கமர்ஷியல் சக்கரத்துக்குள் சிக்கிக்கொண்டதா ஜப்பான்? திரை விமர்சனம்

எளிய மக்களின் கதைகளை இதுவரை பேசி வந்த இயக்குநர் ராஜூ முருகன் தன்னுடைய வடிவத்தில் இருந்து சற்று விலகி கமர்சியல் பாணியில் ஜப்பானை உருவாக்கியிருக்கிறார்.
கமர்ஷியல் சக்கரத்துக்குள் சிக்கிக்கொண்டதா ஜப்பான்? திரை விமர்சனம்

இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்திருக்கிறது ஜப்பான் திரைப்படம். குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்த ராஜூ முருகன் புதிதாக கமர்ஷியல் வடிவத்தில் இறங்கியிருக்கும் ஜப்பான் எப்படி இருக்கிறது?

எளிய மக்களின் கதைகளை இதுவரை பேசி வந்த இயக்குநர் ராஜூ முருகன் தன்னுடைய வடிவத்தில் இருந்து சற்று விலகி கமர்சியல் பாணியில் ஜப்பானை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் நடிகர்கள் அனு இம்மானுவேல், வாகை சந்திரசேகரன், விஜய் மில்டன், சுனில், கே.எஸ்.ரவிக்குமார் என பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பும் ரவிவர்மன் கேமராவும் செய்திருக்கின்றனர். 

கோவையின் பிரபல நகைக்கடையில் ரூ.200 கோடி மதிப்பிலான நகைகள் திருடு போகின்றன. அந்த திருட்டிற்கு காரணம் ஜப்பான் (கார்த்தி) எனத் தெரிய வருகிறது. தனக்கு சொந்தமான நகைக்கடையில் திருட்டு நடந்ததால் பதறிப்போன அமைச்சர் கே.எஸ். ரவிக்குமார் திருடன் ஜப்பானைப் பிடிக்க காவல்துறையை அனுப்புகிறார். இது எதுவும் தெரியாமல், தான் கொள்ளையடித்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் ஜப்பான் இந்த வழக்கிலிருந்து எப்படி தப்பித்தார்? காவல்துறையினர் அவரை பிடித்தனரா? இல்லையா? என்பதே ஜப்பான் திரைப்படத்தின் கதை.

தனது முந்தைய திரைப்படங்களின் கதாபாத்திர சாயலில் இருந்து மாறுபட்டு நடித்திருக்கிறார் நடிகர் கார்த்தி. சிக்கலான, நையாண்டியான ஜப்பான் கதாபாத்திரத்தை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார் கார்த்திக்.

சீரியசான பல இடங்களில் காமெடி செய்வதாகட்டும், தன்னிடம் பேசாத தன் தாய்க்காக வருந்துவதாகட்டும் வித்தியாசமான நடிப்பை கொடுக்க முயற்சித்திருக்கிறார். அவருடைய வசனங்கள் பல இடங்களில் நகைச்சுவையை கொடுக்க தவறவில்லை.

வழக்கமான கமர்சியல் படங்களில் ஒரு நாயகி எப்படி பயன்படுத்தப்படுவாரோ அப்படியே இருக்கிறார் அனு இம்மானுவேல். காட்சிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாத இடங்களில் அவர் திணிக்கப்பட்டிருக்கிறார். 

இயக்குநர் விஜய் மிலிட்டன் நடிகராக இந்த படத்தில் அறிமுகமாகி இருக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமாரும் மற்ற சிறு கதாபாத்திரங்களும் நடித்திருக்கின்றன. சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படங்களில் தவறாமல் இடம்பெற்ற சுனில் இந்தப் படத்திலும் இடம்பெற்று இருக்கிறார். ஆனால் வித்தியாசமான நடிப்பை கொடுக்க தவறி இருக்கிறார். ஜெயிலர் சாயல் தெரிகிறது. இவர்களைத் தாண்டி நடிகர் ஜித்தன் இடம் பெற்று இருக்கிறார். அவர் நடித்திருக்கலாம். அவரது கதாபாத்திரம் முக்கியமானது என்றாலும் அதை நம்பும்படியாக அவர் வழங்கவில்லை என்ற உண்மையை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

ஒரு சேசிங் கதையில் இருக்க வேண்டிய விறுவ விறுப்பான காட்சிகள் இல்லாமல் செல்லும்  முதல் பாதி பார்வையாளர்களுக்கு ஒரு அயிற்சியைக் கொடுக்கலாம். காவல்துறை தேடும் ஒரு குற்றவாளி சினிமா நடிகர் எனும் காட்சிகளை எல்லாம் தவிர்த்து இருக்கலாம்.

இரண்டாம் பாதியில் திரைக்கதை சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. வழக்கமான கமர்சியல் சினிமாவிற்குள் இரண்டாம் பாதி தான் நுழைகிறது. ஒரு காட்சிக்குள் நுழையும் போது அதற்குள் உங்களை தொந்தரவு செய்யும் வண்ணம் இன்னொரு காட்சி உள்ளே நுழைவது திரைக்கதையின் தொடர்ச்சியை சீர்குலைக்கிறது. பல லாஜிக் மீறல் காட்சிகள், தொய்வான பின்னணி இசை, தேவையற்ற பாடல்கள் படத்தின் மீதான ஈர்ப்பைக் குறைக்கின்றன. முந்தைய திரைப்படங்களில் இடம்பெற்ற உயிரோட்டமான காதல் காட்சிகள் இந்த படத்தில் கோட்டை விடப்பட்டிருக்கிறது. 

இரண்டாம் பாதியில் இறுதி முப்பது நிமிடங்கள் ராஜமுருகனின் பாணியைப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக அரசியல் நெடி கொண்ட வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. "இந்தியால எல்லாம் தலைகீழாக நடக்குது", "ஓட்டு போடும் போது லாஜிக் பார்க்காத நீங்க ஓட்டை போடும் போது லாஜிக் பாக்கறீங்களா?", "என்ன சொன்னாலும் நம்பற பொது ஜனமா நீ?",  "கால நக்கறதே ஏறி மிதிச்சு மேல போகத்தான்" இதுபோன்ற வசனங்கள் அரசியல் நக்கலுடன் இருக்கின்றன.

கமர்ஷியல் சக்கரத்திற்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது ஜப்பான். இயக்குனரும் கூட...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com