மறைந்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு!

இந்திய அளவில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர்களுள் ஸ்ரீனிவாசன் குறிப்பிடத்தக்கவராவார்.
மறைந்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி உள்பட பலர்
மறைந்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி உள்பட பலர்PTI
Updated on
2 min read

ஸ்ரீனிவாசன் மறைவு :

மறைந்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன்(69) இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை(டிச. 21) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் நலிவடைந்த ஸ்ரீனிவாசனுக்கு டையாலிசிஸ் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், வழக்கமாக அவருக்கு மேற்கொள்ளப்படும் டையாலிசிஸ் சிகிச்சை சனிக்கிழமை(டிச. 20) மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், டையாலிசிஸின் போது ஸ்ரீனிவாசன் உடல்நலம் மோசமடைந்ததாகவும், இதையடுத்து அவர் உடனடியாக அருகிலுள்ள திரிப்புனித்துரா தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

PTI

இந்திய அளவில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர்களுள் ஸ்ரீனிவாசன் குறிப்பிடத்தக்கவராவார்.

கண்ணூர் மாவட்டத்தின் தலசேரி அருகேயுள்ள பட்டியமில் கடந்த 1965-இல் பிறந்த ஸ்ரீனிவாசன், கடந்த 50 ஆண்டுகளில் 225க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பார்வையாளர்களிடம் தனி இடத்தைப் பிடித்துள்ளார். அவர் எழுதிய திரைக்கதையில் வெளியான ‘சந்தேஷம்’, ‘அழகிய ராவணன்’, ‘வரவேல்பு’, ‘நடோடிக்காற்று’, ‘தலையணை மந்திரம்’ ஆகிய திரைப்படங்கள் மலையாள ரசிர்கர்களின் நினைவிலிருந்து நீங்காதவை எனலாம்.

நகைச்சுவை கலந்து சமூக நலன் சார்ந்த கருத்துகளைக் கொண்ட அவரது திரைப்படங்கள் சமூகத்தில் சீர்திருத்தங்களுக்கும் வித்திட்டவை. ஸ்ரீனிவாசனின் வசனங்கள் பல, கேரளத்தில் இன்றளவும் ‘மீம்ஸ்’ உள்பட சமூகவலைதளப் பக்கங்களில் இணையதளவாசிகளின் பயன்பாட்டிலிருந்து நீங்காமல் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஸ்ரீனிவாசன் மறைவு மலையாள திரையுலகுக்கு பேரிழப்பாக அமைந்துவிட்டதாக அவருடன் பணியாற்றிய திரைத்துறையினர் தெரிவிக்கின்றனர். மறைந்த ஸ்ரீனிவாசனின் இரு மகன்களான வினீத் ஸ்ரீனிவாசனும், தியான் ஸ்ரீனிவாசனும் கேரள சினிமாவில் முக்கிய நடிகர்களாகவும் இயக்குநர்களாகவும் தனி முத்திரை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எர்ணாகுளம் டவுன் ஹாலில் அஞ்சலிக்காக சனிக்கிழமை(டிச. 20) பகல் வைக்கப்பட்ட அன்னாரின் உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர் மம்மூட்டி தன் மனைவி சல்ஃபத்துடன் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் மோகன்லால், திலீப், முகேஷ் உள்பட திரைத்துறை சார்ந்த இயக்குநர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலர் அங்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், மாலை 4 மணிக்குப்பின் அன்னாரது உடல் உதயம்பேரூரில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அன்னாரது இறுதிச்சடங்கு கந்தனாட்டிலுள்ள அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை(டிச. 21) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. ஸ்ரீனிவாசன் உடலுக்கு காவல்துறை வணக்கத்துடன் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தெரிவித்துள்ளது.

Summary

Sreenivasan cremation will be held at 10 a.m. on Sunday (December 21, 2025) at his residence in Kandanadu near Thripunitura.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com