இந்திய அணி கேப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், எம்எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார். இயக்கம் - நீரஜ் பாண்டே. இந்தப் படம், செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது.
60 நாடுகளில், 45000 திரையரங்குகளில் வெளியான தோனி படம், முதல் நாளன்று ரூ. 21 கோடியை வசூலித்தது. பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த தாரன் ஆதர்ஷ் ட்விட்டரில் பக்கத்தில், வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் அதிக முதல் நாள் வசூல் தோனி படத்துக்குக் கிடைத்துள்ளது. 2016-ல் அதிக முதல்நாள் வசூல் கண்ட படங்களில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது என்று கூறினார்.
சனி, ஞாயிறில் தோனி படத்தின் வசூல் இன்னும் அதிகமாகியுள்ளது. சனியன்று ரூ. 20.60 கோடியும் ஞாயிறன்று ரூ. 24.10 கோடியும் வசூலித்து சாதனை செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக முதல் மூன்று நாள்களில், ரூ. 66 கோடியை வசூலித்து நூறு கோடி ரூபாய் வசூலை நோக்கி வெற்றிநடை போடுகிறது.
தோனி படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்துள்ளதால் இந்த வாரம் முழுக்க தொடர்ந்து நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.