பணத்தராசில் பெற்றோர் பாசம்: ஆர் யூ ஓகே பேபி திரைவிமர்சனம்

நடிகர்கள் சமுத்திரக்கனி, அபிராமி நடிப்பில் வெளியாகியிருக்கக்கூடிய திரைப்படம் ஆர் யூ ஓகே பேபி.
பணத்தராசில் பெற்றோர் பாசம்: ஆர் யூ ஓகே பேபி திரைவிமர்சனம்

நடிகர்கள் சமுத்திரக்கனி, அபிராமி நடிப்பில் வெளியாகியிருக்கக்கூடிய திரைப்படம் ஆர் யூ ஓகே பேபி.

தனியார் தொலைக்காட்சியில் வெளியான குடும்ப சிக்கல் தொடர்பான நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். குழந்தை தத்தெடுப்பை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது?

பொறுப்பற்று திரியும் இளைஞராக வரும் நடிகர் அசோக்குடன் திருமணம் கடந்த உறவில் இருக்கும் நடிகை முல்லையரசி கருவுறுகிறார். தனக்கு இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அந்தக் குழந்தையை வளர்க்க முடியாத முல்லையரசி அதனை தொழிலதிபராக இருக்கும் நடிகர் சமுத்திரக்கனிக்கும் அவரது மனைவி அபிராமிக்கும் தத்துக் கொடுக்கிறார். நீண்ட காலமாக குழந்தை பேறு இல்லாத சமுத்திரக் கனியும், அபிராமியும்  அதற்காக குழந்தையின் தாய் முல்லையரசிக்கு பணமும் வழங்குகின்றனர்.

இந்த நிலையில் திடீரென தனது கணவர் அசோக்கும் தன்னை கவனித்துக் கொள்ளாமல் கைவிடும் முயற்சியில் இருக்க தனது குழந்தையையாவது பெற்றுவிட வேண்டும் என தனியார் தொலைக்காட்சியில் குடும்ப சிக்கல் நிகழ்ச்சி நடத்தும் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனிடம் தஞ்சமடைகிறார் முல்லை. விவகாரம் நீதிமன்றம் செல்கிறது. குழந்தை தத்தெடுப்பு குழந்தைக் கடத்தலாக மாறுகிறது. குழந்தை யாருக்கு சொந்தம்? என்பதே திரைப்படத்தின் கதை.

இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு தொழில்நுட்ப ரீதியாக நன்றாக அமைந்திருக்கிறது இத்திரைப்படம். சிக்கல் இல்லாத எளிமையான கதை பார்வையாளர்களை காட்சியுடன் ஒன்ற வைத்திருக்கிறது. நடிகர்கள் சமுத்திரக்கனி, அபிராமி ஆகியோரின் ஆரவாரமில்லாத நடிப்பு காட்சிக்கு காட்சி உதவியிருக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளின் வலிகளை கண்முன் கொண்டு வந்திருக்கின்றனர் சமுத்திரக்கனியும், அபிராமியும். குறிப்பாக அறிமுக நடிகையாக களமிறங்கியிருக்கும் முல்லையரசியின் நடிப்பு நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது. தனது கணவருடன் காதல் செய்வதிலிருந்து அவர் வேண்டும் என்பதற்காக அவரின் காலில் விழுந்து கெஞ்சுவது வரை அறிமுக நடிப்பிலேயே மிரட்டியிருக்கிறார்.

குழந்தையைப் பிரிந்து ஏக்கம் கொள்ளும் இடங்களிலும், அக்குழந்தை தனது கைகளுக்கு வந்துவிடும் எனும் நம்பிக்கையால் மகிழ்வதிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் முல்லை. ஒட்டுமொத்த திரைப்படத்தையும் நகர்த்தியிருப்பது முல்லைதான் எனலாம். இவர்களைத் தவிர இயக்குநர் மிஷ்கின், ஆடுகளம் நரேன், பாவெல் நவகீதன், ரோபோ சங்கர், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் என பலரும் அளவு கடக்காத நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர். பாவெல் நவகீதனின் எரிச்சல் தரும் கதாபாத்திரம் சரியாக திரையில் கடத்தப்பட்டிருக்கிறது.

இன்றைய நவீன உலகில் அனைத்தையும் பணமே தீர்மானிக்கும் சூழலில் பணமற்றவர்கள் கோரும் நீதி என்பது எந்தளவு சாத்தியமானது எனும் கேள்வி திரைப்படத்தின் ஊடாக எழலாம். ஒரு குழந்தைக்கு இரு பெற்றோர்கள் மோதிக் கொள்வது விறுவிறுப்பான திரைக்கதைக்கு உதவியிருக்கிறது. படம் தொடக்கம் முதல் இறுதிவரை ஒரே நேர்கோட்டில் பயணிப்பதால் எந்த குழப்பமும் இல்லாமல் படத்தில் ஒன்ற முடிகிறது.

கேமரா பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. படத்தொகுப்பைப் பொறுத்தவரை முதல்பாதியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இளையராஜாவின் அன்னை தந்தை பாடல் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. திரைக்கதையின் ஓட்டத்தை அறிந்து இசையை மிதக்க விட்டிருக்கிறார்.

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் சொல்லாததும் உண்மை எனும் நிகழ்ச்சி முதல்பாதி முழுக்க நிறைந்து கிடந்தது அவசியமா எனும் கேள்வி எழுந்தது. இயக்குநரின் பிரபலமான நிகழ்ச்சி என்பதால் அதன் காட்சிகளைக் கொண்டு படத்தை நிரப்ப முயற்சிக்கலாமா?

சில லாஜிக் கோளாறுகள் கதையின் தீவிரத்தைக் குறைக்கச் செய்கின்றன. பொதுவெளியில் பணம் கொடுத்ததாக சமுத்திரக்கனியே ஒப்புக் கொண்ட நிலையில் இறுதிக் காட்சிகள் தடுமாறுகின்றன. எதிர்பார்த்த கிளைமேக்ஸ் காட்சி ஏமாற்றத்தைத் தரலாம்.

பணம் இருப்பவர்களின் அன்பையும், பணம் இல்லாதவர்களின் அன்பையும் ஒரு தராசில் நிறுத்தினால் யார் பக்கம் எடை தலைசாயும்? குழந்தை வளர்ப்புக்கு பணம் மட்டும் பிரதானமா? உள்ளிட்ட கேள்விகளுக்கு யதார்த்தத்தின் நகலை பதிலாகக் கொடுத்து தப்பித்து இருக்கிறார் இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com