ரசிகர்களை காலி செய்திருக்கும் கஸ்டடி: திரைவிமர்சனம்

ரசிகர்களை காலி செய்திருக்கும் கஸ்டடி: திரைவிமர்சனம்

மன்மதலீலை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்கியுள்ள திரைப்படம் கஸ்டடி.
Published on

மன்மதலீலை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்கியுள்ள திரைப்படம் கஸ்டடி. நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க சரத்குமார், பிரியாமணி ஆகியோர் வில்லனாக நடித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் நடிகர்கள் அரவிந்த் சாமி, ஜீவா, கயல் ஆனந்தி, பிரேம்ஜி, ராம்கி என பலர் நடித்துள்ளனர்.

நேர்மையாக தவறுகளைத் தட்டிக்கேட்கும் போலிஸ் கான்ஸ்டபிளாக வரும் நாக சைதன்யாவிற்கு தான் பணிபுரியும் காவல்நிலையத்தில் மேலதிகாரியால் தொல்லை கொடுக்கப்படுகிறது. ஒருநாள் நாக சைதன்யா மேலதிகாரியின் கட்டாயத்தின்பேரில் இரவுப்பணி பார்க்கும்போது அவரிடம் பிரபல ரவுடி ராஜூ (அரவிந்த் சாமி) மாட்டிக் கொள்கிறார். முதலில் அவர் ரெளடி என்பதை அறியாத நாக சைதன்யா பின்னர் சிபிஐ மூலம் அரவிந்த் சாமிக்கு முதல்வர் தட்சாயிணி (பிரியாமணி) உடன் தொடர்பு இருப்பதை அறிகிறார்.

அதுமட்டுமல்லாமல் தனது அண்ணன் ஜீவாவை கொலை செய்தது ரெளடி ராஜூதான் என்பதை அறிந்துகொண்ட பின் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க அவரை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தப்பித்துச் செல்கிறார். அவர் ரெளடி ராஜூவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினாரா? ராஜூவைக் கொலை செய்ய துரத்தும் சரத்குமாரை எப்படி சமாளித்தார்? என்பதுதான் கஸ்டடி திரைப்படத்தின் மீதிக்கதை. 

தெலுங்கு ரசிகர்களை பிரதானமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் தமிழிலும் வெளிவந்திருக்கிறது. தமிழ் சினிமா சந்தித்த அதே பழைய கதை. திரைப்படத்தின் தொடக்கக் காட்சிகளில் நடிகர்கள் தெலுங்கில் பேசும் வசனங்கள் தமிழுக்கு டப் செய்யப்பட்டிருப்பதால் உதட்டு அசைவுகள் பொருந்தாதது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு நடிகர்கள் நேரடியாக தமிழிலேயே பேசும் காட்சிகள் இடம்பெறுகின்றன. இந்த உள்ளே வெளியே விளையாட்டை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். 

கமர்ஷியல் சினிமாக்களுக்குப் பழக்கப்பட்ட ஒரு அறிமுகப்பாடல், அதனைத் தொடர்ந்து காதலி உடனான ரொமான்ஸ் பாடல் கூடவே ஒரு செண்டிமெண்ட் பாடல் என நிரம்பிக்கிடக்கிறது கஸ்டடி. தமிழுக்கு நாக சைதன்யா ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் என்பதால் ஆக்‌ஷன் காட்சிகளை படம் முழுக்க தூவியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. ஆனால் அதனைத் தாண்டி நாக சைதன்யாவின் நடிப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கான மெனக்கெடல் அவரிடம் இருந்து வெளிப்படவில்லை. திரைப்படத்தின் கதாநாயகன் என்கிற மனநிலையே ஏற்படாதவாறு பொருத்தமற்ற வசனங்களால் நிரம்பியிருக்கிறது அவரது நடிப்பு. துணைக்கதாபாத்திரங்களாக வரும் நடிகர் அரவிந்த் சாமியும், சரத்குமாரும் மட்டுமே படத்தை ஓரளவு நகர்த்தியிருக்கின்றனர்.

ரெளடி ராஜூவாக வரும் நடிகர் அரவிந்த் சாமி பேசும் வசனங்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ”என்னடா எல்லாம் நேர்மையா இருக்கீங்க. ஒரு பேட் வைபரேசன்” என அரவிந்த் சாமி பேசும் வசனம் கைதட்டல் பெறுகிறது. கூடவே அவரது நடிப்பு. அவரின் முன் நாக சைதன்யா ஹீரோவாக இருக்கும் எந்தக் காட்சியும் எடுபடவில்லை. துரத்தும் அம்சத்தைக் கருவாகக் கொண்ட இந்தக் கதையில் அப்படி எந்தவொரு பதட்டத்தையும் திரைப்படம் ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை என்பது யதார்த்தம். நடிகை க்ரீத்திஷெட்டி வழக்கம்போல் எதற்காக கதையில் இருக்கிறார் என்பதை கண்டிபிடிப்பவர்களுக்கு பரிசு அறிவிக்கலாம் போல. படம் முழுக்க வந்தாலும் அரவிந்த் சாமியுடன் அவர் பேசும் ’அண்ணா’ காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. 

இவர்களைத் தவிர நாக சைதன்யாவின் அண்ணனாக நடிகர் ஜீவா, ஜீவாவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி, முன்னாள் ராணுவ அதிகாரியாக நடிகர் ராம்கி என அவசியமற்ற பல கதாபாத்திரங்கள் திரையில் வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக்கின்றன. பிரேம்ஜி வழக்கம்போல் நகைச்சுவை என எதையோ செய்கிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தின் சாயலைக் கிண்டலடிக்கவோ/காட்டவோ ஏஜெண்ட் பிலிப்ஸ்ஸாக நடிகர் ராம்கி வந்து காப்பாற்றுவதெல்லாம் பெரிதாக கைகொடுக்கவில்லை. அப்பா இறப்பு, அண்ணன் ஜீவாவின் மரணம் என எதுவும் பெரிதாக ரசிகர்களை பாதிக்கவில்லை. 

திரைப்படத்திற்கு இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இசையமைத்திருக்கின்றனர். ஆங்காங்கே இளையராஜாவின் பழைய பாடல்கள் வருகின்றன. நடிகர் சரத்குமாருக்கான பின்னணி இசை மட்டுமே கேட்கும்படியாக இருக்கிறது. 

வழக்கமான ஒரே கதையை ஏதேதோ செய்து கொடுத்திருந்தாலும் ரசிகர்களை கஸ்டடியில் வைத்து காலி செய்திருக்கிறது வெங்கட் பிரபுவின் கஸ்டடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com