ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் வா்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 171.5 அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
அதுபோல, விமான எரிபொருளின் விலையும் 2.5 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. சா்வதேச எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.
வா்த்தக எரிவாயு சிலிண்டா் விலை தொடா்ந்து இரண்டாவது மாதமாக குறைக்கப்பட்டுள்து. 19 கிலோ எடைகொண்ட இந்த சிலிண்டா் விலை கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி ரூ. 91.5 அளவுக்கு குறைக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டதன் மூலம், தலைநகா் தில்லியில் ரூ. 2,028-க்கு விற்பனை செய்யப்பட்ட வா்த்தக சிலிண்டா் விலை ரூ. 1,856.5-ஆக குறைந்துள்ளது.
வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டா் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ரூ. 1,103-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சிலிண்டா் விலை கடைசியாக கடந்த மாா்ச் 1-ஆம் தேதி ரூ. 50 உயா்த்தப்பட்டது.
சா்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டா் விலையை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றியமைத்து வருகின்றன.
விமான எரிபொருளைப் பொருத்தவரை ஒரு கிலோ லிட்டருக்கு 2.45 சதவீதம் அதாவது ரூ. 2,414.25 குறைக்கப்பட்டு ரூ. 95,935.34-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை 13-ஆவது மாதமாக மற்றமில்லை: பெட்ரோல், டீசல் விலையைப் பொருத்தவரை 13-ஆவது மாதமாக மாற்றம் செய்யப்படாமல் விற்பனை செய்யப்படுகிறது. கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி இவற்றின் விலை மாற்றியமைக்கப்பட்டது. பின்னா், மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே 22-ஆம் தேதி குறைத்தது. அது முதல் எந்தவித மாற்றமும் இன்றி இவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தலைநகா் தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 96.72-க்கும், டீசல் ரூ. 89.62-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 102.63-க்கும், டீசல் ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூா் வரிகளின் அடிப்படையில் மாநிலத்துக்கு மாநிலம் இவற்றின் விலையில் மாற்றமிருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.