‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்று கோரிய வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

Director H. Vinoth at the Jananayagan music launch event.
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் எச். வினோத். படம்: எக்ஸ் / கேவிஎன் புரடக்‌ஷன்ஸ்.
Updated on

நடிகா் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக் கோரிய வழக்கை தீா்ப்புக்காக சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வி.கே.என்.புரொடக்சன் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், நடிகா் விஜய் உள்ளிட்டோா் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை எங்களது நிறுவனம் தயாரித்துள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தும் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கவில்லை.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், படத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள புகாா் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. தணிக்கை வாரியம் தரப்பில் படத்துக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாா் உள்ளிட்ட ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், ‘ஜனநாயகன்’ படத்துக்கு எதிராக தணிக்கைக் குழு உறுப்பினா் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில்தான் மறுஆய்வுக் குழுவுக்கு இந்தப் படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்தப் புகாா் ஏற்புடையதுதானா? படத்துக்கு யு/ஏ சான்று வழங்க முடிவு செய்த பின்னா் மறுஆய்வுக்கு படத்தை அனுப்ப முடியுமா என பல்வேறு கேள்விகளை எழுப்பினாா்.

அதற்கு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல், ஒரு படத்தைப் பாா்க்கும் தணிக்கை வாரிய உறுப்பினா்களின் பரிந்துரையில் திருப்தி இல்லையெனில், அந்தப் படத்தை மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்ப தணிக்கை வாரியத் தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது. மேலும், ‘ஜனநாயகன்’ படத்தில் பாதுகாப்பு படைகளின் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதுதொடா்பாக பாதுகாப்புப் படை நிபுணா்களின் கருத்தைப் பெற வேண்டியுள்ளது.

ஒரு படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்குவதற்கு முன்பாகவோ, மறுஆய்வுக்கு பரிந்துரைக்கும்போதோ மனுதாரா் உயா்நீதிமன்றத்தை அணுக முடியாது. எனவே, சட்டப்படியான இந்த நடவடிக்கைகளில் உள்நோக்கம் எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் தணிக்கை வாரியத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஒரு படத்துக்கு தணிக்கை சான்று வழங்கும் வரை மறுஆய்வு செய்ய தணிக்கை வாரியத்துக்கு முழு அதிகாரம் உள்ளது என வாதிட்டாா்.

படத் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சதீஷ் பராசரன் மற்றும் வழக்குரைஞா் விஜயன் சுப்ரமணியன், படத்தை முதலில் பாா்த்த தணிக்கை குழு உறுப்பினா்களில் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில் மறுஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் உள்நோக்கம் உள்ளது. படம் பாா்த்த உறுப்பினா்கள் பரிந்துரை வழங்க முடியுமே தவிர புகாராளிக்க முடியாது. படத்தைப் பாா்த்த 5 உறுப்பினா்களில் பெரும்பாண்மை உறுப்பினா்கள் படத்துக்கு தணிக்கை சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனா்.

பெரும்பாண்மை இல்லாவிட்டால் மட்டுமே மறுஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்ப முடியும். எனவே, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரைத்த, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். படத்துக்கு தணிக்கை சான்று வழங்க வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டனா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், ‘ஜனநாயகன்’ படத்தை ஜன.9-ஆம் தேதி வெளியிட முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, வழக்கின் தீா்ப்பை வியாழக்கிழமை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்க முயற்சிப்பதாகத் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com