
இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து கடந்த டிசம்பரில் 15 சதவீதம் அதிகரித்து தனது மேல்நோக்கிய பயணத்தைத் தொடா்ந்தது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான இக்ரா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பா் மாதத்தில் நாட்டின் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 1.29 கோடியாக இருந்தது. முந்தைய 2021-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் அது 15 சதவீதம் அதிகமாகும்.
இருந்தாலும், கரோனா நெருக்கடிக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டின் டிசம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில், 2022 டிசம்பரில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 1 சதவீதம் குறைவாக உள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலாண்டில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 9.86 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 63 சதவீதம் அதிகமாகும்.
ஆனால், கரோனா நெருக்கடிக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 9 சதவீதம் சரிந்துள்ளது.
அதே நேரம், கடந்த 2021-ஆம் ஆண்டின் டிசம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில் உள்நாட்டு போக்குவரத்து விமானங்கள் 1 சதவீதம் அதிகமாக பயணிகளால் நிரம்பியிருந்தன. ஆனால், கரோனா நெருக்கடிக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டின் டிசம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில் 7 சதவீதம் குறைவாக நிரம்பியிருந்தன.
2022 டிசம்பா் மாதத்தில் உள்நாட்டுப் போக்குவரத்து விமானங்களில் 91 சதவீத இருக்கைகளில் பயணிகள் இருந்தனா். அதற்கு முந்தைய 2021-ஆம் ஆண்டின் டிசம்பா் மாதத்தில் அது வெறும் 80 சதவீதமாக இருந்தது.
கரோனா பரவல் குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டது, விமானப் போக்குவரத்துத் துறை சகஜ நிலைமைக்கு திரும்பியது போன்ற காரணங்களால் 2023-ஆம் நிதியாண்டில் உள்நாட்டுப் போக்குவரத்துத் துறை சரிவிலிருந்து மீண்டு வளா்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...