வெளியீட்டுக்கு முன்பே லாபம் பார்த்துள்ள விமல் படம்: தயாரிப்பாளர் தகவல்!

இமயமலையே விழுந்தாலும் பரங்கிமலையே பறந்தாலும் பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாவது உறுதி... 
வெளியீட்டுக்கு முன்பே லாபம் பார்த்துள்ள விமல் படம்: தயாரிப்பாளர் தகவல்!

பூபதி பாண்டியன் இயக்கியுள்ள மன்னர் வகையறா படத்தில் விமல், ஆனந்தி, சாந்தினி தமிழரசன், ரோபோ சங்கர், பிரபு, சரண்யா போன்றோர் நடித்துள்ளார்கள். ஏ3வி சினிமாஸ் சார்பில் நடிகர் விமல் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிங்காரவேலன் பேசியதாவது: 

இந்தப் படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தபோது அந்தச் சமயத்தில் வெளியான விமலின் படங்கள் வியாபார ரீதியாக சரியாகப் போகவில்லை. ஆனாலும் கதையின் மீது இயக்குநர் பூபதி பாண்டியன் மீதும் கொண்ட நம்பிக்கையால் பொதுவாக விமலின் படங்களுக்கு ஆகும் பட்ஜெட்டைப்போல மூன்று மடங்கு இதற்குச் செலவழித்துளோம். ஆனால் இந்த நிமிடம் வெளியீட்டுக்கு முன்பே படத்தின் வியாபாரம் முடிந்து நாங்கள் படத்துக்காகச் செலவழித்த பணம் திரும்பி வந்துவிட்டது. இது ‘மன்னர் வகையறா’வுக்குக் கிடைத்த முதல் வெற்றி. 

விஷால் நடித்த மலைக்கோட்டை படத்தையே 7௦ நாட்களில் எடுத்தார் பூபதி பாண்டியன். ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 83 நாட்கள் நடந்துள்ளது. அதில் கிட்டத்தட்ட 18 நாட்களில் எடுக்கப்பட்ட காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. அந்த அளவுக்குப் படம் சரியாக வரவேண்டும் என்று கவனமாக இருந்துள்ளோம். செலவு கூடுகிறதே என வருத்தப்பட்டபோது, தனது சம்பளத்தில் பாதியை விட்டுக்கொடுத்தார் இயக்குநர் பூபதி பாண்டியன். நிச்சயம் இந்தப்படம் இன்னொரு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

விமல் இந்தப் படத்திற்காக இரண்டு வருடங்கள் வேறு எந்தப் படங்களையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தது நிச்சயம் வீண்போகாது. 2018ல் அவர் நடிப்பில் 6 படங்கள் தயாராக இருக்கின்றன. ஜனவரி-17ல் வெற்றிவேல் பட இயக்குனர் வசந்தமணி இயக்கத்தில் விமல் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

பொங்கல் சமயத்தில் இந்தப் படம் வெளியாவது உறுதி. அப்போது நிறைய படங்கள் வருகின்றதே எனச் சிலர் கேட்டார்கள். இமயமலையே விழுந்தாலும் பரங்கிமலையே பறந்தாலும் பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாவது உறுதி என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com