மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

நடிகர் கவின் நடிப்பில் இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்டார் படத்தின் திரைவிமர்சனம்.
மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

நடிகனாக வேண்டும் என்ற கனவில் வெற்றிபெற முடியாத ஒருவர் தன் மகனை சிறுவயதிலிருந்தே ஹீரோவாக்கும் நோக்கில் வளர்க்கிறார். அந்த மகன், திரையுலக சிக்கல்கள் மற்றும் வாழ்க்கை சிக்கல்களிலிருந்து மீண்டு ஹீரோ ஆனாரா இல்லையா என்பதே ஸ்டாரின் கதை.

படத்தின் டிரெய்லர் நமக்கு ஏற்படுத்திய சுவையில் படம் நகரவில்லை என்பது ஒரு ஏமாற்றமாக இருந்தாலும் மொத்தமாக நல்ல படம் என்ற ரேங்க்கைப் பெற்றுள்ளது இயக்குநர் இளனின் ஸ்டார் திரைப்படம். 

இந்த படத்தில் பேசப்பட வேண்டிய விஷயங்களில் முக்கியமான ஒன்று நடிப்புதான். நடிப்பில் அடையாளம் தேட முயலும் கலையரசன் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள கவினுக்கு இந்த படம் ஒரு நல்ல அடையாளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆரம்பத்திலிருந்து கடைசிவரை அலட்டாத நடிப்பில் ஒரு ஹீரோவாக திரையில் பரிணமித்திருக்கிறார். எந்த படத்திலும் அவரிடம் காணாத ‘ஹீரோ கலை’ இந்த படத்தில் தெரிகிறது. உணர்ச்சிவசமான காட்சிகள் அனைத்திலும் நடிப்பில் கை தேர்ந்தவராக மாறியிருப்பதை நிரூபித்துக்கொண்டேயிருக்கிறார். கவினின் அப்பாவாக நடித்துள்ள லால் நடிப்பில் சீனியர் என்பதை படம் முழுதும் காட்டுகிறார். அம்மா கதாப்பாத்திரத்தில் வரும் கீதா கைலாசம் திரைக்கதை கேட்ட நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அழுகையோடு அவர் பேசும் வசனங்கள் நமக்கு சோகத்தை வரவழைக்கவில்லை என்றாலும், அவரது நடிப்பில் குறையில்லை. முதல் ஹீரோயினைவிட இரண்டாவது ஹீரோயின் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். எனினும் எதார்த்தமான காட்சிகளின் குறைபாடு காரணமாக அவர்களது நடிப்பு பல இடங்களில் ‘ஓவர் ஆக்ட்டிங்’ ஆகத் தெரிகிறது.

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்
சினிமா கனவுகளும் நிஜ போராட்டங்களும்: ‘ஸ்டார்‘ படம் பேசுவது என்ன?

படத்தின் டிரெய்லரைப் பார்த்து சில்லரையை சிதறவிட்ட பலருக்கு இந்த படம் ‘எதிர்பார்த்த அளவில் இல்லை’ என்ற வசனத்தை வாயில் வரவழைக்கலாம். உதாரணத்திற்கு டிரெய்லரில் நாம் கண்டு பூரித்த ‘அம்மா காசில்லமா’ போன்ற வசனங்கள் படத்தில் வரும் இடங்கள் மனதை கீறும் அளவில் இல்லை. நம்பகத்தன்மை இல்லாத காதல் காட்சிகள் ஹீரோவுக்கு முதல் ஹீரோயின் உடனான நெருக்கத்தை உணர முடியாத நிலைக்குத் தள்ளுகின்றன. இரண்டாம் ஹீரோயின் வரும் காட்சிகளும் ‘எதார்த்தம் என்றால் என்ன?’ எனக் கேட்பதால் அவரும் நம்மோடு ஒட்டாமல் தள்ளியே நிற்கிறார். எனினும் படம் சலிப்பையோ, கடுப்பையோ அளிக்காமல் நகர்வது பலம்தான். படத்தில் உள்ள கேமியோவுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.

யுவன் சங்கர் ராஜா படத்தில் வைத்துள்ள இன்ப அதிர்ச்சிக்கு அரங்கமே ஆர்ப்பரிக்கிறது. படத்தோடு பொருந்தும் இசையைக் கொடுத்து படத்தை மெருகூட்டியிருக்கிறார். எழில் அரசுவின் ஒளிப்பதிவு அனைவரையும் அழகாகக் காட்டுகிறது. 

ஒரு நடிகன் திரையை அடைய எவ்வளவு சிரமப்படுகிறான், நடிப்பைக் கற்றுக் கொள்ளும் இடங்களில் எப்படி தேருகிறான் என்பதை சுத்தமாக காண்பிக்காதது படத்தோடு ஒன்றுவதைத் தடுக்கிறது. கஷ்ட்டப்படும் கதாப்பாத்திரத்திற்காக நம்மை வருந்த வைக்கத் தவறுகிறது. கனவை நோக்கி ஓடும் இளைஞர்களுக்கு இந்த படம் ஒரு உந்துதலாக இருக்கும் என இயக்குனர் கூறியது 50% மட்டுமே உண்மை எனலாம். அந்த அளவிற்கு மோட்டிவேஷனலாகவோ, உந்துதலாகவோ திரைக்கதை அமைக்கப்படவில்லை.

படத்தின் கடைசி 15, 20 நிமிடங்கள் பிரமாதமாக படமாக்கப்பட்டுள்ளன. சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டுள்ள அந்த சீன் படக்குழுவின் பக்காவான வேலையைக் காட்டுகிறது. கவினின் நடிப்பு அந்த க்ளைமேக்ஸை தூக்கி நிறுத்துகிறது. விறுவிறுப்பாக சென்று இறுதியில் திருப்தியும் படுத்துகிறது. எதில் படத்தை ஆரம்பித்தாரோ அதிலேயே படத்தை முடித்து சூப்பரான ஐடியாவை கண்முன் நிறுத்திய இளனுக்கு பாராட்டுகள் உரித்தானது.

ஆனால் முடிவு அதிகமாக பாஸ்ட் பார்வேர்டு செய்ததுபோல் இருக்கிறது. உண்மையில் என்ன நடந்தது என்பதை நாமே நிறைய புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. இந்த சூப்பர் ஐடியாவை நல்ல திரைக்கதை எழுத்தாளர்களோடு சேர்ந்து எழுதியிருந்தால், யாரும் தொட முடியாத உயரத்தை ஸ்டார் தொட்டிருக்கும்.

கேரக்டர் ட்ரிவன் கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். மொத்தத்தில் சூப்பரான ஐடியாவையும், சிறப்பான நடிப்பையும் கொண்டு ஓக்கேவான திரைக்கதையுடன் ஸ்டார் மிளிர முயற்சிக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com