
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளாக வென்ற சர்வதேச திரைப்பட விருதுகளும், அதுதொடர்பாக வெளியான செய்திகளுமே அத்திரைப்படத்திற்கான விளம்பரம்.
கூழாங்கல் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பாக அத்திரைப்படம் வென்ற சர்வதேச விருதுகளும், பரிந்துரை செய்யப்பட்ட விருதுப் பட்டியலும் திரையில் காட்டப்பட்டன. ஒரு தமிழ்த் திரைப்படம் இவ்வளவு விருதுகளை வென்றது உண்மையில் அத்திரைப்படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டியது எனலாம். இந்தியா சார்பில் ஆஸ்கார் விருது வரை பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் திரைப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது?
குடிதண்ணீருக்கே வழி இல்லாத வறண்ட கிராமத்தில் வாழ்கிறது கணபதியும், அவரது குடும்பமும். கணபதி எனும் கதாபாத்திரத்தின் வழி வரும் கருத்தடையானின் அதிகாரத்தொனியான நடையில் தொடங்குகிறது கூழாங்கல் திரைப்படம். தனது குடிகார கணவனுடன் ஏற்பட்ட பிரச்னையில் தாய் வீட்டிற்கும் செல்கிறார் மனைவி. அவரை மீண்டும் கூட்டி வர தனது மகனுடன் செல்லும் கணவனின் பயணமே கூழாங்கல் திரைப்படம்.
தனது மனைவியைத் தேடி பள்ளிச் சிறுவனான தனது மகன் வேலுவை அழைத்துக் கொண்டு நடக்கிறார் கணபதி. இருவரும் நடக்கின்றனர்...நடக்கின்றனர்...நடந்து கொண்டே இருக்கின்றனர். இந்தக் குடிகாரத் தந்தை - பொறுப்பான மகன் ஆகியோருக்கு இடையேயான பயணத்தின் இறுதியில் என்ன நடந்தது என்பதே கூழாங்கல் திரைப்படத்தின் கதை.
மிகச்சிறிய கதாபாத்திரங்கள். குடிகாரத் தந்தையாக வரும் கருத்தடையான் அடிப்படையில் ஒரு நாடகக் கலைஞர். சினிமாவை நம்பிக்கைகுரியதாக மாற்ற ஒரு நாடகக் கலைஞன் எந்தளவு அவசியம் என்பதை அவரின் நடிப்பைக் கொண்டு அளவிடலாம். அந்த அளவிற்கு யதார்த்தம் தோய்ந்த நடிப்பைக் கொடுத்து படத்தை தூக்கி சுமந்திருக்கிறார். வறண்ட நிலத்தின் மனிதனாக அவரின் நடையும், வெயிலில் கருகிய தேகமும், புகைவண்டி பீடியுமாக மனிதர் அசத்தியிருக்கிறார். தனது மனைவியைப் பார்க்க வந்து அவரது குடும்பத்திடம் சண்டையிடும் இடங்களிலும், அதற்காக பழிவாங்க வேகமாக தொடரும் அவரது பயணத்திலும் உண்மைக்கு நெருக்கமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
அவருக்கு சற்றும் சலைக்காமல் வாழ்ந்திருக்கிறார் வேலு எனும் செல்லப்பாண்டி சிறுவன். கிராமத்து அரசுப் பள்ளி மாணவனாக, குடிகாரத் தந்தைக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். தனது தாயைக் காப்பாற்ற ரூபாய் நோட்டுகளைக் கிழித்துப் போடுவதில் தொடங்கி தந்தையிடமிருந்து விலகி நடந்து அவரைத் தடுக்க அச்சிறுவன் செய்யும் சின்னச் சின்ன முயற்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். அவரின் பழிவாங்கல் காட்சிகள் குழந்தைத்தனத்துடன் கூடி ரசிக்க வைக்கின்றன. கணபதிக்கும், வேலுவிற்கும் இடையேயான அந்த உறவு எவ்வளவு பெரிய இடைவெளியுடன் இருந்தாலும் அது எப்படித் தொடர்கிறது என்பதை அழகாக திரையில் கடத்தியிருக்கிறார் இயக்குநர் வினோத் ராஜ். மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தைப் போல சக குடும்பத்தின் வாழ்க்கையை அருகில் நின்று பார்க்கும் வகையில் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் வினோத் ராஜ்.
விருதுகள் அதிகம் வென்ற வென்றிருப்பதன் மூலமே நாம் இது வழக்கமான திரைப்படத்தின் பாணியில் இருக்காது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். கமர்ஷியல் தமிழ் சினிமா, ரசிகர்களுக்கென வைத்திருக்கும் வழக்கமான பாடல்கள், தொடர்பற்ற வசனங்கள், பழிவாங்கல் கதை, தொய்வான திரைக்கதை என வழக்கமான சினிமாவின் எந்த குற்றங்களும் இத்திரைப்படத்தில் இல்லை.
படத்தின் கதாபாத்திரங்களுக்கு சவால் விடும் வகையில் இருக்கிறது அதன் நிலவியல் தேர்வு. படத்தின் உண்மையான கதாநாயகன் அந்த வறண்ட நிலம்தான்.
புழுதி நிலமும், உயர்ந்த மலைகளும், கற்கள் நிறைந்த பாதைகளும் எழுப்பும் எண்ணங்கள் ஏராளம். குடிதண்ணீருக்கு அல்லல்படும் ஒரு கிராமத்தின் தோற்றத்தையும், அதன் குடியிருப்புகளையும் இவ்வளவு நெருக்கத்தில் சமீபத்தில் எந்தத் திரைப்படமும் காட்டவில்லை. தந்தை-மகன் நடையில் அவர்களுடன் சேர்ந்து நாமும் நடப்பதைப் போன்ற உணர்வையும், ஓரமாக எங்காவது அமர்ந்து செல்லலாமா எனும் எண்ணத்தையும் ஏற்படுத்தியதிலேயே இத்திரைப்படம் வென்றிருக்கிறது. உச்சி மண்டையில் கொட்டும் சூரியனை அப்படியே திரையரங்க இருட்டில் உணர முடிந்தது. அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீடும் நமது கிராமத்தின் சாயலை மனதில் கட்டாயம் கிளறிவிடும்.
எப்படி இரு கதாபாத்திரங்களும் இறுதிவரை நடக்கிறதோ அவர்களுக்கு இணையாக நகர்ந்திருக்கிறது கேமரா. பெரும்பாலும் ஒரே தடவையில் பதிவான காட்சிகள். கேமராவின் கண்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் ஜெயபார்த்திபனும், விக்னேஷும். குடும்பத்துக் கதையை புரணி பேசும் கிராமத்து பெண்கள், பஞ்சத்தில் எலிக்கறி சாப்பிடும் குடும்பம்,பேருந்துப் பயணம் போன்ற காட்சிகள் எல்லாம் கவனிக்கப்பட வேண்டிய இடங்கள். தண்ணீர் போராட்டத்தில் மற்றுமொரு அழுத்தமான தமிழ் சினிமா கூழாங்கல்.
லைவ் சவுண்ட்ஸ் என படக்குழு பயன்படுத்தியுள்ள நேரடியாக பதிவு செய்யப்பட்ட ஒலி, படத்தை ரசிகர்களுக்கு நெருக்கமாக கொண்டு செல்ல பாடுபட்டிருக்கிறது. ஹரிபிரசாத் மற்றும் அஜய் குமாரின் பணி பாராட்டுக்குரியது.
முன்பே சொன்னதைப் போல இது வழக்கான திரைப்படத்தின் வடிவில் இல்லாதது ரசிகர்களுக்கு ஒருவித ஏமாற்றத்தைக் கொடுக்கலாம். படத்தின் குறைவான நீளத்தையும், ஆவணப்படம் போன்ற தோற்றத்தையும் பொறுத்துக் கொண்டால் இந்த நல்ல படைப்பை ரசிகர்கள் கொண்டாட முடியும். அத்தி பூத்தாற்போல வரும் இம்மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவிற்கான முக்கியமான அடையாளம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...