

பிரபாஸின் ஸ்பிரிட் திரைப்படத்தில் பிரபல கொரியன் வில்லன் நடிகர் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃபிலிம்பேர் விருதுகளை வென்ற பிரபல தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ், திரிப்தி திம்ரி, விவேக் ஓபராய், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாகத் தயாராகி வருகிறது.
அர்ஜுன் ரெட்டி, அனிமல் உள்ளிட்ட படங்களை இயக்கிய சர்ச்சைக்குரிய இயக்குநராக அறியப்படும் சந்தீப் ரெட்டி வங்காவுடன் பிரபாஸ் இணைந்ததால் இந்தப் படம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும் உள்ளது. இதனால், இந்தப் படத்தை அடுத்தாண்டு திரைக்குக் கொண்டுவர படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
போலீஸ் தொடர்பான மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து படத்தில் டீசர் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில், இந்தப் படத்தில் முன்னணி வில்லன் வேடத்தில் பிரபல் கொரியன் வில்லன் நடிகர் டான் லீ என்றழைக்கப்படும் மா டோங்-சியோக்கை நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி காப், டெவில், கேங்ஸ்டர், ட்ரைன் டூ பூஸன், எஸ்ட்ராக்ஷன்: தைகோ ஸ்டார், தி ரௌண்ட் அப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டான் லீ இந்தியா முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரபல கொரியன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமான முகோவின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “இந்திய நடிகர் பிரபாஸின் திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் டான் லீ நடிக்கவிருப்பதாக” அறிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து திரைப்பட நிறுவனத்தின் சார்பில் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஏற்கனவே, பிரபாஸின் சலார் படத்தில் டான் லீ நடிக்கவிருப்பதாக தகவல் ஒன்று உலா வந்தது. அப்போது அவர் இன்ஸ்டா பக்கத்தில் சலார் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து, தம்ஸ் -அப் எமோஜியையும் பதிவிட்டிருந்தார். ஆனால், அவர் நடிக்கவில்லை. தற்போது ஸ்பிரிட் படத்தில் டான் லீ நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
ஸ்பிரிட் 2026 ஆம் ஆண்டில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், மாண்டரின் (சீன மொழி), ஜப்பானிய மற்றும் கொரியன் ஆகிய பல மொழிகளில் வெளியிடப்படுவுள்ளதால், பிரபாஸின் அதிக வசூலை ஈட்டிய முந்தைய படங்களான பாகுபலி, பாகுபலி-2, சலார் போன்று இந்தப் படமும் நல்ல வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.