பொங்கல் பந்தயத்தில் வென்றதா மெரி கிறிஸ்துமஸ்? திரைவிமர்சனம்

இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, காத்ரீனா கைஃப் ஆகியோர் நடித்து பொங்கல் வெளியீடாக வந்திருக்கும் திரைப்படம் மெரிகிறிஸ்துமஸ்.
பொங்கல் பந்தயத்தில் வென்றதா மெரி கிறிஸ்துமஸ்? திரைவிமர்சனம்

இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, காத்ரீனா கைஃப் ஆகியோர் நடித்து பொங்கல் வெளியீடாக வந்திருக்கும் திரைப்படம் மெரி  கிறிஸ்துமஸ்.

சமீப காலங்களில் சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பல திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில் நாவல் ஒன்றின் அடிப்படையில் மெரி  கிறிஸ்துமஸ் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய இரவு நடக்கும் ஒரு சம்பவத்தின் அடிப்படையில் கதை நகர்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

தனது காதலியைக் கொலை செய்துவிட்டு 7 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு மும்பை வருகிறார் ஆல்பர்ட்( விஜய்சேதுபதி). அதே மும்பை மாநகரில் தனது கணவருடனான குடும்பப் பிரச்னையில் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார் மரியா(காத்ரீனா கைஃப்). இருவரும் சந்தித்துக் கொள்ளும் சூழல் அமைகிறது. குடும்பமே இல்லாத ஆல்பர்ட்டும், குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லாத மரியாவும் ஒருவர் மீது ஒருவர் ஆசை கொள்கின்றனர். ஆல்பர்டை கிறிஸ்துமஸ் முன்னிரவு தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லும் மரியா அங்கு தனது கணவர் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். இந்தக் கொலைக்கு யார் காரணம்? ஆல்பர்டும், மரியாவும் அந்த சம்பவத்திற்குப் பிறகு என்ன ஆனார்கள்? என்பதே மேரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் கதை.

ஒரு நாவலுக்குரிய அதே காட்சி அமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது திரைக்கதை. இந்தியில் வில்லனாக ஏற்கெனவே அறிமுகமாகியிருந்தாலும் கதாநாயகனாக மெரி கிறிஸ்துமஸ் நடிகர் விஜய்சேதுபதிக்கு நல்ல வாய்ப்பு. சிறை தண்டனை பெற்றவனாக வரும் நடிகர் விஜய் சேதுபதி அதற்கான காரணத்தைத் தெரிவிக்கும் இடங்களிலும், காத்ரீனா மீது காதல் பார்வைகளை வீசும் இடங்களிலும் அசத்தல் செய்திருக்கிறார். படம் முழுக்க அவர் வெளிப்படுத்தும் நகைச்சுவை வசனங்கள் ரகளையைக் கிளப்புகின்றன. மரியாவின் கணவர் இறந்ததைக் கண்டுபிடிக்க அவர் செய்யும் காரியங்களும். அதற்கு மத்தியில் கதைக்குள் வரும் கவின் ஜெய் பாபுவின் கதாபாத்திரமும் ரசிக்கச் செய்திருக்கிறது. காத்ரீனா உடனான விஜய்சேதுபதின் காதல் காட்சிகள் ஒரு ரொமாண்டிக் படத்திற்கான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. மெழுகு சிலை போல் வந்திருக்கிறார் காத்ரீனா. தனது குழந்தையுடன் அவர் தவித்து நிற்பதில் இருந்து தன்னுடைய சிக்கலைத் தீர்க்க முயற்சிப்பது வரை பின்னியிருக்கிறார். க்ளோஸ் அப் காட்சிகளில் தமிழில் வசனம் பேசியிருப்பது தமிழ் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல். சந்தேகம் கொண்ட கணவனால் கவலைப்படும் காட்சிகளுக்கு அவரின் நடிப்பு வலுசேர்த்திருக்கிறது.

படத்தில் இவர்களுடன் நடிகர்கள் ராதிகா, சண்முக ராஜா, கவின் ஜெய் பாபு, ராஜேஷ், ராதிகா ஆப்தே, காயத்ரி என பலர் நடித்துள்ளனர். கரடி கதை சொல்லும் ராதிகாவின் இடங்கள் ரசிக்க வைக்கின்றன. குழந்தையாக நடித்திருக்கும் சிறுமியிடம் கிளைமேக்ஸ் காட்சிகளின் சூட்சமத்தை வைத்திருந்தது பாராட்டப்பட வேண்டிய காட்சி. ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு விண்டேஜ் பாணியிலான இசையால் கவர்ந்திருக்கிறார் பின்னணி இசையமைப்பாளர் டேனியல் ஜார்ஜ். பாடல்களுக்கு இசையமைத்துள்ள ப்ரீத்தமும் நியாயம் செய்திருக்கிறார்.

மெதுவாக நகரும் திரைக்கதை எப்போதும் விறுவிறுப்பைக் கூட்டாது. அதிலும் ஒரு த்ரில்லர் படங்களுக்கு திரைக்கதையின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்ப்பது சரியாகக் கையாளப்படவிட்டால் ஒட்டுமொத்த திரைப்படமும் ஏமாற்றத்தைத் தந்துவிடும். ஆனால் அதை சாதுர்யமாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். ஏற்ற இறக்கமற்ற காட்சி அமைப்புகளாக இருந்தாலும் அதை சிக்கல் இல்லாமல் புரியும்படி காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

விஜய் சேதுபதியும், காத்ரீனாவும் ஒன்று சேரும் புள்ளி, குழந்தைக்கு அரக்கன் கதை சொன்ன விஜய் சேதுபதி, படம் முழுக்க சிரிக்க வைக்கும் டார்க் காமெடிகள், ஓரிகாமி காகிதக் கலை பயன்படுத்தப்பட்ட விதம் என ரசிப்பதற்கான இடங்கள் படம் முழுக்க இருக்கின்றன. காவல்நிலையத்தில் கவின் ஜெய் பாபு குறித்து அவரது மனைவி பேசும் இடங்கள் ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்துக்குமான வசனங்கள். அதனாலேயோ என்னவோ அந்தக் காட்சிகளின்போது எல்லாம் சிரிப்பு தெறிக்கிறது.

தியாகராஜா குமாரராஜாவிற்கு வித்தியாசமாக நன்றி தெரிவித்திருக்கிறது படக்குழு. அதற்கேற்றார்போல் திரைப்படத்தில் அவரின் சாயல் நிரம்பியிருக்கிறது. சிறிய இடத்தில் நடக்கும் கதை என்றாலும் அதை காட்சிப்படுத்திய விதத்திலும், அலுப்பு ஏற்படாமல் கொண்டு சென்ற வகையிலும் ஒளிப்பதிவாளர் மதுநீலண்டனைப் பாராட்ட வேண்டும்.  

என்னதான் இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தாலும் ஆங்காங்கே சில லாஜிக் ஓட்டைகளும் இருக்கத்தான் செய்கின்றன. கொலை நடந்த இடத்தில் இரவு நேரத்தில் காத்ரீனாவை பத்திரமாக இருக்கச் சொல்லி செல்லும் காவல்துறை, இரவு முழுக்க விஜய் சேதுபதியும், காத்ரீனாவும் வீட்டை காலி செய்யும் சத்தம் யாருக்குமே கேட்காமல் இருப்பது, ஒரே மாதிரி இரு வீட்டை தயார் செய்யும் வரை காத்ரீனாவின் கணவர் என்ன செய்து கொண்டிருந்தார் எனும் கேள்விகள் எல்லாம் எழாமல் இல்லை.

ஜவானில் ஏற்கெனவே வில்லனாக தோன்றியிருந்தாலும் ஹீரோவாக நிலைநிறுத்திக் கொள்ள முயன்ற விஜய்சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் பொங்கல் பண்டிகையை ஏமாற்றாத திரைப்படம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com