பரவும் தகவல்.. நிவேதா பெத்துராஜ் விளக்கம்!

‘துபையில் வாடகை வீட்டில்தான் உள்ளேன், சென்னை கார் பந்தயம் குறித்து எதுவும் தெரியாது’
நிவேதா பெத்துராஜ்
நிவேதா பெத்துராஜ்

நடிகை நிவேதா பெத்துராஜ் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களுக்கு அவர் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுங்கட்சித் தலைவர் ஒருவர் நிவேதா பெத்துராஜுக்கு துபையில் ரூ. 50 கோடி மதிப்பில் சொகுசு பங்களா வாங்கிக் கொடுத்ததாக கடந்த சில நாள்களாக யூடியூப் சேனல்களில் செய்திகள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

நிவேதா பெத்துராஜ்
தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகல்?

நிவேதா பெத்துராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

“எனக்காக ஏராளமான பணம் செலவிடப்பட்டு வருவதாக தவறான செய்திகள் பரவி வருகின்றன. ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பதற்கு முன்னதாக, பரப்பப்படும் செய்தியின் உண்மையை மனிதாபிமானத்துடன் சரிபார்ப்பார்கள் என நினைத்து இவ்வளவு காலம் அமைதியாக இருந்தேன்.

நானும் எனது குடும்பத்தினரும் சில நாள்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம். இது போன்ற தவறான செய்திகளை பரப்புவதற்கு முன் யோசியுங்கள்.

நான் மிகவும் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவள். 16 வயதிலிருந்தே எனது பொருளாதார தேவையை நானே பூர்த்தி செய்து வருகிறேன். எனது குடும்பத்தினர் 20 ஆண்டுகளாக துபையில்தான் வசித்து வருகின்றனர்.

திரை வாழ்க்கையில்கூட, நான் இதுவரை எந்த தயாரிப்பாளரிடமோ, இயக்குநரிடமோ, நடிகர்களிடமோ பட வாய்ப்பு கேட்டதில்லை. எனக்கு கிடைத்த 20 படங்களுக்கு மேல் நான் நடித்துள்ளேன். நான் எப்போதும் வேலை அல்லது பணத்திற்காக பேராசைக் கொள்ள மாட்டேன்.

என்னைப் பற்றி இதுவரை பரப்பப்பட்ட எந்தத் தகவலும் உண்மை இல்லை என்பதை உறுதியுடன் கூறுகிறேன். 2002-ஆம் ஆண்டு முதல் துபையில் வாடகை வீட்டில் வசிக்கிறோம். மேலும், 2013-ஆம் ஆண்டு முதல் கார் பந்தயத்தில் நான் விருப்பத்துடன் பங்கேற்று வருகிறேன். சென்னையில் நடத்தப்படும் கார் பந்தயம் குறித்து எனக்கு தெரியாது.

நான் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்த பிறகு, தற்போது நல்ல இடத்தில் இருக்கிறேன். உங்கள் குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களைப் போலவே கண்ணியமான, அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்.

நான் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. ஏனெனில், பத்திரிக்கை துறையில் இன்னும் மனிதாபிமானம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என் மீது இதுபோன்ற அவதூறு பரப்ப மாட்டார்கள் என்று நம்பிக்கை உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com