெளியில் வந்து தனது தங்கையை தேடுகிறார்.

இதற்கு மத்தியில் நாட்டின் 7வது பெரும்பணக்காரராக இருக்கும் விஜய் குருமூர்த்தியின் சொத்துக்களை அபகரிக்க அவருடன் இருக்கும் நண்பர்கள் முயற்சிக்கின்றனர். அரசின் அனுமதி பெறாத மூளை மாற்று அறுவை சிகிச்சையின் உதவியுடன் விஜய் குருமூர்த்தியின் உடலுக்குள் தங்கையைத் தேடும் சத்யாவின் மூளை வைக்கப்படுகிறது. திடீரென பணக்காரனாக மாறும் சத்யாவிற்கு என்ன நடந்தது? சத்யா தனது தங்கையைக் கண்டடைந்தாரா? தனக்கு கிடைத்த பணத்தை விஜய் குருமூர்த்தியாக வாழும் சத்யா என்ன செய்தார்? என்பதே பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் கதை.

பிச்சைக்காரன் திரைப்படத்தை ரசித்தவர்களுக்கு இந்தத் திரைப்படமும் கட்டாயம் பிடிக்கும். இசையமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கிய விஜய் ஆண்டனி டி.ராஜேந்திரனின் தங்கச்சி பாசத்தை மட்டுமல்லாமல் அவரைப் போலவே சினிமாவின் பலதுறைகளையும் ஒரு கை பார்க்கத் தொடங்கிவிட்டார். இசை, எழுத்து, இயக்கம், படத்தொகுப்பு என வலம் வந்திருக்கிறார் விஜய் ஆண்டனி. தனது முந்தையத் திரைப்படங்களைக் காட்டிலும் நடிப்பில் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறார்.

தங்கையை கவனித்துக் கொள்ளும் காட்சிகள் தமிழ் சினிமாவின் பழைய பார்முலா என்றாலும் ரசிகர்களை கட்டிப்போடும் வகையில் உருவாகியிருக்கிறது பிச்சைக்காரன் 2. தனது தங்கையை விட்டு பிரிந்து செல்லும் இடத்தில் சிறுவன் நன்றாக நடித்திருக்கிறார். தான் பெரும்பணக்காரன் இல்லை என காவல்துறை அதிகாரி மன்சூர் அலிகானிடம் பரிதாபமாக கெஞ்சும் இடங்களிலிருந்து தன்னைக் காக்க எதிரிகளை கொலை செய்யும் இடம் வரை அபாரமாக மாறியிருக்கிறார் விஜய் ஆண்டனி. அவருக்கு கைகொடுக்கும் வகையில் பயணித்திருக்கிறது பின்னணி இசை.

பிச்சைக்காரன் திரைப்படத்தின் அதே கதைக்களம் என்றாலும் மக்களுக்கு தொடர்புடைய விசயத்தைப் பேசுவதால் ரசிகர்களுடன் ஒத்துப் போகிறான் பிச்சைக்காரன் 2. எளிமையான வசனங்கள் படத்திற்கு பலமாக இருக்கின்றன. ”ஒவ்வொரு ஏழையும் பட்டினியா இருக்கறதுக்கு என்ன மாதிரி பணக்காரன்தான் காரணம்” போன்ற வசனங்கள் அழுத்தமாக அமைந்திருக்கின்றன.

கதாநாயகியாக வரும் காவ்யா தாபர் நடிப்பைக் கடந்து கவர்ச்சியிலும் கலக்கியிருக்கிறார். இவர்களுடன் தேவ் கில், ஜான் விஜய், மன்சூர் அலிகான், ஹரேஷ், ராதாரவி என பலரும் கதாபாத்திரத்திற்கு தேவையான பங்களிப்பைக் கொடுத்திருக்கின்றனர். இரண்டாம் பாதியைக் காட்டிலும் விறுவிறுப்பாக நகர்ந்திருக்கிறது முதல்பாதி. திரைப்படத்தின் தொடக்கத்திலேயே தான் விபத்தில் சிக்கிய ரொமான்ஸ் பாடலை வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அம்மா சென்டிமெண்டை வைத்து வென்ற விஜய் ஆண்டனி தங்கை பாசத்தையும் வைத்து வென்று காட்டியிருக்கிறார். பணக்காரனாகும் ஒரு பிச்சைக்காரன் ஏழைகளுக்கு உதவும் இடங்கள் டிராமா வகை என்றாலும் அதை ரசிகர்கள் ஏற்கும் வகையில் கொடுத்திருக்கின்றது படக்குழு. யூகிக்கக் கூடிய இறுதிக் காட்சிகளில் தங்கை பாசத்தால் கட்டிப் போட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. 

திரைப்படத்தின் முதல்பாதி முழுக்க சிஜி காட்சிகளால் தடுமாறியிருக்கிறது. ஒரு பெரும் பணக்காரனின் வாழ்க்கையைப் பதிவு செய்ய முயன்று சிஜியில் சிக்கிக் கொண்டிருக்கிறான் பிச்சைக்காரன் 2. இதில் கூடுதல் கவனத்தை செலுத்தியிருக்கலாம். முன்னர் தெரிவித்ததைப் போல சென்டிமெண்ட்டால் நகரும் கதை இரண்டாம் பாதியில் சற்று இழுவையாக இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. காவல்நிலையத்தில் பிச்சைக்காரனாக வரும்போதே முதல்வருக்கு போன் செய்து பேச முடிந்த நாயகனால் அதே அதிகாரத்தை வைத்து தனது தங்கையை தேடியிருக்க முடியுமே எனும் கேள்வி எழாமல் இல்லை. யோகிபாபுவின் காமெடிகள் கைகொடுக்கவில்லை. பெரும் பணக்காரர்கள் தங்களது சொத்துக்களை ஏழைகளின் நலன்களுக்கு செலவு செய்ய முன்வர வேண்டும் எனும் ஆசை நமக்குள் இருந்தாலும் கானல்நீராக அதனை காட்சிகளில் மட்டும் பருகிக் கொள்ளலாம்.

பெரிய சினிமா மொழி இல்லை என்றாலும் மக்கள் புரிந்துகொள்ளும் எளிய மொழியில் உருவாகியிருக்கும் பிச்சைக்காரன் 2 ரசிகர்களுக்கு எடுபடும். தங்களது தேவையைக் கடந்து பணக்காரர்களுக்கு எதற்கு இத்தனை சொத்துக்கள்? பெரும்பணக்காரர்களின் சொத்துக்களை மக்கள் நலனுக்கு செலவிட்டால்தான் என்ன? எனும் சிந்தனைகளை நமது மூளையின் ஓரத்தில் ஏற்பட்டாலும் அது இந்த பிச்சைக்காரனுக்குக் (2) கிடைத்த வெற்றிதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com