சாதியைத் தோலுரித்தானா கழுவேத்தி மூர்க்கன்? திரைவிமர்சனம்

சாதியை, வர்க்கத்தை, பிரிவினையை நாசுக்காக பேசிய தமிழ்ப் படங்களுக்கு மத்தியில் மக்களை சமமாக நடத்த வலியுறுத்தும் இம்மாதிரியான படங்கள் ஆரோக்கியமானதே. 
சாதியைத் தோலுரித்தானா கழுவேத்தி மூர்க்கன்? திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஏதாவது ஒரு நல்ல கருத்தைத் தெரிவித்தும் வகையில் கதைகள் வெளிவருவது தேவையான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. அவற்றில் முக்கியமாக சாதிக்கு எதிரான கருத்துகள் வலியுறுத்தப்படுவது வரவேற்கத்தக்க ஒன்று. அதன் நீட்சியாக வெளிவந்திருக்கிறது கழுவேத்தி மூர்க்கன். 

நடிகர் அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஸ்காந்த், ராஜசிம்மன், யார் கண்ணன், பத்மன் என பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை இயக்குநர் சை.கெளதம ராஜ் இயக்கியுள்ளார். ஒலிம்பியா மூவிஸின் அம்பேத் குமார் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உயர்சாதி என சொல்லப்படும் பிரிவைச் சேர்ந்த மூர்க்கசாமியின் (அருள்நிதி) உயிர் நண்பனாக இருக்கிறார் அதே கிராமத்தின் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பூமிநாதன் (சந்தோஷ் பிரதாப்). சாதியின் கோரங்களை விளங்கிக் கொண்டு அதிலிருந்து தனது மக்களை வெளியில் கொண்டுவர இயங்கும் பூமிநாதனுக்கு ஆதரவாக நின்று சொந்த சாதியினரையே எதிர்க்கிறார் மூர்க்கசாமி. இந்நிலையில் அரசியல் கட்சியைச் சேர்ந்த முனியராஜ் (ராஜசிம்மன்) எப்படியாவது தேர்தலில் போட்டியிட தனது தலைமையிடமிருந்து சீட் பெற சாதி பலத்தைப் பயன்படுத்த நினைக்கிறார். இந்த ஆட்டத்திற்கு பூமிநாதன் தடையாக இருக்க அவர் கட்டம் கட்டப்படுகிறார். ஒரு கட்டத்தில் நடிகர் அருள்நிதியால் சந்தோஷ் பிரதாப் கொலை செய்யப்படுவதாக கதை விரிய என்ன ஆனார் அருள்நிதி என்பதே கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் கதை. 

மெளன குரு திரைப்படத்தின் மூலம் பெரிதும் பாராட்டைப் பெற்ற அருள்நிதிக்கு முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதைக்களமாக அமைந்திருக்கிறது கழுவேத்தி  மூர்க்கன். உயர்சாதி என சொல்லப்படும் பிரிவைச் சேர்ந்தவராக வந்தாலும் ஒடுக்கப்படும் நண்பனுக்காக நிற்கும் இடங்களில் பாத்திரத்திற்கேற்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார் அருள்நிதி. அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்த ஒரு நடிகர் இத்தகைய கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்ததற்காகவே பாராட்டலாம். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நன்றாகவே பொருந்தியிருக்கிறது அருள்நிதிக்கு. வழக்கமாக சாதியத்தை உயர்த்திப் பிடிக்கும் திரைப்படங்களுக்கு வடிவமைக்கப்படும் கதாநாயகனின் தோற்றம் இந்தத் திரைப்படத்தில் சாதியை மறுக்கும் கதாநாயகனுக்கு கொடுக்கப்பட்டிருப்பது வித்தியாசமானது.

அருள்நிதியுடனான காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார் துஷாரா விஜயன். முரட்டு ஆளை மிரட்டும் காட்சிகளில் நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார் துஷாரா. “அடுத்து என்ன நடக்கும் எனத் தெரியாம இருக்கப்ப கடைசி வரைக்கும் ஒரு முத்தம் கூட கொடுத்திடாம இருந்திட்டோமேன்னு நினைச்சிடக் கூடாதுல” என அவர் பேசும் வசனம் கவனம் ஈர்க்கிறது. அருள்நிதிக்கு இணையான கதாபாத்திரமாக வருகிறார் பூமிநாதனாக ஒளிரும் சந்தோஷ் பிரதாப். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக வரும் அவர் தனது மக்கள் இந்த இழிநிலையிலிருந்து முன்னேற வேண்டும் என மெனக்கெடும் இடங்களில் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். அமைதியான அதே நேரம் எதிர்ப்பு குணம் கொண்ட இளைஞருக்கான கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் சந்தோஷ் பிரதாப். இவர்களுடன் ராஜ சிம்மன், யார் கண்ணன், சாயா தேவி என பலரும் நன்றாக நடித்துள்ளனர். 

திரைக்கதை ஓட்டத்தின் ஊடே சாதி இயங்கு முறை குறித்த பார்வைகளை முன்வைத்துவிட வேண்டும் என இயக்குநர் முயற்சித்துள்ளதைப் பார்க்க முடிகிறது. அதிகாரத்தை அடைய சாதியைப் பயன்படுத்தும் அரசியல்வாதி தொடங்கி காவல்துறையானாலும் சாதியை விட்டுக் கொடுக்காத காவலர், அதிகாரத்திற்காக சொந்தக் குடும்பத்தைப் பகடைக் காயாக்கும் தந்தை வரை பல கோணங்களைக் காட்சிப்படுத்த முனைந்துள்ளார் இயக்குநர். “மீசைங்கறது மயிர் தானடா”, “அடிவாங்குனவன் பக்கம் நிக்கனும்”, “உங்களுக்கெல்லாம் உங்க எதிரி யாருன்னு கூடத் தெரியல” மாதிரியான அரசியல் வசனங்கள் படம் முழுக்க இருக்கின்றன. இடைசாதியினர் செய்யும் சாதி பெயரிலான கொடுமைகளை நேர்மையாக அணுகியிருக்கிறார் இயக்குநர்.

சாதியை எதிர்ப்பவர் சொந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் என்ன ஆவார் எனும் நடப்புகால யதார்த்தத்தை எந்த ஒளிவுமறைவுமின்றி சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்பதையெல்லாம் தாண்டி சாதியால் எப்படி அனைவரும் ஒன்று சேர்கின்றனர் என சொல்லியிருக்கிறார். சொந்த சாதிக்குள் அதிகார ஆசையால் நடக்கும் துரோகம், இயலாமையால் ஏற்படும் தவிப்பு, கூனி குறுக வைக்கும் குற்றவுணர்ச்சி என பல உணர்வுகள் திரைப்படத்தில் நிறைந்திருக்கின்றன.

ராமநாதபுரத்தை அடிப்படையாகக் கொண்ட கதை நிலத்தை சரியாக இன்னும் சொல்லப்போனால் சிறப்பாக காட்சியாக கொண்டு வந்திருக்கிறது ஸ்ரீதரின் கேமரா. கிராமத்தின் வீடுகள், தெருக்களை நிஜத்துக்கு நெருக்கமாக கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். “அவ கண்ணப் பாத்தா” பாடல் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது. இரண்டாம் பாதியை பின்னணி இசையால் நிறைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். 

முதல்பாதியில் படம் நிறைவாகவே இருக்கிறது. இரண்டாம் பாதியில் காட்சியை நம்ப வைப்பதற்காக கையாளப்பட்ட லாஜிக் மீறல்கள் சிக்கலை உண்டு பண்ணுகின்றன. செய்திகளில் இடம்பெறும் அளவு முக்கியப் பிரச்னையாக மாறிப் போன கொலைக்குப் பின் காவல்துறை அருள்நிதியைத் தேட அவரோ நினைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று எதிரிகளை பந்தாடுகிறார். எதிர்க்கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்தவரை எளிதாக அடித்து துவம்சம் செய்கிறார். இணையத்தில் வைரலான சிறுவனின் வசனமான “எப்புட்றா?” என்பது காதுகளில் ஒலிக்கிறது. காவல்துறை துஷாரா விஜயன் வரை வந்து விசாரித்துவிட்டுப் போக அவரோ தலைமறைவாக இருக்கும் அருள்நிதியை விரும்பிய மாத்திரத்தில் வந்து சந்தித்துவிட்டுச் செல்வதையெல்லாம் இன்னும் நம்பும்படியாக காட்சிப்படுத்தியிருக்கலாம். எதிர்பார்க்கும்படியான காட்சிகள் படத்தின் போக்கை கணிக்க வைக்கின்றன. அருள்நிதிக்கும், சந்தோஷ் பிரதாப்புக்கும் இடையான நட்பின் ஆழம் வசனங்களில் வந்தாலும் அது எப்படி சாத்தியமானது என்பதை ரசிகர்களுக்கு அழுத்தமாக கடத்தத் தவறியிருக்கிறார் இயக்குநர்.

பேச வேண்டிய விஷயத்தைப் பேச முயற்சிப்பதே முக்கியமானது. அந்த வகையில் சாதியை, வர்க்கத்தை, பிரிவினையை மறைமுகமாகப் பேசிய தமிழ்ப் படங்களுக்கு மத்தியில் மக்களை சமமாக நடத்த வலியுறுத்தும் இம்மாதிரியான படங்கள் ஆரோக்கியமானதே. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com