எப்படி இருக்கிறது அவள் பெயர் ரஜினி? திரை விமர்சனம்

இயக்குநர் வினில் வர்கீஸ் இயக்கத்தில் நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், பிரியங்கா சாய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அவள் பெயர் ரஜினி. 
எப்படி இருக்கிறது அவள் பெயர் ரஜினி? திரை விமர்சனம்

இயக்குநர் வினில் வர்கீஸ் இயக்கத்தில் நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், பிரியங்கா சாய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அவள் பெயர் ரஜினி. 

நண்பரின் வீட்டிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த தன்னுடைய மாமா மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? என தேடுதல் வேட்டையில் இறங்குகிறார் காளிதாஸ் ஜெயராம். அந்த பயணத்தில் அவருக்கு பல விஷயங்கள் தெரிய வருகின்றன. அவை என்ன? கொலைக்கான காரணத்தையும், கொலையாளியையும் கண்டுபிடித்தாரா காளிதாஸ் ஜெயராம்? என்பதே அவள் பெயர் ரஜினி திரைப்படத்தின் கதை. 

இந்தத் திரைப்படத்தின் கதை மிக எளிமையானது. பழிவாங்கலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள க்ரைம் த்ரில்லர். மிக எளிமையான கதை என்பதால் அதில் சில சுவாரஸ்யமான இடங்களை வைத்து ரசிகர்களுக்கு ஆச்சர்யங்களைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். 

காளிதாஸ் ஜெயராம் நிதானமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். முழு நீளப் படத்தை நகர்த்தியிருக்கற அவருக்கு தனது திறனை நிரூபிக்க இத்திரைப்படம் நல்ல களம். தனது அக்காவைக் காப்பாற்றுவதற்காகவும், மாமாவின் கொலைக்கான காரணத்தை கண்டடைவதற்காகவும் அவர் அல்லப்படும் இடங்களில் அளவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். 

படத்தின் உண்மையான பலம் திருநங்கையாக நடித்த பிரியங்கா சாய். மிரட்டலான நடிப்பைக் கொடுத்து சாதித்திருக்கிறார். இரண்டாம் பாதியை தனது நடிப்பால் கட்டிப் போட்டிருக்கும் அவர் தன்னுடைய வில்லத்தனத்தால்  கவனம் ஈர்க்கிறார். அப்பாவிப் பெண்ணாக தவிக்கும் இடங்கள் தொடங்கி சொந்த ஊருக்குள் மிடுக்கான நடையில் நடப்பது வரை கனக்கச்சிதமான நடிப்பால் வென்றிருக்கிறார் பிரியங்கா. 

இவர்களுடன் நடிகர்கள் நமிதா பிரமோத், ரெபா மோனிகா, அஸ்வின் குமார், சைஜு குருப், கருணாகரன், ரமேஷ் கண்ணா, மறைந்த ‘பூ’ ராமு என பலர் நடித்துள்ளனர். பெரிதாக இவர்களுக்கான முக்கியத்துவம் இல்லாததால் அதிகமாக பயன்படுத்தப்படவில்லையோ எனும் கேள்வி எழுகிறது. எனினும் அவரவர் அவரவருக்கான இடங்களில் பொருந்தியுள்ளனர். 

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அமர்ந்தால் விறுவிறுப்பான திரைக்கதையால் கவனம் ஈர்த்திருக்கிறது அவள் பெயர் ரஜ்னி. யூகிக்கக் கூடிய கதை என்றாலும் புதிய விஷயங்களை சொல்வதாகச் சொல்லி அதைத் திணிக்காமல் கதைக்குள் என்ன செய்து சுவாரஸ்யத்தைக் கூட்ட முடியுமோ அதை சரியாக செய்திருக்கிறார் இயக்குநர் வினில் வர்கீஸ். திருநங்கையாக நடித்தவர் நடிகர் ரஜினிகாந்த்தின் ரசிகர், ரஜினிகாந்த் திரைப்பட நாயகிகளின் பெயரை வைத்து தப்பிக்கும் கொலையாளி என காட்சிப்படுத்தியவை ரசிக்கும்படியாக இருந்தது. 

தொடக்கத்தில் திருநங்கைகளை தவறாக சித்தரிக்கும்படியாக காட்சிகளை இயக்குநர் கையாண்டு விட்டாரோ எனத் தோன்றினால் அவர்களை சமூகம் மரியாதையாக நடத்த வேண்டியதற்கான இடத்தில் கொண்டு சென்று பார்வையாளர்களை நிறுத்தியிருக்கிறார் இயக்குநர். சில இடங்களில் இன்னும் தெளிவாக அதை பேசியிருக்கலாம். யூகிக்கக்கூடிய காட்சிகளைத் தவிர்க்க முயற்சித்திருக்கலாம். பழிவாங்கல் கதை என்ற பார்வையாளர்களுக்குத் தெரிந்தபின் வரும் கணிக்கக்கூடிய கிளைமேக்ஸ் காட்சிகள் படத்தின் பலவீனம்.  


காவல்துறையின் அனைத்து வேலைகளையும் செய்ய காளிதாஸ் இருக்க காவல்துறை அதிகாரியாக அஸ்வின் குமார் எதற்கு? படத்தில் ஒளிந்திருக்கும் லாஜிக் மீறல்களுக்கும் இயக்குநர் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரு வழக்கிலிருந்து தப்பிக்க முயன்ற மாமா அதுகுறித்து எதையுமே காளிதாஸ் ஜெயராமிடம் தெரிவிக்கவில்லை என்பதை எப்படி நம்புவது? 

பின்னணி இசை நன்றாக கைகொடுத்திருக்கிறது. குறிப்பாக பிரியங்காவின் பில்டப் இடங்களில் கவனம் ஈர்க்கிறது. அதேபோல் க்ரைம் த்ரில்லருக்கு ஏற்றவகையில் விஷ்ணுவின் கேமரா நம்மை பதற்றத்துடன் வைக்க உதவியிருக்கிறது. படத்தொகுப்பும், வசனங்களும் அளவான அதேசமயம் தெளிவான மீட்டரில் இருக்கின்றன. 

விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் எதிர்பாராத ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கிறது அவள் பெயர் ரஜினி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com