
நீண்ட காத்திருப்பிற்குப் பின் வெளியாகியுள்ள திரைப்படம் அந்தகன். பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. நீ….ண்ட இடைவெளிக்குப் பின் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ள நடிகர் பிரசாந்த்திற்கு இந்த படம் கம்பேக் ஆக அமைந்ததா?
பெரிய பியானோ கலைஞன் ஆக விரும்பும் கிருஷ்ணா, பியானோ பயிற்சியில் மிகத் தீவிரமாக இறங்குகிறார். இசையில் முழு கவனத்தை செலுத்தவும், பிறரின் அனுதாபம் பெறவும் பார்வையற்றவர்போல் நடிக்கிறார். இந்த பார்வையற்ற கிருஷ்ணாவின் முன்னிலையில் ஒரு கொலை அரங்கேறுகிறது. கொலையாளிகள் இவர் பார்வையற்றவர் என்பதால் இவரை விட்டுவிடுகின்றனர். உண்மை தெரிந்த, கொலைக்கு சாட்சியான கிருஷ்ணா என்ன செய்தார்? சந்தேகம்கொள்ள ஆரம்பிக்கும் கொலையாளிகள் இவரை என்ன செய்தார்கள் என்பதே அந்தகனனின் கதைக்களம்.
கதையின் நாயகனாக பிரசாந்த் நன்றாக நடித்துள்ளார். கண்தெரியாதவர்களைப் போன்ற கமெர்ஷியல் நடிப்பையும், கொலையாளிகளிடம் பயத்தைக் காட்டிக்கொள்ளாமல் நடிப்பதும், அவர்களிடமிருந்து தப்பித்தவுடன் அவரின் பயந்த நடிப்பும், நடிப்பில் அவரது கம்பேக்கை உறுதி செய்கின்றன. சிம்ரன், பிரியா ஆனந்த ஆகியோர் தேவையான நடிப்பை வழங்கி கவனம் பெறுகின்றனர். சிம்ரனின் நடிப்பு ஆங்காங்கே அதிகமாக இருந்தாலும், கதை நகர நகர அவரும் கச்சிதமான நடிப்பால் கவர்கிறார்.
யோகிபாபு, ஊர்வசி காம்போவும், கம்பீரமான போலீஸாக வரும் சமுத்திரக்கனியும் அவரது மனைவியாக வரும் வனிதா விஜய்குமார் காம்போவும் போட்டிபோட்டு திரையரங்கை குலுங்கவைக்கின்றனர். விறுவிறுப்பான கதையும், படமெங்கும் காமெடி காட்சிகளும் நீண்ட நாள்களுக்குப் பின் நல்ல திரை பொழுதுபோக்கு அனுபவத்தைத் தருகின்றன.
இசைக் கலைஞராக வலம்வரும் கதாநாயகனுக்கு ஏற்ற பாடல்களை இசையமைப்பாளர் கொடுக்கவில்லை. கதையில் இசையும் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் தனித்துவம் பெற்றதாக இல்லை. ஹீரோவின் இசைத் திறமையைப் பார்த்து பலர் பாராட்டும் காட்சிகளில் ’இந்த பாட்டுக்கு ஏன் இவ்ளோ பாராட்டு’ என எண்ணத் தோன்றுகிறது.
` முக்கியமான விஷயமாகச் சொல்லவேண்டுமெனில், இந்தியில் அந்தாதூன் திரைப்படம் பார்த்திருந்தீர்களானால் இந்த படத்தின் உண்மையான சுவாரசியம் குறைய நிறைய வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ஆரம்பம் முதல் கடைசி வரை அப்படியே அச்சு மாறாமல் எடுக்கப்பட்டுள்ளது இந்த அந்தகன். ஆனால் அந்தாதூனில் ஹீரோவை அறிமுகப்படுத்தும் விதத்திலிருந்த அழகும், ஹீரோயின் உடனான எதார்த்த அறிமுகமும், இருவருக்குமிடையே மெதுவாக உண்டாகும் நெருக்கமும் அந்தகனில் மிஸ் ஆகின்றன எனலாம். ஆனால் அது மிகப்பெரிய குறையாகத் தெரியவில்லை.
படம் தொய்வில்லாமல், தொந்தரவில்லாமல் நகர படத்தின் ஒளிப்பாதிவாளர் ரவி யாதவும் சசிக்குமாரின் படத்தொகுப்பும் உதவியுள்ளன.
படத்தில் கொலை, சண்டைக்காட்சிகள் இடம்பெற்றாலும், தற்போது வலம்வரும் முகம் சுழிக்கும் கொடூரக்காட்சிகள் எதுவும் இடம்பெறாதது பாராட்டுக்குரியது. வன்முறையை ரசித்துக்காண்பிக்கும் போக்கை தொடராததற்கு இயக்குநர் தியாராஜனுக்கு பாராட்டுகள்.
மொத்தத்தில் போரடிக்காமல், நல்ல நகைச்சுவைக் காட்சிகளுடனும், சுவாரசியமான திரைக்கதையையும் கொண்டுள்ள அந்தகன் திரைப்படத்தை கண்டிப்பாக திரையரங்குகளில் கண்டுகளிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.