

ராக்கேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா தயாரிப்பில் இயக்குநர் அதுல் மஞ்ரேகர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'ஃபேன்னி கான்' படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வந்தது. ஏ தில் ஹே முஷ்கில் படத்துக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் நடிக்கும் படம் ஃபேன்னி கான். இதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் ஹீரோ அக்ஷய் ஓபராய் முதல் கோலிவுட் மற்றும் பாலிவுட் ஹீரோ மாதவன் வரை பலரை பரிசீலித்து வந்தது திரைப்படக் குழு.
இதில் ஐஸ்வர்யா ராயுடன் அனில் கபூர் நடிக்கிறார். தால் திரைப்படத்துக்குப் பிறகு பதினேழு வருடங்கள் கழித்து மீண்டும் ஐஸ்வர்யா ராய் மற்றும் அனில் கபூர் இணைகிறார்கள். ஆனால் அவர் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. இப்படத்தில் ஒரு இசைக் கலைஞராக அனில் கபூர் நடிக்கிறார்.
ஒரு இசைக் கலைஞனின் மகள் இளம் வயதிலேயே அவனைப் போல் பெரும் புகழ் அடைகிறாள். சம காலத்தில் அவளுக்குப் போட்டியாக இருக்கும் பாடகி ஒருத்தியைக் கடத்துவதும் அதன் பிறகான சம்பவங்களுமே ஃபேன்னி கானின் கதைச் சுருக்கம்.
இந்தக் கதையும் அதில் தனக்குத் தரப்பட்ட கதாபாத்திரமும் மாதவனுக்குப் பிடித்திருந்தாலும் தேதி இல்லாததால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் அதில் நடிக்க இயலாமல் போனதற்கு வருத்தமும் மாதவன் தெரிவித்திருந்தார்.
திரைப்பட உருவாக்கத்தை (Film making) பொருத்தவரையில் நடிகர்களின் தேர்வு மிகவும் முக்கியம். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதற்குக் கச்சிதமாகப் பொருந்தும் நடிகர்களால்தான் மெருகேற்ற முடியும். காஸ்டிங் என்று சொல்லப்படும் நடிக நடிகையரின் தேர்வு திறம்பட அமைந்துவிட்டால், இயக்குனரின் வேலை சுலபமாகிவிடும் என்று உறுதியாக நம்புபவர் இயக்குனர் அதுல் மஞ்சேர்க்கர். அதனால் தான் ஐஸ்வர்யா ராய்க்கு இணையான ஒரு ஹீரோ கிடைக்கும் வரை காத்திருந்தார். காத்திருப்பு வீண் போகாமல் அவர் கண்களுக்குச் சிக்கிவிட்டார் ராஜ்குமார் ராவ் என்ற இளம் நடிகர். இவர்தான் தற்போது பாலிவுட் அழகி ஐஸ்வர்யா ராயின் ஜோடியாக நடிக்கவிருக்கிறார். ராவ் தற்போது போலந்தில் ஒரு படப்பிடிப்பில் உள்ளார். அது முடிந்தததும் ஃபேன்னி கானில் தன் முழு பங்களிப்பைத் தரவுள்ளதாகக் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த 'மெல்பர்ன் திரைப்பட விழாவில்’ ட்ராப்ட் (Trapped) படத்துக்காக ராஜ்குமார் ராவுக்குச் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. அந்த விழாவில் தான் ஐஸ்வர்யா ராயை முதன் முதலில் சந்தித்தாராம் ராவ். ‘அவர் உலகத்திலேயே மிகவும் அழகான பெண். இந்தப் படத்தின் கதை எனக்கு பிடித்துவிட்டது. காதலும் சாகஸமும் கலந்து வித்தியாசமாக பின்னப்பட்ட சம்பவங்களுடன் கதை நகரும். இந்தப் படத்துக்காக நிறைய ஹோம்வொர்க் செய்ய வேண்டும், நிறைய படிக்கவும் வேண்டியிருக்கிறது. போலந்தில் ஷூட்டிங் முடிந்ததும் விரைந்து செயல்படுவேன்’ என்றார் ராஜ்குமார்.
2000-ஆம் ஆண்டு டொமினிக் டெரூடர் இயக்கிய டச்சுத் திரைப்படமான 'எவ்ரிபடி இஸ் ஃபேமஸ்' திரைப்படத்தைத் தழுவி ஃபேன்னி கான் படம் இருக்கும். இசையைக் கருவாக வைத்து எடுக்கப்படும் இப்படம் பல வியக்கத்தக்க காட்சிகளையும் திருப்பங்களையும் கொண்டிருக்கும் என்று தெரிவித்தனர் படக்குழுவினர்.
மொத்தத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ராஜ்குமார் ராவ் இவர்களின் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கப் போகிறது என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர் பாலிவுட் ரசிகர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.